கல்வி துறை மாற்றங்கள்... மலர்ச்சி தருமா, சர்ச்சை கிளப்புமா? - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Tuesday 6 June 2017

கல்வி துறை மாற்றங்கள்... மலர்ச்சி தருமா, சர்ச்சை கிளப்புமா?


"இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அறிவிப்பு ஒன்றை வெளியிடப்போகிறேன்" என்று கல்வி அமைச்சர் செங்கோட்டையன் கூறியது ஆசிரியர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதே சமயத்தில் அமைச்சர் அறிவிக்கப்போகும் விஷயங்கள் இதுதான் என்று சொல்லி வாட்ஸ் அப், ஃபேஸ்புக் ஆகிய சமூக வலைதளங்களில் வெளிவரும் சில தகவல்களுக்கு கல்வியாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது.


மானிய கோரிக்கையில் அறிவிப்பு?

தமிழக சட்டப்பேரவை வரும் 14-ம் தேதி கூட்டப்படுகிறது. அப்போது துறைவாரியாக மானியகோரிக்கைகள் குறித்து விவாதம் நடைபெறும். விவாதத்துக்கு முடிவில் துறையின் அமைச்சர் பதில் அளிப்பார். வரும் 16-ம் தேதி பள்ளிக் கல்வித்துறை மானிய கோரிக்கை மீது அமைச்சர் செங்கோட்டையன் பேச உள்ளார். இது குறித்துத்தான் அவர் முன்பே செய்தியாளர்களிடம் சொல்லி இருக்கிறார் என்று கல்வித்துறை வட்டாரத்தில் சொல்கின்றனர்.

அமைச்சர் அறிவிக்கப்போவதாக வரும் தகவல்கள் இவைதான்;

(1)பள்ளிகளில் நியமிக்கப்படும் பகுதி நேர ஆசிரியர்கள் இனிமேல் அவர்களின் சொந்தமாவட்டத்தில் பணிமாறுதல் செய்யப்படுவார்கள்.
(2) மாணவர்களிடையே விளையாட்டை ஊக்கப்படுத்தும் வகையில் பள்ளிகளில் காலியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் நியமிக்கப்படும். கூடுதல் பணியிடங்களும் உருவாக்கப்படும். விளையாட்டு பீரியடில் மாணவர்களை விளையாட அனுமதிக்கும்படி உத்தரவிடப்படும்.
 (3) தற்போது பள்ளிகளில் உள்ள பழைய கம்ப்யூட்டர்கள் மாற்றப்பட்டு புதிய இப்போதைய அப்டேட்டுடன் கூடிய கம்ப்யூட்டர்கள் வழங்கப்படும்.
(4) மாணவர்களுக்கு அவர்களின் ரத்த வகை, ஆதார் எண் ஆகியவை அடங்கிய ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்பட உள்ளது. மாணவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் ஸ்மார்ட் கார்டுகள் மூலமே வழங்கப்படும்.

நீட் தேர்வுக்கு பயிற்சி

(5) பாடத்திட்டங்களை மாற்றுவதற்காக பல்கலைக்கழக துணைவேந்தர்கள், இஸ்ரோ விஞ்ஞானிகள் அடங்கிய வல்லுனர்கள் குழு அமைக்கப்பட உள்ளது.
(6) மாணவர்களை நீட் தேர்வுக்கு தயார் படுத்தும் வகையில் கையேடு வழங்கப்படும்.  நீட் தேர்வு மற்றும் ஐ.ஐ.டி-களில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு எழுத பள்ளிகளில் சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படும்.
(7) மதுரை மற்றும் கோவையில் ஆசிரியர் இல்லங்கள் புதிதாக திறக்கப்பட உள்ளது.
(8)ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, பணி மாறுதல்கள் ஆன்லைன் முறையில் மேற்கொள்ளப்படும்.
(9) மாணவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான விபத்து மற்றும் மருத்துவக் காப்பீடு வழங்கப்படும்.
(10) பள்ளிகளில் தூய்மையை மேம்படுத்த தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பயனாளிகள் வகுப்புக்கு இருவர் வீதம் நியமிக்கப்பட உள்ளனர்.
(11) அரசு பள்ளி மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்படும். இதற்காக மனவளக்கலை மன்றத்தில் பயிற்சி பெற்றவர்கள் சம்பளம் இன்றி தன்னார்வலர்களாக நியமிக்கப்படுவார்கள்.
(12) அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை கம்ப்யூட்டர் பாடம் கட்டாயம் ஆக்கப்படும்.
(13) ஆசிரியர் பற்றாக்குறை உள்ள பள்ளிகளில் பி.எட் மற்றும் டெட் முடித்து காத்திருக்கும் ஆசிரியர்கள், பகுதி நேர ஆசிரியர்களாக  நியமிக்கப்படுவார்கள்.
(14) ஒரே பள்ளியில் 5 ஆண்டுகள் பணியாற்றிய ஆசிரியர்கள் மட்டும் இடமாறுதல் கவுன்சிலிங்கில் பங்கேற்க தகுதி உள்ளவர்கள்.
(15) அரசு ஊழியர்கள் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்கள் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் படிக்க வைத்தால் அவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கப்படும்.
(16) தமிழ் வழியில் படித்து பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு அரசின் சார்பில் சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படும்.
(17) அரசு பள்ளி மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டில் இருந்து மூன்று வெவ்வேறு வண்ணங்களில் புத்தகப்பை வழங்கப்படும்.
இந்த 17 அறிவிப்புகள் தவிர மொத்தம் 41 அறிவிப்புகளை வரும் 16-ம் தேதி அன்று சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதில் நீட் தேர்வு, யோகா கற்றுத்தரப்படும், அரசு ஊழியர்கள் அரசு பள்ளிகளில் பயில வேண்டும் என்பது உள்ளிட்ட சில அறிவிப்புகள் சர்ச்சைகளை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.

அனைத்து உடற்பயிற்சிகளும் தேவை

இது குறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் கேட்டோம்.

"கல்வித்துறை தொடர்பாக புதிய அறிவிப்புகள் வெளியிடப்படுவதாக பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் சில அறிவிப்புகள் சிக்கலை ஏற்படுத்தும். அரசுப் பள்ளி மாணவர்களுக்கு யோகா கற்றுத்தரப்படும் என்று கூறுவது தேவையற்றது. யோகா என்பது எந்த மருத்துவத்திலும் இது ஒன்றுதான் தீர்வு என்று கூறப்படவில்லை. அது ஒரு நம்பிக்கை. அது ஒரு பயிற்சி அவ்வளவுதான். யோகா மட்டுமின்றி அத்தனை வகையான உடற்பயிற்சிகள் கற்றுக்கொள்வதற்கும் மாணவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கவேண்டும்.

நீட் தேர்வுக்காக பயிற்சி கொடுக்கப்போகிறோம் என்கிறார்கள். நீட் தேர்வுமுறையை எதிர்ப்பதாகக் கூறியுள்ள தமிழக அரசு இப்போது பள்ளிகளில்பயிற்சி தருவதாகக் கூறுவது முரண்பாடாக இருக்கிறது. நீட் தேர்வு கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது. இப்போது மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வை அனுமதித்தால், பொறியியல் படிப்புக்கும் நீட் தேர்வு நடைமுறை வந்து விடும். தொடர்ந்து அனைத்து உயர் கல்விப் படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம் ஆக்கப்படலாம். இப்படி நடைபெறும் பட்சத்தில் 11, 12-ம் வகுப்பு தேர்வு எழுதுவதில் அர்த்தம் இல்லாமல் போய்விடும். பாடத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், நீட் பயிற்சிக்குத்தான் முக்கியத்துவம் தருவார்கள். இந்த மாதிரி விஷயங்கள் ஆபத்தானது.  அரசுப் பள்ளிகளில் சேர்த்தால் அரசு ஊழியர்களுக்கு ஊக்கப்பரிவு என்பது நல்ல விஷயம். அனைத்து பிரிவு ஊழியர்களுக்கும் இதை அமல்படுத்தவேண்டும்.
கல்வித்துறையில் சர்ச்சைக்குரிய அறிவிப்புகள் வெளியிடுவதை மறுபரிசீலனை செய்யவேண்டும். இது குறித்து நான் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உதயசந்திரனுக்கு கோரிக்கை விடுத்துள்ளேன்" என்றார்.  

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot