அரசுப் பள்ளிகளை பாதுகாத்து அனைவருக்கும் கல்வியை வழங்க செய்ய வேண்டியது என்ன?- ஜி.ராமகிருஷ்ணன் பட்டியல் - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Tuesday 20 June 2017

அரசுப் பள்ளிகளை பாதுகாத்து அனைவருக்கும் கல்வியை வழங்க செய்ய வேண்டியது என்ன?- ஜி.ராமகிருஷ்ணன் பட்டியல்


அரசுப் பள்ளிகளை பாதுகாத்து அனைவருக்கும் கல்வியை உறுதி செய்திட எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் பட்டியலிட்டுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,
''தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் 110 விதியின் கீழ் திங்கட்கிழமை பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வி குறித்துசில புதிய திட்டங்களை அறிவித்திருக்கிறார்.தமிழகத்தில் மேல்நிலை முதலாமாண்டிற்கும் பொதுத்தேர்வு, இரண்டாண்டுகளுக்கும் சேர்த்து (600 + 600) மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி, 1-ம் வகுப்பிலிருந்து மேல்நிலை இரண்டாமாண்டு வரை பாடத்திட்டங்களை சிபிஎஸ்இ அடிப்படையில் மாற்றுவது உள்ளிட்ட கல்வித்துறை ஏற்கெனவே அறிவித்துள்ள கல்வி சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கது.

கற்றலின் இனிமையை உறுதி செய்வது, கற்றலை மனத்தின் திசையில் இருந்து மாற்றி படைப்பின் பாதையில் வைப்பது, புதுமையான கற்றல் - கற்பித்தல் முறைகளை ஆசிரியர்கள் மேற்கொள்ளும் வகையில் ஆசிரியர் கையேடுகளையும், மாணவர்களுக்கான செய்முறை கையேடுகளையும் வழங்கிடுவது, இணைய வழி கற்றல் மற்றும் கற்பித்தலை ஊக்குவிக்க புதிய திட்டம், ஆசிரியர்களுக்கு பயிற்சி, புதுமைப்பள்ளி விருது, எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக் கற்றல் முறை, நாளிதழ்கள், சிறுவர் இதழ்கள் வழங்குவது, கனவு ஆசிரியர் விருது, ஒரு பகுதி பணியிடங்களை பூர்த்தி செய்திட ஆசிரியர்கள் நியமனம் உள்ளிட்ட பல திட்டங்கள் கல்வி மானியக் கோரிக்கையில் அறிவித்திருப்பது சரியான நடவடிக்கைகள்.இருப்பினும், பள்ளிக்கல்வி - உயர்கல்வி துறையில் உள்ள அடிப்படை பிரச்சினைகளுக்கு இன்னும் அரசு தீர்வு காணவில்லை. மத்திய, மாநில அரசுகளின் கொள்கையினால் தனியார் பள்ளிகள் ஊக்குவிக்கப்பட்டு அரசுப்பள்ளிகள் புறக்கணிக்கப்பட்டன.

இதனால் கடந்த பல ஆண்டுகளாக தனியார்பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து, அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து பல அரசுப்பள்ளிகள் மூடப்பட்டு விட்டன.அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் பெரும்பான்மையானோர் ஏழை, எளிய குடும்பங்களைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.தனியார் பள்ளிகள், தனியார் சுயநிதிக் கல்லூரிகளுக்கான நடப்பாண்டு கல்விக் கட்டணத்தை வெளிப்படைத் தன்மையோடு தீர்மானிக்க வேண்டும். தீர்மானிக்கப்பட்ட கல்விக் கட்டணத்திற்கு மேல் வசூல் செய்வதை கண்காணித்து தடுத்திட நடவடிக்கை எடுத்திட வேண்டும்.

அரசுப் பள்ளிகளை பாதுகாத்து அனைவருக்கும் கல்வியை உறுதி செய்திட கீழ்க்கண்ட நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.தாய்மொழி பயிற்று மொழியாக தொடர ஊக்குவித்திட வேண்டும்; ஆங்கில மொழி கற்பிக்க சிறப்பு ஏற்பாடு தேவை; அரசே மழலையர் பள்ளிகளை துவக்கிட வேண்டும் (அ) அங்கன்வாடி மையங்களை அரசுப்பள்ளிகளுடன் இணைக்க வேண்டும். இதன் மூலம் அரசுப்பள்ளிகளில் குழந்தைகள் சேருவதை உறுதிப்படுத்திட வேண்டும்.மாணவர்கள் இடை நிற்றலைத் தடுத்திட வேண்டும்; கல்வித்தரத்தை உயர்த்திட ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து ஊக்குவிக்க வேண்டும்; வகுப்பறைகள், ஆய்வுக்கூடம், கழிப்பறை உள்ளிட்ட கட்டமைப்பு வசதிகளை உறுதிப்படுத்திட வேண்டும். ஓராசிரியர் பள்ளி உள்ளிட்ட காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும்.மத்திய, மாநில அரசுகள் கல்விக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்திட வேண்டும்.

பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்திட வேண்டும். மத்திய கட்டாய இலவசக்கல்வி உரிமை சட்டத்தை தமிழகத்தில் அமலாக்கிட வேண்டும். இதற்கான நிதிவளங்களை மத்திய அரசை நிர்ப்பந்தித்து பெற வேண்டும்.மேற்கண்ட நடவடிக்கைகளை எடுத்து அரசுப்பள்ளிகளை பாதுகாத்து அனைவருக்கும் கல்வியை உறுதி செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot