கல்லூரிகளை போல் பள்ளிகளுக்கும் தன்னாட்சி அந்தஸ்து : நுழைவுத்தேர்வை சமாளிக்க 'தினமலர்' வெளியீட்டாளர் ஆலோசனை - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Monday 7 August 2017

கல்லூரிகளை போல் பள்ளிகளுக்கும் தன்னாட்சி அந்தஸ்து : நுழைவுத்தேர்வை சமாளிக்க 'தினமலர்' வெளியீட்டாளர் ஆலோசனை

தமிழக மாணவர்கள், அகில இந்திய நுழைவு தேர்வுகளை சமாளிக்கும் வகையில், பள்ளிகளுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்குமாறு, தமிழக அரசுக்கு, 'தினமலர்' நாளிதழின் வெளியீட்டாளர், ஆர்.லட்சுமிபதி ஆலோசனை தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் புதிய பாடத்திட்ட தயாரிப்புக்கு உதவும்வகையில், 'தினமலர்' நாளிதழின் வெளியீட்டாளர், ஆர்.லட்சுமிபதி, கருத்துரு ஒன்றை உருவாக்கி உள்ளார். தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையனை நேரில் சந்தித்து, புதிய பாடத்திட்ட கருத்துருவை வழங்கினார். இதுகுறித்து, பள்ளிக் கல்வி செயலர், உதயசந்திரனையும், பாடத்திட்ட கலைத்திட்டக்குழு தலைவரும், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தருமான, அனந்த கிருஷ்ணனையும் சந்தித்து, ஆலோசனை தெரிவித்தார்.

அதன் முக்கிய அம்சங்கள்:

* பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி.,யின் மேற்பார்வையில், கல்லுாரிகள் அளவில், 25 ஆண்டுகளாக தன்னாட்சி முறை சிறப்பாக உள்ளது. பள்ளிக் கல்வியிலும், தன்னாட்சி முறை கொண்டு வந்தால், கல்வி முறையை இன்னும் மேம்படுத்தலாம்

* கல்வித் தரம் உயர, கல்வி நிறுவனங்களுக்கும், அவற்றை நடத்துபவர்களுக்கும் சுதந்திரம் தர வேண்டும் என, 1986 மற்றும், 1992ம் ஆண்டு, தேசிய கல்வி கொள்கையில் வலியுறுத்தப்பட்ட உள்ளது. அதன்படி, பள்ளிகளுக்கு, தன்னாட்சி அந்தஸ்து வழங்கலாம்

* கல்லுாரிக்கு தன்னாட்சி தர, யு.ஜி.சி., சில தகுதிகளை நிர்ணயித்துள்ளது. ஒரு கல்லுாரி, குறைந்தபட்சம், 10 ஆண்டுகளாவது தொடர்ந்து இயங்க வேண்டும்; மாணவர்களின் கல்வித்தரம், ஆசிரியர்களின் கல்வித்தகுதி, ஆய்வக, நுாலக, விடுதி வசதிகள், உள்கட்டமைப்பு போன்ற தகுதிகள்நிர்ணயிக்கப்பட்டுள்ளன. அதன்படி, பள்ளிக் கல்விக்கும் விதிகள் கொண்டு வரலாம்

* தன்னாட்சிக்கு விரும்பும் பள்ளிகளின் விண்ணப்பத்தை, நிபுணர் குழு, 30 நாட்களில் பரிசீலித்து, அரசுக்கு அறிக்கை அளிக்க வேண்டும். இதன்படி, தன்னாட்சி குறித்து, அரசு முடிவு எடுக்கலாம்

* தன்னாட்சி அந்தஸ்து பெறும் பள்ளிகள், தனியாக நிர்வாக குழு, நிதிக்குழு, கல்விக்குழு, பாடத்திட்ட குழு, தேர்வு மற்றும் மதிப்பீட்டுக்குழு போன்றவற்றை உருவாக்கி கொள்ள வேண்டும்

* பள்ளிகளில், 6ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, தன்னாட்சி அந்தஸ்து வழங்கலாம். மேம்படுத்தப்பட்ட கல்வியை, ஆறாம் வகுப்புக்கு மேல் உள்ள மாணவர்களுக்கு வழங்கும் போது தான், அது பெரும் சுமையாகவோ, திறமைக்கு அப்பாற்பட்டதாகவோ இருக்காது

* பாடத்திட்ட குழுவில் இடம் பெற்றுள்ள, ஆசிரியர்கள், கல்வியாளர்கள், தொழிற்துறையினர் சேர்ந்து, அவ்வப்போது, பாடத்திட்டத்தை புதுப்பித்து கொள்ளலாம்

* தரமான பாடத்திட்டம், மாணவர்களின் செயல்திறன் பரிசோதனை, தேர்வு முறையில் மேம்பாடு போன்ற அனைத்திலும், பள்ளிகளுக்கும், அரசுக்கும் உரிய ஒத்துழைப்பு இருந்தால், சாதாரண பள்ளியையும், தரம் மிக்க பள்ளியாக மாற்றலாம்

* பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க நியமிக்கப்பட்டுள்ள,உயர்மட்டக் குழுவையே தன்னாட்சி முறைக்கான நடைமுறைகளை வகுக்கச் செய்யலாம். அதற்கான விதிகளை, இந்த ஆண்டு, டிச.,க்குள் முடித்தால், 2018 ஜன., யில் விண்ணப்பங்கள் பெறலாம். 2018, ஜூன் முதல் தன்னாட்சி வழங்கலாம்

* இந்த திட்டத்தின் மூலம், சி.பி.எஸ்.இ., மற்றும் சர்வதேச பாடத்திட்டம் மீதுள்ள மோகம் குறைந்து விடும். ஜே.இ.இ., - நீட் போன்ற நுழைவு தேர்வுகளுக்கு ஏற்ப, மாணவர்களுக்கு, நாமே பாடத்திட்டம் உருவாக்கலாம். இதன்மூலம், கல்விப்புரட்சி ஏற்பட்டு, இந்தியாவிற்கே தமிழகம் வழிகாட்டியாக மாறும்.இவ்வாறு,அந்த கருத்துருவில் கூறப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தையும் பகிரலாம்! :
* பள்ளிகளுக்கான தன்னாட்சி குறித்த கருத்துரு மற்றும் பாடத்திட்ட மாற்றம் குறித்து, கல்வியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள், தங்கள் கருத்துகளை, 'தினமலர்' வெளியீட்டாளர், ஆர்.லட்சுமிபதியுடன் பகிர்ந்து கொள்ளலாம். தங்களின் எண்ணங்கள், கருத்துகளை, rlp@dinamalar.in என்ற,'இ - மெயில்' முகவரியில் தெரிவிக்கலாம்.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot