உண்டு உறைவிடப் பள்ளிகள்: பள்ளிக் கல்வித் துறையுடன் இணைக்கப்படுமா? - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Sunday 3 September 2017

உண்டு உறைவிடப் பள்ளிகள்: பள்ளிக் கல்வித் துறையுடன் இணைக்கப்படுமா?

ஆதி திராவிட நலத் துறையின்கீழ் இயங்கும் உண்டு, உறைவிடப் பள்ளிகளை பள்ளிக் கல்வித் துறையுடன் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

இந்திய மக்கள் தொகையில் சுமார் 8 சதவீதம் பழங்குடியினர் உள்ளனர். தமிழக மக்கள் தொகையில் இது சுமார் ஒரு சதவீதம். ஆனால், எண்ணிக்கையில் இவர்கள் சுமார் எட்டு லட்சம் பேர். தமிழ்நாட்டின் வெவ்வேறு மலைகளில் வெவ்வேறு சமூக, கலாசார, பொருளாதார சூழ்நிலையில் வாழும் இம்மக்களின் எழுத்தறிவு 54 சதவீதம் மட்டுமே. இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தில் 3 கி.மீ.க்குள் தொடக்கப் பள்ளி இருக்க வேண்டும் என்றாலும் மலைப் பகுதிகளில் இது நடைமுறைப்படுத்தப்படவில்லை.
பழங்குடி மக்களும் பிழைப்புத் தேடி அவ்வப்போது சமவெளிப் பகுதிகளில் கரும்பு வெட்டுதல், மூங்கில் வெட்டும் பணி, செங்கல் சூளை என பணிகளுக்குச் செல்கின்றனர்.
அப்போது குழந்தைகளையும் அழைத்துச் செல்வார்கள். சில சமயங்களில் அவர்களை வேலைக்கும் அனுப்புகின்றனர்.

பள்ளி இடைநிற்றலும் மலைப் பகுதிகளில் அதிகம். இதனால் குழந்தைத் தொழிலாளர் முறை, குழந்தைத் திருமண முறை, கொத்தடிமை முறை, இடம்பெயர்வு போன்ற பிரச்னைகள் பெருகி வருகின்றன.
மலைப் பகுதிகளில் இக்குழந்தைகளுக்கு கல்வி வழங்க 17 மாவட்டங்களில் 314 அரசுப் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகளில் சுமார் 30,000 பேர் பயில்கின்றனர். கல்வித் துறை அதிகாரிகள் இப்பள்ளிகளைக் கண்காணிப்பதில்லை.
ஈரோடு மாவட்டத்தில் மட்டும் 5-க்கும் மேற்பட்ட ஓராசிரியர்கள் உண்டு உறைவிடப் பள்ளிகள் உள்ளன. தாளவாடி வட்டாரத்தில் உள்ள ஆசனூர் மேல்நிலைப் பள்ளியில் மொழிப் பாடங்களுக்கு 30 ஆண்டுகளாக ஆசிரியர் பணியிடங்களே உருவாக்கப்படவில்லை.
1952-ஆம் ஆண்டில் தொடக்கப் பள்ளியாக இருந்து 1988-ஆம் ஆண்டில் உயர்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்பட்டது. அப்போது, ஆங்கிலப் பாடத்துக்கான ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை. அடுத்து 1997-இல் மேல்நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்தப்படும்போது, தமிழ் பாடத்துக்காக ஆசிரியர் பணியிடம் உருவாக்கப்படாமலேயே ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலத் துறை உத்தரவிட்டுள்ளது. இதுவரை பணியிடமே உருவாக்கப்படாமல் இந்நிலை நீடிக்கிறது. பிற பாடங்களை நடத்தும் ஆசிரியர்களே இப்பாடங்களையும் நடத்துகின்றனர். மொழிப் பாடங்களுக்கு ஆசிரியர்கள் இன்றி 30 ஆண்டுகளாக இந்தப் பழங்குடி மாணவர்கள் பொதுத் தேர்வை எழுதி வருகின்றனர்.

தேசிய குழந்தைகள் பாதுகாப்பு ஆணையமும் 2010-இல் கடும் கண்டனத்தை தெரிவித்தது.ஆனாலும், இன்னும் இந்த அவலம் நீடிக்கிறது. 255 மாணவர்கள் பயிலும் இப்பள்ளியில் தற்போது மேல்நிலை வகுப்புகளுக்கு இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். நான்கு பணியிடங்கள் காலியாக உள்ளன.
பர்கூரில் 1961-இல் தொடங்கப்பட்ட பள்ளி 1981-இல் நடுநிலைப் பள்ளியாகவும், 2008-இல் உயர்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தப்படும்போது, சமூக அறிவியல் பாடத்துக்காக ஆசிரியர் பணியிடம் உருவாக்கப்படவில்லை. மேல்நிலைப் பள்ளியாகி 2 ஆண்டுகளாகியும் ஆசிரியர் நியமிக்கப்படவில்லை. 125 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் மட்டுமே உள்ளார்.

மலைப் பகுதியில் உள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள் குறிதக்த நேரத்துக்குப் பள்ளிக்கு வருவதில்லை. காலை 11 மணிக்கு பள்ளிக்கு வந்து 3 மணிக்கு வீட்டுக்கு கிளம்பும் ஆசிரியர்களே அதிகம். விடுதி காப்பாளர்கள் விடுதிகளில் தங்குவதே இல்லை.
இதுகுறித்து, ஈரோடு மாவட்ட மலைப் பகுதிகளில் கல்வி சேவை அளித்து வரும் சுடர் தொண்டு நிறுவன இயக்குநர் எஸ்.சி.நடராஜ் கூறியதாவது:
உண்டு உறைவிடப் பள்ளிகள் என இருந்தாலும் பெரும்பாலான பள்ளிகள், உண்டு செல்லும் பள்ளிகளாகவே விளங்குகின்றன. விடுதி வசதியும், அதற்கான கட்டடங்களும் ஏற்படுத்தி தரப்படவில்லை.

எனவே, குழந்தைகள் உணவை உண்டுவிட்டு தங்களது வீட்டுக்கு சீக்கிரமே திரும்புகின்றனர். இப்பள்ளிகளில் நூலகங்களோ, செய்தித்தாள்களோ இல்லை. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, குழந்தைகளின் பெற்றோர்கள் அடங்கிய ஒரு கண்காணிப்புக் குழுவை பள்ளி மேலாண்மைக் குழு எனும் பெயரில் அமைத்துள்ளது. இது ஒரு சட்டப்பூர்வ அமைப்பு. ஆனால், இதுவும் ஏட்டளவில் மட்டுமே உள்ளது.
ஒரு பெண்ணைத் தலைவராக நியமித்து, கையொப்பம் மட்டும் பெற்று தங்களது வசதிக்கேற்ப சட்டத்தை வளைக்கின்றனர்.
ஈரோடு மாவட்டம், பர்கூர் மலைப் பகுதியில் ஒசூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் 135 மாணவர்களுக்கு எட்டு ஆசிரியர்கள் உள்ளனர். ஆனால், ஒசூரிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ள பர்கூர் பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் 6 முதல் 10-ஆம் வகுப்பு வரை பயிலும் 253 மாணவர்களுக்கு நான்கு ஆசிரியர்களே உள்ளனர். ஏன் இந்த பாகுபாடு?.

பழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளிகள் அனைத்தையும் தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையுடன் இணைக்க வேண்டும். திட்ட செயலாக்கத்தையும், தொடர் கண்காணிப்பையும் பள்ளிக் கல்வித் துறை உறுதி செய்வதும் இன்றைய அவசியத் தேவையாக உள்ளது.
பழங்குடியின மக்களின் வாழ்வியலை நன்கு அறிந்த, இவர்களின் நலனில் அக்கறையுள்ள அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர்களை தேர்வு செய்து அமர்த்துதலே முதன்மையான சீர்திருத்தமாகும். விடுதிக் காப்பாளர் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர்களும் கட்டாயம் விடுதிகளில் தங்குவதை உறுதி செய்ய வேண்டும்.

இடைநிற்றலைத் தடுக்க தொடர்ந்து பள்ளிக்கு வரும் குழந்தைகளின் வங்கிக் கணக்கில் ஒரு தொகையை கல்வி ஊக்கத் தொகையாக வழங்கலாம். விடுதிகளில் மாணவர்களின் எண்ணிக்கை ஐம்பது என நிர்ணயம் செய்வதைத் தவிர்த்து பயிலும் மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் இருக்க வேண்டும்.
பழங்குடி மக்களின் கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவற்றை அவர்களது சமூகப் பொருளாதார, கலாசார வாழ்நிலையில் இருந்து மதிப்பீடு செய்து கீழ்காணும் தீர்வை நோக்கிச் செல்ல வழிவகைகள் கண்டறியப்பட வேண்டும்.
பழங்குடி மக்களின் குழந்தைகளுக்கு இலவச, சமமான, கட்டாய தரமான கல்வி உத்தரவாதம் செய்யப்பட வேண்டும். பழங்குடி பள்ளிகளில் மாணவர், ஆசிரியர் விகிதம் சமவெளிப் பகுதியில் உள்ளதுபோல் அல்லாமல் மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும்.

பழங்குடி மக்களின் குழந்தைகளுக்கு ஏற்ற கற்றல், கற்பித்தல் முறைகள் உருவாக்கப்படவேண்டும். போதுமான கட்டடங்கள், கழிப்பிட வசதி, தண்ணீர் வசதி, ஆய்வக நூலக வசதிகள் செய்து தரப்பட வேண்டும்.
பழங்குடி மக்களின் பாரம்பரிய அறிவு ஆவணப்படுத்தப்பட வேண்டும். அத்தோடு அவற்றை மலைப் பகுதியில் உள்ள பள்ளிகளில் கற்பிக்கவும் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். இயற்கையோடு இணைந்த நீண்ட நெடிய வாழ்வியல் வழிமுறையில் கண்டறியப்பட்ட குன்றா வளர்ச்சிக்கான அடிப்படையாக கூறுபாடுகளை எப்படி பிற பகுதி மக்கள் பின்பற்ற முடியும் என்பதற்கான ஆய்வுகள் வேண்டும்.
பழங்குடியினர் நலனில் அக்கறையுள்ள கல்வியாளர்கள், மனித உரிமை செயல்பாட்டாளர்கள், தன்னார்வ அமைப்புகள், மக்கள் அமைப்புகள் ஆகியோரைக் கொண்ட மாநில அளவிலான ஒரு பொது மேடையை பழங்குடியினர் கல்வி உரிமை கூட்டமைப்பு எனும் பெயரில் ஏற்படுத்த வேண்டும் என்றார்.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot