7th pay - மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை. - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Thursday 12 October 2017

7th pay - மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிக்கை.

மத்திய அரசின் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளின் திருத்திய ஊதிய விகிதம், படிகள், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியப் பலன்கள் தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்ற பரிந்துரையின் அடிப்படையில்,
11.10.2017 அன்று தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. மத்திய அரசின் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை உடனே உரிய காலவரையறைக்குள் அமல்படுத்துவதை ‘குதிரை பேர’ அரசு, ‘அலுவலக கமிட்டி’ என்ற ஒன்றை நியமித்து வேண்டுமென்றே காலதாமதம் செய்து வந்தது.



குறிப்பாக, கடந்த பிப்ரவரி மாதத்தில் துவங்கி நான்கு மாதகால அவகாசமும், பிறகு ஜூன் மாதத்தில் மேலும் மூன்று மாதகால அவகாசமும் அந்தக் கமிட்டிக்கு அனுமதி கொடுத்து, ஊதியக்குழு பரிந்துரைகளை உடனே அமல்படுத்தக்கூடாது என்ற இயலாமை உணர்வில் முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமியின் ‘குதிரை பேர’ அரசு திட்டமிட்டுத் தாமதம் செய்துவந்தது. இந்தநிலையில் தான், அரசு ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி, கோட்டை நோக்கிய பேரணி நடத்தி, இறுதியில் காலவரையற்ற போராட்டத்தை கையிலெடுத்துப் போராட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார்கள். இந்தப் போராட்டத்தின் உச்சகட்டமாக அரசு ஊழியர்கள் மீது அடக்குமுறைகளை ஏவி, காவல்துறை மூலம் தடியடி நடத்தி கைது செய்து, மாநில அரசு நிர்வாகத்தை ஸ்தம்பிக்க வைத்து, நிலைகுலையச் செய்தது ‘குதிரை பேர’ அரசு.



*சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, அரசு ஊழியர்களின் கோரிக்கைகளில் உள்ள நியாயத்தை உணர்ந்து, தலைமைச் செயலாளரையே நேரில் ஆஜராக வைத்து, ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்துவது குறித்த உத்திரவாதம் பெற்றதை யாரும் எளிதில் மறந்துவிட முடியாது. அதுமட்டுமின்றி, “அக்டோபர் 13 ஆம் தேதிக்குள் ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை தமிழக அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்த வேண்டும்”, என்று காலநிர்ணயம் செய்து, தலைமைச் செயலாளருக்கு ஆணையிட்டு அரசு ஊழியர்கள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது உயர்நீதிமன்றம்.*



இப்போது தமிழக அரசு ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்டுள்ளது என்றால், காலத்தே வழங்கப்பட்ட  உயர்நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்பு மிகுந்த தீர்ப்புதான் அதற்குக் காரணமே தவிர, ‘குதிரை பேர’ முதலமைச்சர் எடப்பாடி திரு. பழனிசாமியின் ஆர்வமோ அக்கறையோ அல்ல என்ற உண்மை அரசு ஊழியர்கள் அனைவருக்கும் மிக நன்றாகவே தெரியும்.



*“உயர்நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் செயல்வடிவம் பெற்றுள்ள ஊதியக்குழு பரிந்துரைகளில் முரண்பாடுகள் இருக்கின்றன”, என்று ஏற்கனவே அரசு ஊழியர்கள் தரப்பிலிருந்து முதல்நிலைக் கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. 21 மாதங்களுக்கான ஊதிய நிலுவைத்தொகை இல்லை, மத்திய அரசு அறிவித்துள்ள குறைந்தபட்ச ஊதியமான 21 ஆயிரம் ரூபாய் மாநில அரசு ஊழியர்களுக்கு நிர்ணயிக்கப்படவில்லை, வீட்டு வாடகைப்படி மற்றும் மருத்துவப்படிகளில் ஏமாற்றம், அனைத்து அரசு ஊழியர்களுக்கும் பாகுபாடின்றி 30 சதவீத சம்பள உயர்வு இல்லை என்பது போன்ற பல்வேறு குறைகளும் குமுறல்களும் இன்னும் அரசு ஊழியர்கள் மத்தியில் நிலவுகின்றன. இதுதவிர, “புதிய ஓய்வூதியத்தை ரத்து செய்துவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும்”, என்ற அரசு ஊழியர்களின் நீண்டகாலக் கோரிக்கைப் பற்றிப் பரிசீலிக்க நியமிக்கப்பட்ட கமிட்டி இன்னும் தன் அறிக்கையை கொடுக்காமல் தாமதிப்பது வேதனைக்குரியது.*



ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை ஏற்கும் நேரத்தில், அந்த ஓய்வூதியத் திட்டம் பற்றிய குழப்பத்திற்கும் தீர்வு கண்டிருக்க வேண்டிய முதலமைச்சர், “எனது முடிவுகள்”, “நான் ஆணையிட்டுள்ளேன்”, என்று மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவைப் போல, தன்னைத் தானே கற்பனை செய்துகொண்டு, உயர்நீதிமன்ற உத்தரவை முற்றிலும் மறைத்து, சுயதம்பட்டம் அடித்துக் கொண்டு வெளியிட்டுள்ள, 11.10.2017 தேதியிட்ட அரசு செய்திக்குறிப்பில் கூட, புதிய ஓய்வூதியத் திட்டம் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை. அந்தக் கமிட்டி என்றைக்கு அறிக்கை கொடுக்கும்? அதுபற்றிய தீர்வு எப்போது வரும்? போன்ற கேள்விகளுக்கான பதில், இந்த அரசு போலவே அந்தக் கோரிக்கையும் அந்தரத்தில் ‘தொங்கி’க் கொண்டிருக்கிறது.



இந்தப் பரிந்துரைகளை ஏற்கும் அறிவிப்பில், ‘பணியாளர் சீரமைப்புக்குழு’, ஒன்று அமைக்கப்படுவதாகக் கூறியுள்ளது அரசு. ஏற்கனவே பல்லாயிரக் கணக்கான அரசுப் பணியிடங்களை நிரப்பிட எவ்வித முயற்சியும் மேற்கொள்ளாத நிலையில், நிரந்தர அரசு ஊழியர்கள் எண்ணிக்கையையும் திட்டமிட்டு குறைக்கும் உள்நோக்கம் அரசுக்கு இருக்கிறதோ என்ற சந்தேகம் இதன் மூலம் எழுகிறது.



ஆகவே, அரசு ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை உணர்ந்து, ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்துவதற்கு உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை அமர்வின் மாண்புமிகு நீதியரசர்களுக்கு இந்தநேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அரசு செய்யத் தவறியதை உயர்நீதிமன்றமே தலையிட்டு நடவடிக்கை எடுத்து, அரசு ஊழியர்கள் போராட்டத்திற்கு ஒரு சுமூகமான தீர்வு கண்டிருப்பது, நீதித்துறையின் மீதான நம்பிக்கையை ஒவ்வொரு குடிமகனின் உள்ளத்திலும் உயர்த்திப் பிடித்திருக்கிறது என்பதை இந்தநேரத்தில் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot