மாற்றியமைக்கப்படும் பாடத்திட்டம்!அமலுக்கு வரும் கல்வியாளர்கள் கோரிக்கை! - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Friday 23 June 2017

மாற்றியமைக்கப்படும் பாடத்திட்டம்!அமலுக்கு வரும் கல்வியாளர்கள் கோரிக்கை!


தமிழகத்தில் அடுத்த கல்வியாண்டு 2018-19 முதல் 1,6,9 மற்றும் 11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் கொண்டுவர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதற்கடுத்த ஆண்டில் 2,7,10 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்கும், 2020-2021 கல்வியாண்டில் 3,4,5 மற்றும் 8 ஆகிய வகுப்புகளுக்கும் பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும்.


முன்னதாக, ஏழு ஆண்டுகளுக்கு முன்பு ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான பாடத்திட்டம் மாற்றியமைக்கப்பட்டது. மேல்நிலை வகுப்புகளுக்கான பாடத்திட்டத்தில் 12 ஆண்டுகளுக்கு முன்பு மாற்றம் செய்யப்பட்டது. இப்போது உலக அளவில் அறிவியல் சமூக, பொருளாதாரத் துறைகளில் ஏற்படும் வளர்ச்சியையும் மாற்றங்களையும் கணக்கில்கொண்டு, அதற்கேற்ப பாடத்திட்டத்தை மாற்றியமைக்கவேண்டும் என கல்வியாளர்கள் வலியுறுத்தினர். அது மட்டுமின்றி ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணிகளுக்கான அகில இந்திய போட்டித் தேர்வுகளில் தமிழக மாணவர்கள் வெற்றிபெறும்வகையில் அவர்களைத் தயார்செய்யவேண்டிய தேவையும் எழுந்தது. இது குறித்து அரசுக்கு கல்வியாளர்களும் ஆசிரியர்கள் தரப்பிலும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.

அதையடுத்து பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் வல்லுநர் குழுவும் அதன் கருத்துப்படி மூன்று உட்குழுக்களும் அமைக்கப்பட்டு, ஆலோசனை பெறப்பட்டது. கடந்த மாதம் 11-ம் தேதி பள்ளிக்கல்வி அமைச்சரின் தலைமையில் வல்லுநர் குழுக் கூட்டம் நடைபெற்றது. அதில்தான் இந்தப் பாடத்திட்ட மாற்றம் குறித்து மூன்று முடிவுகள் எடுக்கப்பட்டன.

ஒன்று, ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரையிலான பாடத் திட்டம் மாற்றம் பற்றியது. இரண்டாவதாக, மேல்நிலைக் கல்வியில் கற்பிக்கப்படும் தொழிற்கல்வியை மாற்றும் திட்டம். மூன்றாவதாக, தகவல்தொழில்நுட்பவியல் பாடத்தைச் சேர்ப்பது.
தற்போது தகவல்தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புவரை, கணினி பற்றியோ தகவல் தொழில்நுட்பவியல் பற்றியோ பாடம் சேர்க்கப்படாத நிலையே நீடிக்கிறது. அதனால் உயர்நிலையின் ஐந்து வகுப்புகளிலும் அறிவியல் பாடத்தின் ஒரு பகுதியாக தகவல் தொழில்நுட்பவியல் பாடம் சேர்க்க முடிவுசெய்யப்பட்டுள்ளது.

தொழில்கல்வியைப் பொறுத்தவரை, தமிழகத்தில் 12 வகையான பாடங்கள் கற்பிக்கப்பட்டுவருகின்றன. இந்தப் பாடத்திட்டமானது எட்டு ஆண்டுகளுக்கு முன்னர் வடிவமைக்கப்பட்டன. அதனால், இப்போது அதிவேகமாக நடந்துவரும் தொழில்வளர்ச்சிக்கு ஏற்றபடி பாடத்திட்டத்தை மாற்றியமைக்க அரசு தீர்மானித்துள்ளது. இது மட்டுமில்லாமல் தொழிற்கல்வி மாணவர்கள், சம்பந்தப்பட்ட தொழில்நிறுவனங்களில் நேரடிப் பயிற்சி பெறும்படியாகவும் புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட உள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் வேளாண் பல்கலைக்கழகம் போன்ற தொழில்சார் பல்கலைக்கழகங்களின் உதவியோடு, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமானது, தொழிற்கல்விப் பாடத்திட்டத்தில் மாற்றத்தைச் செய்யும்.

மற்ற பாடத்திட்டக் குழுக்களைப் போல அல்லாமல், தமிழக நிலைமைக்கு ஏற்ற தொழிற்கல்வி எது எனத் தீர்மானிக்க, தனியான ஒரு வல்லுநர் குழு அமைக்கப்படும். இதில் தற்போது கற்பிக்கப்படும் 12 வகைப் பாடங்களை மாற்றியமைப்பதா அல்லது புதிய பாடங்களை அமைப்பதா என அக்குழு அலசி ஆராயும். அதன்படி முதலில் அடுத்த கல்வியாண்டு (2018-19) முதல் ஐந்து பாடங்களுக்கு புதிய பாடநூல்கள் தயாரித்து வழங்கப்படும். மீதமுள்ள வகையினங்களுக்கு அடுத்தடுத்த கல்வியாண்டுகளில் புதிய பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்பட்டு வழங்கப்படும்.

மேலும், இணையவழிக் கல்வியை ஊக்குவிக்கும்வகையில் விரிவான கல்வி மேலாண்மைத் தளத்தை உருவாக்கவும் ஆசிரியர்களும் மாணவர்களும் எளிதாகப் பயன்படுத்தக்கூடிய செயலிகளை உருவாக்கவும் பள்ளிக்கல்வித் துறை முடிவுசெய்துள்ளது. இதற்கான தேவைகளைப் பற்றி அரசுக்கு கருத்துரு அனுப்பவும், ஆறு மாதங்களில் பாடத்திட்டத்தை மாற்றும் பணியை முடிக்கவும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்குநருக்கு, பள்ளிக்கல்வித் துறையின் செயலாளர் த. உதயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot