’பசுமை பத்தாயிரம்!’ அரசுப் பள்ளி ஆசிரியையின் இயற்கை இலக்கு - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Tuesday 6 June 2017

’பசுமை பத்தாயிரம்!’ அரசுப் பள்ளி ஆசிரியையின் இயற்கை இலக்கு


உலக சுற்றுச்சூழல் தினத்தை முழு அர்த்தத்துடன் கொண்டாடியிருக்கிறது கரூர் மாவட்டத்திலுள்ள ஓர் அரசுப் பள்ளி. மாணவர்கள் படிப்பதற்கு புத்தகங்களும், கற்பிக்க ஆசிரியர்களும் அவசியம்.
வகுப்பறை பசுமையான சூழலில் குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்தால் மாணவர்களுக்கு படிப்பின்மீது இன்னும் நாட்டம் வரும். அதைச் செய்வதற்கான முயற்சியைத் தொடங்கியுள்ளார் ஆசிரியை உமா.

கரூர் மாவட்டம் தாந்தோனிமலை ஒன்றியத்தின் மணவாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார் உமா. மாணவர்களுக்கு பாடங்களோடு இயற்கையைப் பாதுகாக்க வேண்டியதைக் கற்பிக்கிறார். இவரின் செயல்பாடுகள் பற்றிய செய்தி அந்த மாவட்ட ஆட்சியர் வரை எட்டியிருக்கிறது.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில், தம் பள்ளி மாணவர்களோடு கலந்துகொண்டார் உமா. உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு ஆயிரம் மரக்கன்றுகளைத் தரும் திட்டத்தைத் தொடங்கி வைக்குமாறு ஆட்சியர் சூர்யபிரகாஷிடம் கேட்டிருக்கிறார். அவரின் வேண்டுகோளை நிறைவேற்றியதோடு மணவாடி பள்ளிக்கும் வந்திருக்கிறார் மாவட்ட ஆட்சியர். ஆயிரம் மரக்கன்றுகளை மாணவர்களுக்கும் பெற்றோர்களும் அளித்தார்.

"மணவாடி பள்ளியின் இந்தச் செயல் மனம் திறந்து பாராட்ட படவேண்டிய ஒன்று. நமது இயற்கை வளங்களைப் பாதுகாக்கும் அவசியத்தை அடுத்த தலைமுறையினரிடம் சொல்வதும், சரியாக வழிகாட்டவதுமே ஆரோக்கியமானது. இந்தப் பள்ளியை மற்ற பள்ளிகளும் முன்னுதாரணமாக கொண்டு இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும்" என்று மாணவர்களை மட்டுமல்ல பள்ளி ஆசிரியர்களையும் உற்சாகப்படுத்தியிருக்கிறார் சூர்யபிரகாஷ்.

தன் பசுமைப் பயணத்தைத் தொடங்கியுள்ள ஆசிரியை உமாவிடம் பேசினோம்.

"நம்முடைய சூழலையும் புரிந்துகொண்டால்தான் கல்வி முழுமைப்பெறும் இல்லையா. அதனால், எங்கள் தலைமை ஆசிரியரின் வழிகாட்டலில் சென்ற வருடம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மன்றம் தொடங்கினோம். வெறும் பேச்சுகளாக மட்டுமே எங்களின் பணிகள் முடிந்துவிடக் கூடாது என, புகையிலை தினம், தண்ணீர் தினம்... போன்ற சிறப்புத் தினங்களின்போது கிராம மக்களிடம் சென்று விழிப்புஉணர்வு பரப்புரை செய்தோம். அப்போது, கிராமத்து மக்கள் சொல்லும் செய்திகளையும் குறித்துக்கொண்டோம். அந்த விஷயங்களை எங்கள் வகுப்பறைகளில் விவாதித்தோம். இது எங்கள் மாணவர்களுக்கு புதிய அனுபவத்தைத் தந்தது. சென்ற வருடம் முழுவதும் தொடர்ந்து இதுபோன்ற செயல்பாடுகளைச் செய்தோம்.

அதன் தொடர்ச்சியாக பெரிய அளவில் ஏதேனும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. எங்கள் பள்ளி அமைந்திருக்கும் கிராமம் மற்றும் சுற்றியுள்ள கிராமத்தில் மரக்கன்றுகளை நடுவது என முடிவுசெய்தோம். இதற்கு கிராம மக்களும் முழுமையான ஆதரவு தருவதாக கூறினர். பத்தாயிரம் மரக்கன்றுகளை நட வேண்டும் என எங்களுக்குள் ஓர் இலக்கைத் தீர்மானித்திருக்கிறோம். அதன் முதல் படியாக உலக சுற்றுச்சுழல் தினத்தில் ஆயிரம் மரக்கன்றுகளை கிராம மக்களுக்கு தந்தோம்.

இந்தப் பகுதி செழிப்பானது இல்லை. மழை பெய்தால் பார்ப்பதற்கு ரொம்ப அழகாக இருக்கும். அப்படியெனில் மழையைப் பொழிய வைக்கும் மரங்களை வளர்த்தால் எப்போதுமே எங்கள் பகுதி அழகாகவும் பசுமையாக இருக்கும் என்பதால் இந்தத் திட்டத்தைத் தொடங்கியுள்ளோம்.

மாவட்ட அளவில் சுற்றுச்சூழலைப் பேணும் சிறந்த பள்ளி எனப் பாராட்டி மாவட்ட ஆட்சியர் வழங்கிய சான்றிதழ் எங்களுக்கு பெரிய உற்சாகத்தைத் தந்துள்ளது. நிச்சயம் எங்களின் இலக்கை எட்டுவோம். இந்தப் பகுதியை பசுமையாக்குவோம்" என்று நம்பிக்கையோடு முடித்தார் உமா.

இயற்கையைக் காக்க புறப்பட்ட அரசுப் பள்ளியின் பயணம் வெல்லட்டும்.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot