பணிநிரந்தரம் பகுதிநேர ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Sunday 11 June 2017

பணிநிரந்தரம் பகுதிநேர ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

தமிழக அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்து சிறப்பாசிரியர்களாக நியமிக்க அரசு முன்வர வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு ஈடாக அரசுப் பள்ளிகளை தரம் வாய்ந்ததாக உருவாக்கிட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
அரசுப் பள்ளிகளில் முழுநேரமாகப் பணியாற்றி வரும் பகுதிநேர ஆசிரியர்களை, சிறப்பாசிரியர்களாக மாற்றி பயன்படுத்தலாம் என்று கல்வியாளர்களால் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம், 2012-இல் 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்கள் உடற்கல்வி, ஓவியம், கணினி, தோட்டக்கலை, இசை, தையல், வாழ்வியல் திறன், கட்டடக் கலை போன்ற பாடங்களுக்காக நியமிக்கப்பட்டனர்.

இவர்கள் இடைநிலை வகுப்பு மாணவர்களுக்கு போதிக்க ஒப்பந்த அடிப்படையில், ரூ.5,000 தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர். வாரத்துக்கு 3 அரை நாள்கள் வீதமும், மாதத்துக்கு 12 அரை நாள்கள் வீதம் பணியாற்ற அறிவுறுத்தப்பட்டனர்.
இவர்களுக்கு 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ரூ.2,000 ஊதியம் உயர்த்தப்பட்டு ரூ.7,000 வழங்கப்பட்டு வருகிறது.
கடந்த 5 ஆண்டுகளில் ஒருமுறை மட்டுமே வழங்கப்பட்ட ஊதிய உயர்வு குறைவானதாகும். டாஸ்மாக், ஊரக வளர்ச்சி உள்ளிட்ட பிற துறை தொகுப்பூதியர்களுக்கு ஆண்டுதோறும் ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இதைப்போல, பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதுடன், காலிப் பணியிடங்களை நிரப்பும் விதத்தில், சிறப்பாசிரியர்களாகப் பதவி உயர்வு வழங்கி பயன்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்புள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது:
பகுதிநேர ஆசிரியர்கள், தற்போது 15 ஆயிரத்து 109 பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பலர் பி.எட்., பட்டதாரிகள். இவர்களை பள்ளிகளில் முழு நேர ஆசிரியர்களாகவே பயன்படுத்தி வருகின்றனர்.
2015, 2016-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிரியர் சங்கங்களின் (ஜாக்டோ) போராட்டங்களின்போது, அரசு உத்தரவுப்படி பகுதிநேர ஆசிரியர்களைக் கொண்டு பள்ளிகள் செயல்பட்டன.

பள்ளிகளில் நிர்வாகப் பணிக்காக கணினியைப் பயன்படுத்துவது, கல்வி அலுவலக தினசரி இணையதள தகவல்களை பெற்று, கணினி மூலம் பதில் அனுப்புவது, சம்பளப் பட்டியல், வருகைப் பதிவு போன்ற பணிகளையும் இவர்கள் மூலமாகவே தலைமையாசிரியர்கள் மேற்கொள்கின்றனர்.
ஆசிரியர்கள் தேர்வுப் பணிக்குச் சென்றுவிட்டால், தேர்வு நேரங்களில் பல பள்ளிகளில் பகுதிநேர ஆசிரியர்களே பள்ளியைத் திறந்து, பணிகளை மேற்கொண்டனர். குறிப்பாக, ஆசிரியரல்லாத காலியிடங்களில், முழுநேர பாடங்களையும் பகுதிநேர ஆசிரியர்களே நடத்துகின்றனர்.
ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக போதிய ஊதிய உயர்வின்றி, அதேநிலையில் பகுதிநேர ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். கோவா மாநிலத்தில் பகுதி நேர ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரமும், ஹரியாணா, கர்நாடக மாநிலங்களில் ரூ.10 ஆயிரமும் வழங்கப்படுகிறது. கேரளத்தில் இரண்டு பள்ளிகளில் வேலை வழங்கப்பட்டு, கூடுதல் தொகுப்பூதியமும் வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்களுக்கான அரசாணைப்படி, 4 பள்ளிகளில் பணிபுரிய ஒருவருக்குக் கூட வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. அவ்வாறு வழங்கப்பட்டிருந்தால் தொகுப்பூதியம் கூடுதலாக கிடைத்திருக்கும்.
ஊதியம் உயர்த்தப்படாமல், சலுகைகளும் கிடைக்காமல் 5 ஆண்டுகளாக பகுதிநேர பணியில் தவிக்கும் எங்களை சிறப்பாசிரியர்களாக பணியமர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் தொகுப்பூதியத்தில் பணியாற்றிய ஆசிரியர் பயிற்றுநர்களை, பணி நிரந்தரம் செய்தது போல, அனைத்து பகுதிநேர ஆசிரியர்களை சிறப்பாசிரியர்களாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 1,380 பகுதிநேர ஆசிரியர் காலிப்பணியிடங்களையும் நிரப்ப வேண்டும் என்றார் அவர்.
வருகிற 15-ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கையின் போது தங்களுக்கு சாதகமான அறிவிப்பு வரும்? என்ற எதிர்பார்ப்பில் பகுதி நேர சிறப்பாசிரியர்கள் உள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot