#ஆங்கிலவழிக்_கல்வி_வழக்கும்! #அரசுப்பள்ளிக்கு_நேர்ந்த_இழுக்கும்! செல்வ.ரஞ்சித்குமார் - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Thursday 29 June 2017

#ஆங்கிலவழிக்_கல்வி_வழக்கும்! #அரசுப்பள்ளிக்கு_நேர்ந்த_இழுக்கும்! செல்வ.ரஞ்சித்குமார்

அரசு உதவிபெறும் பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி தொடங்கக் கோரிய வழக்கில் உயர் வழக்காடு மன்றத் தீர்ப்பாளர், வாதியின் வாதத்தின் படி அரசுப் பள்ளிகள் & ஆசிரியர்கள் மீது எதிர்மறைக் கேள்விக் எழுப்பியிருந்தார்.


வாதப் பிரதிவாதங்களின் அடிப்படையில் மட்டுமே வழக்கின் கேள்விகளும்,
தீர்ப்புகளும் எழுதப்படும் என்ற நிதர்சனத்தை முதலில் நாம் புரிந்த கொள்ள வேண்டும். ஏனெனில் ஒருவன் கொலைகாரனே ஆனாலும் சாட்சியம் இல்லை எனில் அவன் குற்றமற்றவனாகவே தீர்க்கப்படுவான். இதனை நீதியளித்ததாக நினைப்பது நமது பிழை. இது தீர்ப்பளிப்பு மட்டுமே.

எனவே, சாட்சியங்களைத் தாண்டி & தவிர்த்து சமுதாய நலனையோ, உண்மையான நீதியையோ தீர்ப்பளிப்பவரே நினைத்தாலும் வழங்க இயலாது என்பதே நமது அமைப்பு முறை.

எனினும், சாட்சியத்தின் படியான தீர்ப்பாளரின் தீர்ப்பு பெற்றுத்தராத நீதியை, உண்மை உணர்ந்து உரிமைக்காக உரத்து குரலெழுப்பும் மக்கள் போராட்டங்கள் பெற்றுத் தந்துள்ளன. இதனடிப்படையில் தீர்ப்பாளரின் கேள்விகளுக்கு அரசின் பதில் எதுவானாலும் அதன் உண்மை நிலையை உணர வேண்டியதும், உணர்த்த வேண்டியதும் கேள்விப் பொருளாக்கப்பட்டுள்ள ஆசிரியர்களின் கடமை என்பதாலேயே இப்பதிவு.

ஆசிரியரின் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதை எதன் அடிப்படையில் கட்டாயமாக்க இயலும்? அனைவருக்கும் கட்டாய இலவசக் கல்வியை 14 வயது வரை வழங்க வேண்டுமெனக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ல் கொண்டு வந்த பின்னும் 8 வகுப்பு வரை தனியார் பள்ளிகளில் 100% இலவசக் கல்வியையோ / 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் அரசுடைமை என்பதையோ உறுதி செய்ய இயலாத நிலையில் அரசும், சட்டப்படியான உரிமையை உறுதிப்படுத்த வேண்டிய வழக்காடு மன்றங்களும் இருக்கையில், குறிப்பிட்ட ஒரு பிரிவினர் மட்டும் அரசுப் பள்ளியில் கட்டாயம் சேர்த்தே ஆகவேண்டும் என்பது எவ்வகையில் சாத்தியமாகும். இப்படியொரு முடிவைக் கல்விக் கூடங்களின் முதலாளிகளான அரசியல்வியாதிகளோ அவர்தம் அன்பர்களோ எடுக்க முன்வருவார்களோ?

கல்வித் தந்தையர்களான கார்ப்ரேட் அரசியல்வியாதி முதல் அப்துல்கலாம் வரை தனியார் பள்ளிகளை மட்டுமே தூக்கிப் பிடிப்பதாலும், உயர் சமூகமாகத் தங்களையும் காட்டிக் கொள்ள வேண்டும் என்ற சுய கட்டாயத்தினாலும், அரசுப் பள்ளியில் மதி மட்டுமே வெளிப்படும் என்பதாலும், மனனம் செய்து மதிப்பெண் வாங்கும் மதியீனத்தை மாணவன் பெற்றால் மட்டுமே உயர்கல்வி சாத்தியம் என்பதாலுமே அரசுப் பள்ளிகளில் சேர்க்காமல் பெற்றோர்கள் தனியார் பள்ளியில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்கிறார்கள்.

கல்வியில் கிராமப்புற மாணவர்கள் புறக்கணிக்கப்பட்டால் நாட்டின் வளர்ச்சி சமமாக இருக்காது என கவலையுறுவோர் கிராமப்புற மாணவர்களைப் புறக்கணிக்கும் நீட் தேர்வைத் தானே முந்து உடனே தடை செய்திருக்க வேண்டியது தானே. ஆனால், ஊருக்கொரு வினாத்தாள் வடிவமைத்து ஓட்டைச் சல்லடையில் வடிகட்டிய வழக்கில், வடிகட்டியது சிறப்பென முடித்து வைக்கப்பட்டதையும் தீர்ப்பாளர் இதே பார்வையோடு பார்த்து கேள்வி எழுப்பியிருப்பின் நீதியாக இருந்திருக்குமே!

தமிழ் மொழியில் பள்ளிக்கல்வி முடித்த வழக்கறிஞர் வழக்காடு மன்றங்களில் கட்டாயத்தின் பேரில் ஆங்கிலத்தில் மட்டுமே தனது வாதத்தை எடுத்து வைக்க முடிகிறபோது, அவர்களுக்கே போதிக்கும் தமிழ் வழி பயின்ற ஆசிரியரால் ஆங்கில வழியில் கற்பிக்க இயலாதா என்ன? அது ஒருபுறமிருக்க, இவ்வழக்கின் முக்கிய நோக்கமான 'ஆங்கிலவழிக் கல்வி'யை ஏன் தொடங்க வேண்டும்? தாய்மொழி வழிக்கல்வியே மாணவர்களின் அறிவை வளர்க்குமென தாய்மொழியில் பயின்று சாதித்துள்ள ஆட்சியர்கள் முதல் அறிவியல் அறிஞர்கள் வரைத் தொடர்ந்து மேடைதோறும் முழங்கி வருவதையும், அதுதொடர்பான உலக அளவிலான ஆய்வு முடிவுகளையும் தீர்ப்பாளர் புறந்தள்ளியிருப்பினும், நாமாவது இனி கவனத்தில் கொள்ள வேண்டும்.
கிராமம் & மலைப்பகுதி ஆசிரியர்கள் ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ளதாக எதன் அடிப்படையில் கூறுகின்றனரோ? எத்தனை மாணவர்கள் பயில்கின்றனர் என்ற தரவே தெரியாதவர்களுக்கு இந்தத் தரவு மட்டும் எப்படி கிடைத்தது? இதில் கிராமம், மலை, நகரம் என்ற பாகுபாடு பார்ப்பதன் உள்நோக்கம் என்ன? அனைத்துப் பகுதி ஆசிரியர்களிலும் சிலர் வேலை முடிந்தபின் பகுதிநேரத்தொழில் செய்வது உண்மையே. இதற்கு வேதனை தெரிவிக்கும் முன் கல்வியே இங்கு தொழிலாக உள்ளதைப் பற்றிய கவலை தீர்பாளருக்கு வராதது வியப்பாகத்தான் உள்ளது.

கற்பித்தலில் காலம் தவறாமை அவசியமே. ஆனால், அதை மெய்ப்பிக்கக் கொண்வரும் தொழில் நுட்பங்கள் ஆசிரியர்கள் மத்தியில் மன உளைச்சலை ஏற்படுத்தி அதன் பாதிப்பை மாணவர் வழியே தான் அறுவடை செய்ய நேரிடும். ஏனெனில், கற்றலும் கற்பித்தலும் 100% உளவியல்சார் நடைமுறையாகும்.

பள்ளிகளில் செல்லிட பேசிகளுக்குத் தடைவிதிப்பது ஒருபுறமென்றால் தடைவிதிக்கும் அந்த அரசு அமைப்பே தனக்கான தரவுகளைப் பெற அதே செல்லிடபேசிகளை செல்லிடபேசிகளை நம்பித்தான் காலம் நகர்த்தி வருகிறது. கற்றல் கற்பித்தலுக்காக இணைய உலகிற்குள் சூட்டிகைப் பேசியுடன் அழைத்துச் செல்லும் ஆசிரியர்கள் இன்று பெருகி வருவதோடு அதன் காலத்தேவையும் நியாயமானதாகவே உள்ளது.
ஆசிரியர் சங்கங்கள் தொடங்க ஏன் தடைவிதிக்கக் கூடாது என்றால், இந்தியத் தொழிற்சங்கச் சட்டம் 1926-ன் கீழ் 18 வயது நிரம்பிய தொழில் நிலைய ஊழியர்கள் தங்களின் உரிமைகளை உறுதிப்படுத்திக் கொள்ள தங்களுக்கான சங்கத்தை அமைத்துக் கொள்ளலாம் என்ற உரிமையை இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்நாட்டு குடிமக்களான ஆசிரியர் உட்பட அனைத்துவித தொழிலாளர்களுக்கும் வழங்கியுள்ளது. தடை விதிப்பது என்பது அரசியலமைப்புச் சட்டத்தை மீறும் செயல். அரசியலமைப்புக் காவலனாகக் காட்டிக் கொள்ளும் வழக்காடு மன்றத் தீர்பாளரே இக்கேள்வியை எழுப்புவது நியாயமோ?

தீர்ப்பாளரின் கவலையின்படி, ஆசிரியர்கள் கடமைகளைச் செய்யாவிடில் மாணவர்களை யாராலும் காப்பாற்ற முடியாது என்பதால் தான் தீர்ப்பாளர் 'ஏன் தடைவிதிக்கக் கூடாது' என்று சுட்டிக்காட்டும் ஆசிரியர் இயக்கங்கள் ஒன்றிணைந்து தமிழ்நாடு கல்வி உரிமைப் பாதுகாப்புக் கூட்டமைப்பை அமைத்து புதிய கல்விக் கொள்கையின் பாதகங்களை எதிர்த்துப் போராடி வருகின்றன.

கல்வியை அரசுடைமையாக்கப் போராட வேண்டிய சூழலில், தொண்டு நிறுவனமே ஆயினும் கல்வியில் அவற்றை அனுமதிக்கக் கூடாது. ஆனால், கல்வியைச் சேவையில் (SERVICE) இருந்து வணிகம் (TRADE) என்ற நிலைக்கு மாற்றிய WTO-GATS ஒப்பந்த உடன்பாட்டிற்கு மத்திய அரசு தலையசைத்துள்ளதை வழிமொழியும் விதத்தில் தான் தீர்ப்பாளர் உட்பட அதிகாரத்திலுள்ள பலரின் பார்வை உள்ளதாகவே தோன்றுகிறது.
இந்நிலை தொடருமாயின் அனைத்து அரசுத் துறைகளையும் தனியார் & தனது சுய இலாபத்திற்காகத் தாரைவார்க்கும் அரசியல்வியாதிகளால், நாளை நாம் ஒரே ஒரு அரசுப் பள்ளியையாவது நிறுவுங்கள் என வாதாட, அது கொள்கை முடிவென தீர்ப்பாக, இறுதியில் மீண்டுமொரு (கார்ப்ரேட் நிறுவனங்களிடம்) விடுதலைக்காகப் போராட வேண்டியிருக்கும்.

*அரசுத்துறையை அழிக்கும் அரசாட்சி*
*குடியரசை மலடாக்கும் அசுராட்சி*
*விழிப்புணர்வால் ஏற்படும் புரட்சி,*
*வீழாது வாழவைக்க அத்தாட்சி*

*✍🏽செல்வ.ரஞ்சித்குமார்*

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot