பள்ளிக்கல்வியில் அமைச்சர் செங்கோட்டையன் என்னென்ன செய்யவேண்டும்? - ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களின் யோசனைகள் !!! - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Sunday 11 June 2017

பள்ளிக்கல்வியில் அமைச்சர் செங்கோட்டையன் என்னென்ன செய்யவேண்டும்? - ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களின் யோசனைகள் !!!

அதிரடியான மாற்றங்களும் அறிவிப்புகளும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் மீது மக்களிடம் பரவலான எதிர்பார்ப்பைக் கிளப்பிவிட்டுள்ளது. பள்ளிக்கல்வித் துறையில் அவர் என்னென்ன செய்யவேண்டும் என பெற்றோரும் ஆசிரியர்களும் கல்வியாளர்களும் ஏகப்பட்ட யோசனைகளைத் தயாராக வைத்திருக்கின்றனர்.
பெற்றோர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களும்கூட பொதுவாக வைக்கும் குற்றச்சாட்டு, அரசு வழங்கும் சீருடைகள் பொருத்தமான அளவு இருப்பதில்லை என்பதே. ”ஏறத்தாழ பொருத்தமாக அமைந்துவிட்டால் அந்த சட்டைகளை வைத்துக்கொள்கிறார்கள்; வேறு வழியே இல்லாமல் அளவு கூடக்குறைவாக இருக்கும் சட்டைகளை மாணவர்கள் அணிந்து கொண்டுவருவது பரிதாபமாக இருக்கிறது” என்கின்றனர் அதைச் சகிக்கமுடியாமல் வெதும்பும் ஆசிரியர்கள்.

” பள்ளிகளில் மாணவர்களுக்குத் தரப்படும் 4 செட் சீருடைகள், சரியாக அமைந்துவிட்டால் மாற்று சட்டைகள் தைக்கவேண்டிய அவசியமே ஏற்படாது. அளவெல்லாம் எடுக்கிறார்கள்; ஆனால் சட்டையாக வந்துசேரும்போது அவ்வளவு மோசமாக இருக்கிறது. எத்தனையோ முறை எடுத்துச்சொல்லியும் சட்டைகளின் நிலைமை சரிசெய்யப்படவில்லை. 

துணியைக் கொடுங்கள், உள்ளூர் அளவிலேயே அரசு சொல்லும் அதே மகளிர் கூட்டுறவு தையல் சங்கத்தினரிடமே சரியாக அளவெடுக்கவைத்து முழுமையாக அழகான உடையாக தைத்து வழங்கமுடியும். அரசாங்கம் முக்கியமாக கவனிக்கவேண்டிய இடம், இது” என்கிறார், தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன்.  

அரசுப் பள்ளி மாணவர்கள் அனுபவிக்கும் பல கஷ்டநஷ்டங்களையும் சிக்கல்களையும் கவனத்துக்குக் கொண்டுவருகிறார், இந்த ஆசிரியர். 

teacher Manikandan ” உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு தருவதை மேல்நிலைப் பள்ளிக்கும் நீட்டிக்கவேண்டும். பள்ளிச் சத்துணவை வாங்கி உண்ணும் மாணவர்கள் கணிசமாக இருக்கிறார்கள். பணியாளர்கள் இரக்கப்பட்டு அவர்களுக்கு சாப்பாடு வழங்குவதாகவும் மாணவர்கள் தயங்கித்தயங்கி மதிய உணவைப்பெறுவதுமாக இருக்கிறது. சுயமரியாதையோடு மேல்நிலைப்பள்ளி மாணவர்களும் சத்துணவைச் சாப்பிட ஆணையிடவேண்டும். 

அவர்களுக்கு மிதிவண்டியும் கணினியும் அரசால் இலவசமாக வழங்கப்படுவது, மிகவும் பயனுள்ளது. ஆனால் 11ஆம் வகுப்பு முடியும் காலகட்டத்தில்தான் மிதிவண்டி வந்துசேர்கிறது. 12ஆம் வகுப்பு தேர்வுக்கு முன்பாகத்தான் கணினி வருகிறது. இரண்டையுமே 11ஆம் வகுப்பு ஆரம்பிக்கும்போதே வழங்கினால் மாணவர்களுக்குப் பயன்படும். நவீன அறிவியல் வளர்ச்சிக் காலகட்டத்தில் இப்போது மாணவர்களுக்கு கணினி வழங்குவது மெச்சத்தகுந்த திட்டம் என்றாலும், +2 தேர்வின்போது அவற்றைக் கொடுப்பதால் நோக்கத்துக்கு பின்னடைவு ஏற்படுகிறது. 

முன்பே கொடுத்தால், மாணவர்கள் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புண்டு எனக் கூறப்படுகிறது. ஜூன் மாதமே கொடுத்துவிட்டால் ஒரு மாதம் படங்களைப் பார்த்தால்கூட அதுவே போர் அடித்து, கல்விசார்ந்து அதைப் பயன்படுத்தத் தொடங்குவான். கல்லூரிக்குச் செல்வதற்கு முன்பே மாணவர், கணினியை இயக்குவதில் வல்லவராக ஆகமுடியும். 

ஆய்வகங்களுக்கான கருவிகள் வழங்குவதற்காக 25 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. 3 ஆயிரத்துக்குள் அந்தப் பொருட்களை வாங்கிவிட்டு மிகைக்கணக்கு காட்டுகிறார்கள். எடுத்துக்காட்டாக, சோடியம் குளோரைடு ஒரு பாக்கெட் 200 கி= 100 ரூபாய் எனக் கணக்கு காட்டப்படுகிறது. இது வேறு ஒன்றுமில்லை, சாதாரண உப்புதான். இதைப்போலவே 100கி. ஈஸ்ட்டை 20-30 ரூபாய்க்குள் வாங்கிவிடமுடியும்; ஆனால் 5 மடங்கு அதிகமாக விலை காட்டுகிறார்கள். 

ஆய்வகத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் சோதனைக்குழாய்களையும் தரம் குறைவாக வாங்கி அதிகக் கணக்கு காட்டுகிறார்கள். இதனால் குறைந்த அளவு வெப்பநிலையிலேயே சோதனைக்குழாய்கள் வெடித்து உடைந்துபோகின்றன. ஆய்வகப்பொருட்கள், கருவிகள் கொள்முதல் செய்வதில் முறைகேடுகள் நடக்கிறது. இதைக் களைவது அவசியமானது. 

இதேபோல பள்ளிக்கு வேண்டிய நூல்களைவிட சம்பந்தமில்லாத புத்தகங்களை வாங்குமாறு கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். தரமான கலைக்களஞ்சியம், பல்வேறு துறைசார்ந்த என்சைக்ளோபீடியாக்கள், அறிவியல் அறிஞர்களைப் பற்றிய புத்தகங்களைப் படிக்க மாணவர்களுக்கு வாய்ப்பில்லாமல் போகிறது. பள்ளி இருக்கும் ஊர் அளவில் இதற்காக கமிட்டிகளை அமைத்து, மாணவர்களுக்குத் தேவையான புத்தகங்களை வாங்க மட்டுமே நிதி ஒதுக்கவேண்டும். 

அண்மைக்காலமாக அரசுப் பள்ளிகளில் பல்வேறு சிறப்புப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. தனியார் பள்ளிகளைப் பார்த்து சூடுபோட்டுக்கொள்வதாகவும் போலியான விளம்பரமாகவே யதார்த்தத்தில்  இந்த முயற்சி இருக்கிறது. இதைவிட வழக்கமான வகுப்புகளை ஒழுங்காக நடத்துமாறு பார்த்துக்கொண்டாலே மாணவர்கள் சிறப்பாகப் படிக்கமுடியும்” என விவரிக்கிறார், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியரும் தொல்லியல் ஆய்வாளருமான ஆ. மணிகண்டன்.

அண்மைக்காலமாக பள்ளிக்கல்வித் துறையின் சில முடிவுகளை வரவேற்றபோதும், சில முடிவுகள் தேர்வை மையமாகக்கொண்டதாகவே இருக்கிறது என தாங்கலாகச் சொல்கிறார், முதல் தலைமுறை மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்பு இயக்கமான, மதுரை லிட்டில்ஸ் குழந்தைகள் மையத்தின் பொறுப்பாளர், பர்வத வர்த்தினி. 

”குஜராத்தில் பள்ளி இறுதித் தேர்வில் படித்த மாணவன், என்ன ஆவாய் என்று கேட்டதற்கு, சமணத் துறவியாகப் போகிறேன் என்று சொல்லியிருக்கிறான் என்றால், கல்வித்துறை எப்படி இருக்கிறது என்பதைப் பார்த்துக்கொள்ளுங்கள். ஒவ்வொரு வகுப்பிலும் நுழையும் மாணவர்களின் கற்றல்திறனை ஆசிரியர்கள் சோதித்து, அவர்களின் அடைவுத்திறனை மதிப்பிட்டு, அதன்படி கல்வித்திறனை அதிகப்படுத்தவேண்டும். 

அதாவது நான்காவது மாணவனுக்கு கூட்டல், கழித்தல் நன்றாகத் தெரிந்திருக்கவேண்டும் என்றால் எல்லாருக்கும் இது தெரிந்திருக்கும் எனச் சொல்லமுடியாது. தெரியாத மாணவர்களுக்கு அதைப் புரியவைப்பதில் ஆசிரியர் ஈடுபடவேண்டும். தேர்வு என்பது மாணவர்களின் கற்றல்திறனை மதிப்பிடுவது என மட்டும் பார்க்காமல், ஆசிரியர்களின் கற்பித்தல் திறனையும் சோதிப்பதாக இருக்கக்கூடிய முறையைக் கொண்டுவர வேண்டும். அப்படி அமையும்போது ஏற்கனவே செயல்வழிக் கற்றல் முறையின் மூலம் புகுத்தப்பட்ட இனிய கல்விமுறையானது அர்த்தமுள்ளதாக அமையும். குழந்தைகள் ஆர்வமாகக் கற்பார்கள். புதிய உலக சூழலில் வளரிளம் பருவத்தினருக்கு ஏற்பட்டுள்ள மாற்றங்களைச் சமாளிக்கும் திறனை ஆசிரியர்களிடம் ஊட்டவேண்டும். 8 முதல் 12 வகுப்புவரை படிக்கும் மாணவர்களின் புதிய உளவியல் சிக்கல்களைச் சமாளிப்பதற்கு, கட்டாயமாக ஆசிரியர்களைத் தயார்செய்யவேண்டும். பெண் குழந்தைகளின் இடைநிற்றலுக்கு முக்கிய காரணம், முன்கூட்டியே திருமணம் செய்துவைப்பது. 

கல்விகற்ற பெண்களின் குழந்தைகள் பள்ளியிலிருந்து இடையில்நிற்பது குறைவாக இருப்பது, கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஆண்டில் தஞ்சையில் நடந்த 18 குழந்தைத் திருமணங்களை அவர்களுடன் படித்த சக மாணவர்கள், குழந்தைகள் உதவிமையத்துக்குத் தெரிவித்து நிறுத்தியிருக்கிறார்கள். எனவே பெண்பிள்ளைகளின் கல்வியை உறுதிப்படுத்துவதில் கல்வித்துறை புதிய வழிமுறைகளைக் கையாளவேண்டும்” என கல்வித்துறையின் கடமைகளைப் பட்டியலிடுகிறார், பர்வத வர்த்தினி.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot