தேவைக்குத் தகுந்த கல்வி தரப்படுமா? - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Sunday 6 August 2017

தேவைக்குத் தகுந்த கல்வி தரப்படுமா?

கடந்த சில ஆண்டுகளாகவே நாட்டிலுள்ள அனைத்துத் தொழிற்சாலைகளுக்கும் தேவையான திறன் வாய்ந்த பணியாளர்கள் கிடைப்பதில்லை. ஒரு புறம் படித்த படிப்புக்குத் தகுந்த வேலை கிடைப்பதில்லை என்ற முணுமுணுப்பும் மற்றொரு புறம் வேலைக்குத் தகுந்த பணியாளர்கள் கிடைப்பதில்லை என்ற ஏக்கமும் இருந்து கொண்டிருக்கிறது.

சுதந்திர இந்தியாவில் தொழில் நுட்ப வளர்ச்சி தேவை என்று கருதினார் அப்போதைய பிரதமர் ஜவாஹர்லால் நேரு. அதனால் காரைக்குடியில் தேசிய அறிவியல் மையத்தை காரைக்குடியில் உருவாக்கினால் அதற்காக ஒரு மிகப் பெரிய தொகையையும் சுமார் 300 ஏக்கர் நிலத்தையும் வழங்கினார் கிராமப்புறமான காரைக்குடியைச் சேர்ந்த அழகப்ப செட்டியார். சுதந்திரத்துக்குப் பின் நாட்டின் 10}ஆவது அறிவியல் ஆய்வு மையமாக இது உருவானது. இப்போது அங்கு கல்லூரியும் செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் அறிவியல் ஆராய்ச்சி மையம் என்பதால் பல கோடி மதிப்புள்ள ஆராய்ச்சிக்கான ஆய்வகங்கள் உள்ளே செயல்படுகின்றன. வேதியியல் மற்றும் மின்வேதியியல் ஆராய்ச்சி தொடர்ந்து இங்கு நடைபெற்று வருகிறது. நமது நாட்டின் செயற்கைக் கோள்களுக்குத் தேவையான பேட்டரிகள் ஆராய்ச்சி மூலம் இங்கே உருவாக்கப்படுகின்றன. உலகின் தேவை என்னவோ அதற்குத் தகுந்தாற்போல மாணவர்களையும் விஞ்ஞானிகளையும் உருவாக்குவதுதான் இதுபோன்ற அறிவியல் ஆராய்ச்சி மையங்களின் முக்கிய நோக்கம்.

மத்திய அரசுக்கு மட்டும் இந்த எண்ணம் இருந்தால் போதுமா? மாநில அரசுக்கு இந்த எண்ணம் வேண்டாமா? நாட்டிலேயே தமிழகத்தில்தான் 500}க்கும் மேற்பட்டபொறியியல் கல்லூரிகள் உள்ளன. ஆனால் படிக்க வரும் மாணவர்களின் எண்ணிக்கை மிகக் குறைந்த அளவில்தான் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக பொறியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களின் எண்ணிக்கை சற்றேக்குறைய ஒரு லட்சமாக உள்ளது.
தமிழகத்தின் சிறந்த கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன. ஆனால் தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களிலும் பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. கோவை போன்ற முன்னேறிய மாவட்டங்களில் தலைசிறந்த கல்லூரிகள் இருந்தாலும் பல கல்லூரிகளில் மாணவர்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில்தான் சேர்கின்றன. இந்தக் கல்லூரிகள் பெரும்பாலானவற்றில் பாடங்களைக் கற்பிக்கத் தேவையான ஆசிரியர்கள் இருப்பதில்லை. ஆனால் சம்பந்தப்பட்ட கல்லூரிகளின் விளக்கக் கையேட்டைப் பார்த்தால் வெளிநாட்டுக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் தோற்றுவிடும். நாட்டில் ஆராய்ச்சிப் படிப்பு முடித்துப் பணியில் உள்ள அனைவருமே தங்கள் கல்லூரிகளில்தான் பணிபுரிவது போல விளக்கக் கையேட்டில் இருக்கும். ஆனால் ஆய்வுக்குச் செல்லும் அதிகாரிகளிடம் முந்தைய நாள்தான் அனைவரும் தங்கள் பதவியை ராஜிநாமா செய்வது போலக் காட்டியிருப்பார்கள். இதனால் பாதிக்கப்படுவது எதிர்கால மன்னர்களான மாணவர்கள்தான் என்பதை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.
தருமபுரி போன்ற பின்தங்கிய மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்காக கட்}ஆப் மதிப்பெண் 140 இருந்தால் கூட கல்விக் கட்டணம் உள்ளிட்ட அனைத்தையும் இலவசமாக வழங்குவதாகக் கூறி விளம்பரமும் செய்கிறார்கள். கல்லூரிக்குள் சென்றபின் கட்டணத்தைக் கட்ட வேண்டும் என்று நிர்பந்திக்கிறார்களோ என்னவோ தெரியவில்லை.
பொறியியல் கல்லூரிகளில் ஆடித் தள்ளுபடி போல எதையும் இதுவரை நேரடியாக அறிவிக்கவில்லை. ஒரு மாணவர் சேர்ந்தால் அதே குடும்பத்தின் மற்றொருவருக்கு இலவசம் என்ற அறிவிப்புதான் இல்லை. அந்த அளவுக்கு பொறியியல் கல்லூரிகளில் இடம் கிடைப்பது எளிதாகிவிட்டது.

பொறியியல் படிப்பை கஷ்டப்பட்டு முடித்தபின் பாடம் குறித்த புரிதல் இல்லாமல் வேலைக்குச் செல்லும்போது நிறுவனம் எதிர்பார்க்கும் எந்தத் தகுதியும் இல்லாமல் இருந்தால் எப்படி வேலை தருவார்கள். வேலையில் சேர்ந்து மாணவர்கள் கற்றுக் கொள்ளும் அளவுக்கு இன்றைய சூழ்நிலை இல்லை என்பதைக் கல்வி நிறுவனமும் மாணவர்களும் புரிந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் பொறியியல் படிப்பு முடித்த பலர் ரூ. 5000}க்குக் கூட வேலை செய்யத் தயாராக உள்ளனர்.
இப்போதைய இந்தியாவின் தேவை திறன் வாய்ந்த தொழிலாளர்கள். இதற்கு தமிழகத்தில் உள்ள தொழிற்பயிற்சி மையங்களுக்குப் புத்துயிர் ஊட்ட வேண்டும். ஒவ்வொரு பகுதிக்கும் தேவைக்குத் தகுந்தாற்போல மாணவர்களுக்குக் கூடுதல் பயிற்சியளிக்க வேண்டும். உதாரணமாக தொழில் நகரான கோவைக்கு லேத் தொழிலாளர்கள் தேவையென்றால் அங்குள்ள ஐடிஐக்களில் 20 அல்லது 30 மாணவர்களுக்கு மட்டும் பயிற்சியளிக்கப்படுகிறது. இதை இரு மடங்காக உயர்த்தலாம். அல்லது 2 ஷிப்ட்டுகளாக ஐடிஐகளை மாற்றலாம். திருப்பூரில் பின்னலாடை, கரூரில் லாரி கூண்டு கட்டும் தொழில், ஜவுளி போல ஒவ்வொரு பகுதியிலும் பிரபலமாக இருக்கும் தொழில்களுக்குத் தகுந்தாற்போல அங்குள்ள கல்லூரிகளில் கற்றுத் தரலாம்.
தமிழகத்தில் உள்ள பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகளின் கட்டமைப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். கல்லூரிகள் அமைந்துள்ள இடங்களைச் சுற்றியுள்ள பள்ளி மாணவர்களுக்கும் வேலையற்ற இளைஞர்களுக்கும் தேவையான மென்பயிற்சிகளையும் தொழில்நுட்பப் பயிற்சிகளையும் அவர்களுக்கு வழங்கலாம். இவ்வாறு செய்வதன் மூலம் தொழிற்சாலைகளுக்குத் தகுந்த பணியாளர்கள் கிடைப்பார்கள். வேலையும் தரமாக இருக்கும்.

பொறியியல் கல்லூரி மாணவர்களின் புரிந்து கொள்வதை ஊக்கப்படுத்தும் வகையில் தேர்வுத்தாள் அமைய வேண்டுமே தவிர அவர்களின் மனப்பாடத் திறமையை ஊக்குவிக்கும் வகையில் கேள்வித்தாள் அமையக் கூடாது. பொறியியல் கல்லூரி மாணவர்களுக்குத் தேவையான இப்போதைய சூழ்நிலையில் தொழிற்சாலைகளின் தேவைக்கும் கிடைக்கும் திறன்மிக்க தொழிலாளர்களின் எண்ணிக்கைக்கும் மிகப் பெரிய இடைவெளி இருக்கிறது. இதைக் குறைக்க வேண்டுமென்றால் தமிழக அரசு முயற்சி செய்ய வேண்டும்.
தமிழக பள்ளிக் கல்வித்துறையின் வரலாற்றில் இல்லாத அளவுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளார். அதே போல உயர்கல்வித்துறை அமைச்சருடன் இணைந்து தொழில் பயிற்சி தொடர்பாகவும் முடிவெடுத்தால் தொழிற்சாலைகளும் திறமையான தொழிலாளர்கள் கிடைப்பார்கள். இந்த முடிவெடுக்கத் தேவை உறுதியான மனம் மட்டுமே.


No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot