கலைக்கல்லூரிகளில் கூடுதல் இடங்கள் - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Wednesday 2 August 2017

கலைக்கல்லூரிகளில் கூடுதல் இடங்கள்

இந்த ஆண்டு பிளஸ்–2 இறுதித்தேர்வில் பள்ளிக்கூடங்களில் படித்து தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை மட்டும் 8 லட்சத்து 93 ஆயிரத்து 262 ஆகும். இதில், 8 லட்சத்து 22 ஆயிரத்து 838 பேர் தேர்ச்சிப்பெற்றிருக்கிறார்கள்.
இவர்கள் அனைவரும் உயர்கல்வியில் சேர்வதற்கும், ஏதாவது வேலையில் சேர்வதற்கும், சிறு வணிக நிறுவனங்களை தொடங்குவதற்கும்முயற்சி செய்வார்கள். அந்தவகையில், பொறியியல் கல்லூரிகள் போன்ற பல்வேறு தொழில் படிப்புகளில் சேர்வதற்காக விண்ணப்பித்தவர்கள் போக, மீதமுள்ளவர்களில் உயர்கல்வி படிக்கவேண்டுமென்றால் கலைக் கல்லூரிகளின் கதவுகளைத் தான் தட்டுகிறார்கள்.பொறியியல் கல்லூரியில் படித்தவர்களுக்கு வேலைவாய்ப்புகள் குறைந்துகொண்டிருக்கும் நிலையில், கலைக்கல்லூரிகளில் சேர்ந்தால் ஏதாவது வேலைக்கு முயற்சி செய்துவிடலாம் என்ற ஆதங்கத்தில் நிறையபேர் கலைக்கல்லூரியில் சேர முயற்சி எடுக்கும்நிலையில் உள்ளனர். இதனால் கலைக்கல்லூரிகளுக்கு பலத்த கிராக்கி ஏற்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் 83 அரசு கலைக்கல்லூரிகளும், 139 அரசு உதவிபெறும் கல்லூரிகளும், 496 சுயநிதி கல்லூரிகளும், ஆக மொத்தம் 718 கலைக்கல்லூரிகள் இருக்கின்றன. அரசு கலைக்கல்லூரிகளில் இருக்கும் இளங்கலை பட்டப்படிப்பு வகுப்புகளில் 61 ஆயிரத்து 770 இடங்கள்தான் இருக்கின்றன. இதுபோல, அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 96 ஆயிரத்து 703 இடங்களும், சுயநிதி கலைக்கல்லூரிகளில் 1 லட்சத்து 4 ஆயிரத்து 84 இடங்கள்மட்டுமே இருக்கின்றன. பெரும்பாலான இடங்களில் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை முழுவதுமாக முடிந்துவிட்டது. பொறியியல் கல்லூரிகளில் 2 லட்சத்து 60 ஆயிரம் இடங்கள் இருக்கும் நிலையில், ஒரு லட்சத்து 41 ஆயிரம் மாணவர்கள்தான் விண்ணப்பித்திருக்கிறார்கள். இன்னமும் மாணவர்கள் கலைக்கல்லூரிகளின் கதவுகளை தட்டிக்கொண்டு இருக்கிறார்கள். பொறியியல் கல்லூரிகளில் விரும்பிய படிப்பு, அல்லது விரும்பிய கல்லூரியில் இடம்கிடைக்காவிட்டால், அங்கிருந்தும் மேலும் பலர் கலைக்கல்லூரிகளை நாடும் வாய்ப்பு இருக்கிறது. பெரும் எண்ணிக்கையில் மாணவர்கள் வருவதை கருத்தில்கொண்டு, தமிழக அரசின் உயர்கல்வித்துறை கடந்தமாதம் 17–ந்தேதிஅனைத்து அரசு கலைக் கல்லூரிகளிலும் 20 சதவீத இடங்களை கூடுதலாக ஒதுக்கி ஆணையிட்டது. இதுபோல, அரசு உதவிபெறும் கல்லூரிகள் 15 சதவீத இடங்களை கூடுதலாக பெற்றுக்கொள்ளலாம்.

ஆனால், பரிசோதனை கூடங்கள் தேவைப்படும் படிப்புகளில் 10 சதவீத இடங்களை பெற்றுக்கொள்ளலாம். சுயநிதி படிப்புகள் உள்ள கல்லூரிகளில் 10 சதவீத கூடுதல் இடங்களை பெற்றுக்கொள்ளலாம் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. அரசின் உயர்கல்வித்துறை பிறப்பித்திருந்த இந்த உத்தரவு நிச்சயமாக வரவேற்புக்குரியது. அனேகமாக எந்த மாணவருக்கும் கல்லூரியில் இடம் கிடைக்கவில்லை என்றநிலை ஏற்படாது. ஆனால், கூடுதல் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கும்போது நிச்சயமாக கூடுதல் கட்டிடவசதிவேண்டும். அதற்கு ஏற்றவகையில் அரசு கல்லூரிகளுக்கும், அரசு நிதி உதவிபெறும் கல்லூரிகளுக்கும் மானியம் வழங்கவேண்டும்.

இந்த கல்லூரிகள் எல்லாம் சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுகி, இந்த கூடுதல் இடங்களை பெறுவதற்கான அனுமதியை வாங்கிக்கொள்ளும்படி அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.கல்வி ஆண்டு தொடங்கி, மாணவர்கள் சேர்க்கை எல்லாம் முடிவடைந்த நிலையில், இப்போது அரசு ஆணை பிறப்பித்து, கல்லூரிகள் அதற்கான அனுமதியை பல்கலைக்கழகங்களை நாடி கூடுதலான இடங்களை பெறுவதற்கு எப்படியும் சிலநாட்கள் ஆகும். எனவே, இதுபோன்ற உத்தரவுகளை எல்லாம் கல்வி ஆண்டுதொடங்கும் முன்பு திட்டமிட்டு அரசு ஆணைகளை பிறப்பித்து, மாணவர் சேர்க்கை நடக்கும் முன்பே இவ்வளவு இடங்கள் கூடுதலாக கிடைத்துள்ளன. ஆக, இந்த கல்லூரியில் ஒவ்வொரு படிப்புக்கும் எவ்வளவு இடங்கள் இருக்கின்றன என்று மாணவர்களுக்கு தெரிவிக்கும் வகையில், முதலிலேயே அறிவித்திருந்தால், மிகவும் பயனுள்ளதாக இருந்திருக்கும்.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot