உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு நாளை வெளியாகுமா? - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Saturday 16 September 2017

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு நாளை வெளியாகுமா?

தேர்தல் நடத்தும் நிலையில், அ.தி.மு.க., அரசு இல்லாததாலும், வார்டு வரையறை பணி நிறைவு பெறாததாலும், உயர் நீதிமன்ற உத்தரவின் படி, உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு, நாளை வெளியாகுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில், 12 மாநகராட்சி; 123 நகராட்சி; 529 பேரூராட்சி; 385 ஊராட்சி ஒன்றியம்; 12 ஆயிரத்து, 524 ஊராட்சிகள் உள்ளன. இவற்றின் பதவி காலம், 2016 அக்., 24ல் நிறைவடைந்தது.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவதற்காக, மாநில தேர்தல் ஆணையம், 2016 செப்., 26ல், தேர்தல் அறிவிக்கையை வெளியிட்டது. 'இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை' எனக்கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க., வழக்கு தொடர்ந்தது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், 'தேர்தல் அறிவிப்பு முறையாக செய்யப்படவில்லை' என, தெரிவித்து, அக்., 4ல், தேர்தல் அறிவிப்பை ரத்து செய்தது.இதை எதிர்த்து, மாநில தேர்தல் ஆணையம், உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. இவ்வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், உள்ளாட்சி அமைப்புகளில், தனி அதிகாரிகள் நியமனத்தை எதிர்த்தும், அவர்களின் பதவி காலம் நீட்டிக்கப்பட்டதை எதிர்த்தும், தன்னார்வ அமைப்பு சார்பில், பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது.அத்துடன், உள்ளாட்சி தேர்தலை, விரைவாக நடத்த வலியுறுத்தி, தி.மு.க., சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இம்மனு, பிப்ரவரியில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மே, 14க்குள், உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என, மாநில தேர்தல் ஆணையத்திற்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

எனினும், 'வாக்காளர் பட்டியல் தயாரிப்பதில் காலதாமதம் ஏற்படும்' என, மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது.இவ்வழக்கு, செப்., 4ல் விசாரணைக்கு வந்தது. தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு, 'உள்ளாட்சி தேர்தலை, நவ., 17க்குள் நடத்தி முடிக்க வேண்டும். அதற்கான அறிவிப்பை, செப்., 18க்குள் வெளியிட வேண்டும்' என, மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.

ஆனால், தற்போது அரசு கடும் நெருக்கடியில் உள்ளது. 'அரசுக்கு பெரும்பான்மை இல்லை. முதல்வர் சட்டசபையை கூட்டி, பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்' என, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. அ.தி.மு.க., அணிகள் இணைந்தாலும், அக்கட்சிக்கு, இன்னமும் இரட்டை இலை சின்னம் கிடைக்கவில்லை.மேலும், இட ஒதுக்கீடு அடிப்படையில், தொகுதி வரையறை பணிகள், இன்னமும் முடிவு பெறவில்லை. எனவே, நாளை தேர்தல் அறிவிப்பு வெளியாவது சந்தேகம் என்றே கூறப்படுகிறது.
இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், மேலும் அவகாசம் கேட்க, மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot