பள்ளி தணிக்கை துறையில் 'வசூல் ராஜாக்கள்': அலறும் ஆசிரியர்கள் - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Monday 13 November 2017

பள்ளி தணிக்கை துறையில் 'வசூல் ராஜாக்கள்': அலறும் ஆசிரியர்கள்

தமிழகத்தில் பள்ளிக் கல்வியின் கீழ் செயல்படும் தணிக்கை துறையில், பெரும்பாலான அலுவலர்கள் 'வசூல் ராஜாக்களாக' வலம் வருவதால் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் புலம்பி தவிக்கின்றனர்.
'தொடக்க கல்வி துறையில் உள்ளது போல், உயர் மற்றும் மேல்நிலை பிரிவிலும் தணிக்கை துறையை மாற்றியமைக்க வேண்டும்,' என போர்க்கொடி துாக்கியுள்ளனர்.அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர் நிர்ணயம், சம்பளம் உயர்வு, அரசு நிதி செலவிடல், ஆசிரியர் ஓய்வூதியம் மற்றும் பணப்பலன் ஆவணங்கள் சரிபார்ப்பு உட்பட அனைத்து வகை வரவு செலவினங்களுக்கும் முறையான ஆவணங்கள் உள்ளனவா என்பது குறித்து பள்ளி தணிக்கை துறை சார்பில் தணிக்கை செய்யப்படுகின்றன.

இதற்காக சென்னை, மதுரை, கோவையில் மண்டல கணக்கு அலுவலகங்கள் உள்ளன. இவற்றின் மூலம் 32 மாவட்டங்களிலும் பள்ளிகளில் ஆடிட் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. மண்டல கணக்கு அலுவலராக உள்ளாட்சி தணிக்கை துறை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கீழ் கல்வித்துறையின் கண்காணிப்பாளர்கள் மாவட்டம் தோறும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தணிக்கையின்போது பள்ளிகளில் வரவு செலவிற்கான உரிய ரசீது இல்லாதது, விதி மீறி ஊதிய உயர்வு, பதவி உயர்வு வழங்கல், நிதி முறைகேடு இருந்தால் ஆட்சேபனை (அப்ஜெக்ஷன்) தெரிவிக்கப்படும். உரிய ஆவணங்கள் சமர்ப்பித்து அவை சரிசெய்யப்பட்டால் தான் எந்த பணப் பலனையும் ஆசிரியர், அலுவலர்கள் பெற முடியும். தற்போது வரை தமிழக பள்ளிகளில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட ஆட்சேபனைகள் நிலுவையில் உள்ளன. இவற்றை குறைக்க அவ்வப்போது கூட்டு அமர்வு கூட்டங்கள், சிறப்பு தணிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கிடையே ஒவ்வொரு கண்காணிப்பாளர்களுக்கும் மாதத்தில் குறிப்பிட்ட பள்ளிகளில் தணிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்படும். இங்கு தான் பல அலுவலர்கள் 'வசூல் ராஜாக்களாக' கோலோச்சுகின்றனர் என புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து தலைமையாசிரியர், ஆசிரியர்கள் கூறியதாவது: பள்ளிகளில் 'ஆடிட்' என்றால் முன்கூட்டியேசம்மந்தப்பட்ட பள்ளிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விடும். ஆடிட் வருவோருக்கு லாட்ஜில் தங்குவது, சாப்பாடு, தணிக்கை முடிந்து செல்லும்போது 'கவர்' என சகலமும் பள்ளி சார்பில் 'கவனித்து' அனுப்பினால் தான் ஆட்சேபனைகளுக்கு விமோசனம் கிடைக்கும்.ஆனால் 'கவனிப்பு' இல்லாவிட்டால் 'அது சரியில்லை... இது சரியில்லை...,' என ஏராளமான ஆட்சேபனைகள் தெரிவித்து எழுதிவிடுவர்.

இதனால் முடிந்தவரை 'கவனித்து' அனுப்பி விடுவோம். இதில் உதவி பெறும் பள்ளிகளில் இஷ்டத்திற்கும் வசூலிப்பு நடக்கும். இதுதவிர ஓய்வு பெறும் தலைமையாசிரியர், ஆசிரியர்களுக்கு ஓய்வூதி பலன் கிடைக்க இத்துறையின் தடையில்லா சான்று (என்.ஓ.சி.,) அவசியம். அப்போதும் முடிந்த அளவு 'பணம் கறப்பு' நடக்கும்.பல்வேறு புகார்கள் தெரிவித்தும், இதுவரை பெரிய அளவில் நடவடிக்கை இல்லாததால் இத்துறைக்கு 'டிரான்ஸ்பர்' ஆவதில் கடும் போட்டி ஏற்படுகிறது. முறைகேடு புகாரில் சிக்கி துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்ட பின்னரும் கூட, அரசியல் சிபாரிசால் இத்துறைக்கே பணிக்கு திரும்பும் சம்பவங்களும் நடக்கிறது. இத்துறையை சீரமைத்து மாற்றியமைக்க அரசு முன்வர வேண்டும், என்றனர்.

தொடக்க கல்விமுறை பின்பற்றப்படுமா

தொடக்கக் கல்வித்துறையில் பள்ளிகள், ஆசிரியர்கள் எண்ணிக்கையும் அதிகம். அங்கு அந்தந்த மாவட்டங்களில் தொடக்க கல்வி அலுவலர் கண்காணிப்பின் கீழ் உதவி தொடக்க கல்வி அலுவலர் பொறுப்பிலேயே தணிக்கை பணிகள் மேற்கொள்கின்றன. அதுபோல் உயர் மற்றும் மேல்நிலை பிரிவிலும் முதன்மை கல்வி அலுவலர்களின் கீழ் கண்காணிப்பாளர்களே தணிக்கை மேற்கொள்ளும் வகையில் மாற்றி அமைக்கலாம். உள்ளாட்சி தணிக்கை துறை அதிகாரிகளை அத்துறைக்கே திருப்பி அனுப்ப கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot