கணக்கு எண் மாறாமல் வங்கியை மாற்றிக் கொள்ளும் வசதி! - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Sunday 18 June 2017

கணக்கு எண் மாறாமல் வங்கியை மாற்றிக் கொள்ளும் வசதி!

செல்லிடப்பேசி எண்ணை மாற்றாமலே தொலைத் தொடர்பு சேவை அளிக்கும் நிறுவனங்களை வாடிக்கையாளர்கள் மாற்றிக் கொள்ளும் வசதி தற்போது நடைமுறையில் உள்ளது.
இதன்படி, தங்களுக்கு திருப்தி அளிக்காத சேவை நிறுவனத்திலிருந்து பிடித்தமான வேறொரு நிறுவனத்துக்கு மாற முடிகிறது. இதேபோல, வங்கி வாடிக்கையாளர்களும் தங்கள் சேமிப்பு வங்கி கணக்கு எண்ணை மாற்றாமலே, வேறு வங்கிகளுக்கு மாறும் காலம் விரைவில் வர உள்ளது.
தற்போது இந்தத் திட்டம் யோசனை வடிவிலேயே இருந்தாலும், மாறிவரும் அதிநவீனத் தொழில்நுட்பங்களால், இந்த வசதி விரைவில் சாத்தியமாகும் வாய்ப்புகள் தென்படுகின்றன. அனைத்து வங்கிக் கணக்கும் தற்போது மின்னணுமயமாகிவிட்டன. ஆதார், பான், செல்லிடப்பேசி எண் இணைப்புகளால் வங்கி நடைமுறைகள் நமது கைக்குள் அடங்கி எளிதாகிவிட்டன. வங்கிக்குச் செல்லாமல் வீட்டிலிருந்தே பணப் பரிமாற்றங்களை வாடிக்கையாளர்களால் செய்ய முடிகிறது. எனவே, வங்கித் துறையின் அடுத்தகட்ட மைல்கல்லாக, வங்கிக் கணக்கு எண்ணை மாற்றாமல், வங்கியை மாற்றிக் கொள்ளும் வசதி விரைவில் கிடைக்கும். அப்போது, தங்களுக்கு முழுமையான திருப்தி அளிக்காத எந்த வங்கியும் வாடிக்கையாளரைத் தக்கவைக்க முடியாது.

இந்த யோசனையை இரண்டாண்டுகளுக்கு முன்னர் முன்வைத்தார், ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் எஸ்.எஸ்.முந்த்ரா. வாடிக்கையாளர்களுக்கு சிரமம் தரும் வகையில் வங்கிகள் செயல்படக் கூடாது என்கிறார் அவர்.
வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்குகளில் குறைந்தபட்ச இருப்பு எவ்வளவு வைத்திருக்க வேண்டும் என்பதையும், சிறப்பு சேவைகளுக்கு எவ்வளவு கட்டணம் நிர்ணயிப்பது என்பதையும் தீர்மானிக்கும் சுதந்திரம், வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அந்த உரிமையை, சாதாரண வாடிக்கையாளர்களுக்கு சேவை அளிக்க மறுப்பதற்கான வாய்ப்பாகக் கருதக் கூடாது என்கிறார்.
மேலும், கட்டணங்கள் நியாயமானதாகவும், வாடிக்கையாளர்களால் ஏற்கத் தக்கதாகவும் இருக்க வேண்டும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் நோக்கில் அவை அமைந்துவிடக் கூடாது என்கிறார்.

வங்கிச் செயல்பாடுகளின் கண்காணிப்பு மற்றும் தீர்ப்பாய அமைப்புக்கு சமீப காலமாக அதிக அளவில் புகார்கள் வந்துள்ளன.
வங்கி விதிகள் மற்றும் தர நெறிமுறைகளை மீறி நிர்வாகங்கள் செயல்பட்டதாக வந்த புகார்களின் சதவீதம் 2010-11-இல் 24%. அது 2016-17-இல் 34%-ஆக அதிகரித்துள்ளது.
ஓய்வூதியம் பெறுவோர், தவிப்புக்குள்ளாவதும், காசோலை பரிமாற்றங்களில் குழப்பம் நேர்வதும், வாடிக்கையாளர் அடையாள (கே.ஒய்.சி.) ஆவணங்களில் பிழைகள் மிகுவதும் பல புகார்களுக்கு காரணமாக உள்ளன. இந்நிலையில், வங்கி சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்துவது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்.

நவீனத் தொழில்நுட்பங்களால் வங்கிச் செயல்பாடுகள் மாற்றம் பெற்றுள்ளன. எனவே, வங்கிகளை மாற்றிக் கொள்ளும் வசதி (Account Number Portability) விரைவில் வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். அப்போது வங்கிக் கிளைக்கு வராமலே வாடிக்கையாளர்கள் வேறு வங்கிக்கு சத்தமின்றி மாறிவிடும் காட்சிகளைக் காண முடியும். அதற்குள் வங்கிகள் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்கிறார் எஸ்.எஸ்.முந்த்ரா.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot