மாற்றத்துக்குத் தயாரா ஆசிரியர்களே? - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Tuesday 20 June 2017

மாற்றத்துக்குத் தயாரா ஆசிரியர்களே?

தமிழகக் கல்வித்துறை வரலாற்றில் மிகப் பெரிய புரட்சியை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கொண்டு வந்திருக்கிறார். இதனால் மாணவ, மாணவியரின் மன அழுத்தம் குறைந்து தனியார் பள்ளி நிர்வாகிகளுக்கு மன அழுத்தம் அதிகரித்துள்ளது.


தமிழகத்தில் ஒவ்வோராண்டும் பல லட்சம் மாணவ, மாணவியர் 10 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுகிறார்கள். இத்தேர்வில் தனியார் பள்ளியில் அதிக மதிப்பெண் வாங்கும் மாணவ, மாணவியரை விளம்பரம் செய்து கொண்டாடுவார்கள்.

தங்கள் பள்ளியில் படித்த மாணவர்களில் எத்தனை பேர் பொறியியல், மருத்துவம் மற்றும் முக்கியக் கல்லூரிகளில் சேர்ந்தார்கள், எத்தனை பேர் வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்துள்ளனர் என்று விளம்பரப்படுத்திக் கொள்வார்கள்.

தனியார் பள்ளிகளில் படிப்போர் 9-ஆம் வகுப்புப் புத்தகத்தைத் தொடாமல் 10-ஆம் வகுப்புப் பாடத்தை இரண்டு ஆண்டுகள் படிப்பவர்கள். அதேபோல பிளஸ் 1-ஐ படிக்காமல், பிளஸ் 2 பாடத்தை இரண்டு ஆண்டுகள் படிப்பவர்கள். இவர்களில் பெரும்பாலானோர் புரிந்து படிப்பதற்குப் பதிலாக மனப்பாடம் செய்துதான் தேர்வெழுதுகிறார்கள்.

இப்படி மனப்பாடம் செய்து தேர்வெழுதும் மாணவர்கள், கல்லூரிக்குச் செல்லும்போது தவிக்கின்றனர். தங்கள் பள்ளி மாணவர்கள் எத்தனை பேர் ஐ.ஐ.டி.யில் சேர்ந்தனர் என்பதை இதுவரை எந்தத் தனியார் பள்ளியும் விளம்பரம் செய்ததில்லை.

பாடத்திட்டத்தில் மாற்றம் தேவை என்பார்கள். பிற பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கான கட்-ஆப் மதிப்பெண்ணைத்தான் விளம்பரம் செய்கிறார்கள். இதனால் என்ன பயன்?

இப்போது பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு என்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் அரசுப் பள்ளிகளை விடத் தனியார் பள்ளிகளுக்குத்தான் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இந்த ஆண்டு நீட் தேர்வில் எத்தனை மாணவர்கள் தேர்ச்சி பெற்று மருத்துவப் படிப்பில் சேர்ந்தார்கள் என்ற விவரத்தைப் பார்த்தாலே போதும், இதுவரை இவர்கள் மாணவர்களுக்கு பிளஸ் 1 எடுத்தார்களா இல்லையா என்ற விவரம்.

அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்த ஓர் அருமையான வாய்ப்புக் கிடைத்திருக்கிறது. ஆனால் அதை அமல்படுத்த வேண்டியது அப்பள்ளி ஆசிரியர்களிடம் உள்ளது.

பாடத்திட்டத்திலும் தேர்வு முறையிலும் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்போதுள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்களால் மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்துக்கு இணையான பாடத்தை மாணவர்களுக்குக் கற்றுத் தர முடியுமா என்ற கேள்வி எழுகிறது.

மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான தகுதியை மாநில அரசும் நிர்ணயித்தால் பல ஆசிரியர்கள் தகுதியிழக்க வேண்டியிருக்கும். இதை ஆசிரியர்கள் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.

மத்திய இடைநிலைக் கல்வி வாரியப் பாடத்திட்டத்தில் மனப்பாடத்துக்கு முக்கியத்துவம் கிடையாது. புரிந்து படித்தால் மட்டும் தேர்வெழுத முடியும். அந்தக் கேள்வித்தாள்கள் அனைத்துமே பயன்பாட்டுக்கு முக்கியத்துவம் தந்து தயாரிக்கப்படுபவை. ஆனால் மாநில அரசுப் பாடத்திட்டத்தில் மனப்பாடத்துக்குத்தான் முக்கியத்துவம்.

தனியார் பள்ளிகளைப் போலவே அரசுப் பள்ளிகளிலும் ஆசிரியர்களுக்கும் பொறுப்புகளை நிர்ணயிக்க வேண்டும். சி.பி.எஸ்.இ. போல தேர்வு முறையைக் கொண்டு வர வேண்டும்.

சி.பி.எஸ்.இ.க்கு நிகரான பாடத்திட்டங்களைக் கொண்டு வரும் அதேவேளையில் ஆசிரியர்களின் தகுதியையும் உயர்த்தியாக வேண்டும். மொழிப் பயிற்சிக்கு முக்கியத்துவம் தர வேண்டும். இதற்கான பல அறிவிப்புகளை கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
பள்ளிகளுக்கு நாளிதழ்கள் வாங்குதல், ஆன்-லைனில் தேர்வறை நுழைவுச் சீட்டுப் பெறுதல் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட உள்ளன. இதன் மூலம் மாணவர்கள் மட்டுமில்லாமல் ஆசிரியர்களும் தங்கள் அறிவை விரிவுபடுத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 3000 பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள், சுமார் 6000 பள்ளிகளில் ரூ.437 கோடி செலவில் கணினி ஆய்வகங்கள் ஆகியவை அமைக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.

இவை அனைத்தும் ஆசிரியர்களுக்கு மட்டுமில்லாமல் மாணவர்களுக்கும் நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது.

சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்துக்கு இணையான பாடத்திட்டத்தைத் தமிழகத்தில் கொண்டு வரும் முன் அண்டை மாநிலங்களுக்குச் சென்று ஆய்வு செய்ய வேண்டும். இப்போதைய நிலையில் ஆந்திர மாணவர்கள்தான் ஐ.ஐ.டி.யில் அதிகமாகச் சேர்கின்றனர்.

சி.பி.எஸ்.இ. பாடத்திட்ட அளவுக்கு மாநிலப் பாடத்திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்துவதற்குக் கண்டிப்பாக ஆசிரியர்களிடமும் அரசியல்வாதிகளிடமும் எதிர்ப்பு இருக்கும்.

ஆனால் எதிர்காலத் தலைமுறையின் நலன் கருதி மாநில அரசு பின்வாங்காமல் இத்திட்டத்தைக் கண்டிப்பாகச் செயல்படுத்த வேண்டும்.

பள்ளிக்கல்வியைப் பொருத்தவரையில் அரசின் அத்தனை முடிவுகளையும் செயல்படுத்துவது ஆசிரியர்களின் கையில்தான் உள்ளது. அதற்காக அவர்களின் தகுதியை உயர்த்தியாக வேண்டும். அரசு இந்த விஷயத்தில் தீர்மானமாக முடிவெடுத்தாக வேண்டும். அப்போதுதான் தமிழக மாணவர்களும் தேசிய அளவிலுள்ள தேர்வுகளில் சிறப்பிடம் பெற்று இழந்த பெருமையை மீட்க முடியும்.

தமிழக மாணவர்களின் திறனை மேம்படுத்தியாக வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருந்து அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. மாற்றத்துக்கு ஆசிரியர் கள் தயாரா? சவாலை ஏற்றால் தமிழக அரசுப் பள்ளிகளில் உண்மையான கல்விப் புரட்சி ஏற்படும் நாள் வெகு தொலைவில் இல்லை.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot