தேர்வு, மதிப்பீடு முறையில் மாற்றம் தேவை : கருத்தரங்கில் கல்வியாளர்கள் வலியுறுத்தல் - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Thursday 20 July 2017

தேர்வு, மதிப்பீடு முறையில் மாற்றம் தேவை : கருத்தரங்கில் கல்வியாளர்கள் வலியுறுத்தல்

'மாணவர்களுக்கு என்ன தெரிகிறது என்ற வகையில், தேர்வு மற்றும் மதிப்பீடு முறையை மாற்ற வேண்டும்' என, கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். தமிழக அரசின் புதிய பாடத்திட்ட கருத்தரங்கில், கல்வியாளர்கள் பலர்பங்கேற்று கருத்து தெரிவித்தனர்.
அவர்கள் பேசியதாவது:

அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர், அனந்தகிருஷ்ணன்: இந்த ஆண்டு, முதல் வகுப்பு படிக்கும் மாணவர், 2030ல், பிளஸ் 2 முடிப்பார்; அப்போது, தொழில்நுட்ப ரீதியாகவும், பொருளாதார அளவிலும் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும். இதை சமாளிக்கும் வகையில், மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும்.பாடத்தில் உள்ளதை மட்டுமே தேர்வில் மதிப்பிடும், தேர்வு முறையை மாற்ற வேண்டும். மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, உள்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த வேண்டும்.ஜெர்மன் துணை துாதர், அஷிம் பேபிக்: கல்வியாளர்களின் கருத்தை கேட்டு, பாடத்திட்டத்தை மாற்றுவது தான், நல்ல அடித்தளம். அடுத்த, 12 ஆண்டுகளில் ஏற்பட போகும் மாற்றங்களுக்கு ஏற்ப, பாடத்திட்டத்தை வகுக்க வேண்டும். ஒரு நாடு, மாநிலம் என, குறுகிய வட்டத்தில் இல்லாமல், சர்வதேச அளவில், அனைத்து நாடுகள், மக்களுடன் பழகும் வகையில் மாணவர்கள் தயாராக வேண்டும். அதற்கேற்ற, சுயமாக நிர்ணயிக்கும், தன்னாட்சி முறை பாடத்திட்டம் தேவை.இங்கிலாந்து, பின்லாந்து, ஜெர்மன் என, பல நாடுகளில், தன்னாட்சி பாடத்திட்ட முறை உள்ளது. சமூக அறிவியல், மனோதத்துவவியல், சூழ்நிலையியல் போன்றவற்றில், அதிக முக்கியத்துவம் தேவை. மாணவர்கள் தாமாக சிந்தித்து, புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள, பாடத்திட்டம் உதவ வேண்டும்.இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை: தமிழகத்தில், அரசு பள்ளியில், தமிழில் தான் படித்து, இந்த நிலைக்கு,நான் வந்துள்ளேன். இஸ்ரோவில், இன்னும் பல விஞ்ஞானிகள், தமிழகத்தை சேர்ந்தவர்களாக பணியாற்றுகின்றனர்.

தாய்மொழி கல்வியை, தவறாக நினைக்கக்கூடாது. ஆனால், பாடப்புத்தகத்தை கடந்து, படிக்க வேண்டும். மாணவர்களுக்கு என்ன தெரியவில்லை என,அளவிடும் தேர்வு முறை மாறி, அவர்களுக்கு என்ன தெரியும் என்ற தேர்வு முறைக்கு வர வேண்டும்.தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் ருஷிகேஷ் சேனாபதி: என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், தேசிய கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில், 2005ல், தேசிய பாடத்திட்ட விதிகள் வகுக்கப்பட்டன. இதில், தற்போதைய மாணவர்களுக்கு தேவையான, அனைத்து பாடத்திட்டமுறைகளும் உள்ளன. ஆனால், எத்தனை பாடத்திட்டம் கொண்டு வந்தாலும், ஆசிரியர்கள் கற்றுக்கொடுக்கும் முறை, மாற வேண்டும். புத்தகங்களில் உள்ளதை அப்படியே கற்பிப்பதுமட்டுமின்றி, அதை, வெளிப்புற அனுபவங்களின் படி, கற்றுத்தர வேண்டும். வகுப்பை விட்டு, பாடப்புத்தகத்தை கடந்து, கற்று தர வேண்டும். வெறும் மதிப்பெண்ணை மட்டும் பார்க்காமல், தனித்திறன் வளர்க்க வேண்டும். தேர்வில், சுயமாக சிந்தித்து பதில்அளிக்கும் சிக்கலான வினாக்களுக்கு, மாணவர்கள் தயாராகவேண்டும்.

பாடத்திட்ட குழு உறுப்பினர், சுல்தான் அகமது இஸ்மாயில்: இந்தியாவில், மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே, உயர் கல்விக்கான மாணவர் சேர்க்கை நடக்கிறது. கல்லுாரி, பல்கலைகளில் மதிப்பெண்ணுக்கே முக்கியத்துவம் கிடைக்கிறது. பாடத்திட்டத்தை தயாரிக்கும், தேசிய கல்வி ஆராய்ச்சி நிறுவனமோ, பள்ளிக்கல்வித்துறையோ, மதிப்பெண் அடிப்படையில் தான் வேலை தருகிறது. அதனால், மாணவர்கள் மதிப்பெண்ணுக்காக படிக்கும் சூழல் உள்ளது. இதை கொள்கை அளவில் மாற்றுங்கள். திறமைக்கு மட்டுமே மதிப்பு என்றால், அதற்கேற்ப, மாணவர்களும், ஆசிரியர்களும் உடனே மாற தயாராக உள்ளனர்.இவ்வாறு அவர்கள் பேசினர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot