நம் மாணவர்களைத் தமிழக அரசும் கைவிடலாமா? - HINDU தலையங்கம் - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Tuesday 18 July 2017

நம் மாணவர்களைத் தமிழக அரசும் கைவிடலாமா? - HINDU தலையங்கம்

பொது மருத்துவம், பல் மருத்துவம் ஆகிய பட்டப் படிப்புகளுக்காக ‘நீட்’ தேர்வு எழுதியவர்களில், மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85% இடங்களை ஒதுக்கித் தமிழக அரசு பிறப்பித்த ஆணையைரத்துசெய்திருக்கிறது சென்னை உயர் நீதிமன்றம்.
இதனால் தமிழக மாணவர்களுக்குக் கொஞ்சநஞ்சம் இருந்த நம்பிக்கையும் வேரோடு பிடுங்கி எறியப்பட்டிருக்கிறது. ஆக, இந்த ஆண்டு ‘நீட்’ தேர்வு மாணவர் சேர்க்கைக்கு அடிப்படையாக இருக்காது என்றும், தமிழக சட்ட மன்றத்தில் இயற்றப்பட்ட மசோதாவுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் கிடைத்துவிடும் என்றும் மாணவர்களை நம்ப வைத்துத் தமிழக அரசு ஏமாற்றியிருக்கிறது என்றுதான் கல்வியாளர்கள் பலரும் கருதுகிறார்கள்.தாழ்த்தப்பட்ட, பின்தங்கிய வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களுக்கான சமுக நீதியையும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவப் படிப்புக்கான வாய்ப்புகளையும் ‘நீட்’ தேர்வும், உயர் நீதிமன்றத்தின் தற்போதைய தீர்ப்பும் ஒரேயடியாகத் துடைத்துப்போட்டிருக்கின்றன.

இதுகுறித்து மத்திய அரசுக்கு எந்தக் கவலையும் இல்லையென்றால், மாநில அரசும் அப்படியே இருப்பது மிகவும் வருத்தத்துக்குரியது.‘நீட்’ தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றால் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களிலும் 72% மத்திய கல்வி வாரியப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கே சென்றுவிடும். தமிழ்நாட்டில் மருத்துவ சேவை சிறப்பாக நடப்பதற்கு முக்கிய காரணம், மருத்துவக் கல்வியின் முதுநிலை படிப்புகளுக்கு, அரசுமருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்குத் தரும் முன்னுரிமைதான் என்பதை மறந்துவிட வேண்டாம்.

மருத்துவக் கல்வி என்பது முழுக்க முழுக்க இப்போது வணிகமயமாகிவிட்டதால், பொதுத் தகுதித் தேர்வு நடத்துவது தகுதியுள்ள மாணவர்களை அடையாளம் காண உதவுகிறது என்று கூறக்கூடும். ஆனால் அது அரசின் சமூக,பொருளாதார லட்சியங்களுக்கு முரணாக இருந்துவிடக் கூடாது. வெவ்வேறு வகையிலான பிராந்தியங்கள், பொருளாதாரப் பின்னணிகள், மொழிகள் உள்ள நாட்டில் எல்லோரும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்திலேயே படிக்க வேண்டும், ஒரே மாதிரியே தேர்வுகளை எழுத வேண்டும் என்று எதிர்பார்ப்பது நியாயமற்றது.

இவ்விஷயத்தில் மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து மத்திய அரசு ஒரு முடிவெடுக்க வேண்டும். அதற்குத் தமிழக அரசு அழுத்தம் கொடுக்க வேண்டியது அவசியம்.

 நாடாளுமன்ற இரு அவைகளையும் சேர்த்து 48 உறுப்பினர்களைக் கொண்டிருக்கும் அதிமுகவுக்கு நம் மாணவர்கள்மீது உண்மையிலேயே அக்கறை இருக்குமென்றால், இந்த பலத்தைக் கொண்டு மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இல்லையேல், தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவுகள் நசுக்கப்பட்டதற்கு ஆளும் அதிமுகவும் ஒரு காரணம் என்ற அவப்பெயரை வரலாறு என்றென்றும் சொல்லிக்கொண்டிருக்கும்!

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot