நல்ல பாடத்திட்டத்தை மாணவர்களுக்கு கொடுங்கள், தயவு செய்து கொடுக்க முயற்சி செய்யாதீர்கள்! - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Friday, 18 August 2017

நல்ல பாடத்திட்டத்தை மாணவர்களுக்கு கொடுங்கள், தயவு செய்து கொடுக்க முயற்சி செய்யாதீர்கள்!

2007 ம் வருடத்திற்குப் பிறகு பள்ளிக் கல்வித் துறையினால் பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது உள்ள சூழ்நிலையில் NEET மற்றும் IIT போன்ற பொது நுழைவுத்தேர்வுகளை எதிர் கொள்ளும் வகையில் பாடத்திட்டம் அமையப் பெற வேண்டும் என்பது அனைவரின் நோக்கமாக இருக்கும்.
இத்தேர்வுகள் தேவையா (அ) தேவை இல்லையா என்பது விவாதத்திற்கு உட்பட்டது எனினும், போட்டி நிறைந்த கூட்டத்தில் தகுதி வாய்ந்த மற்றும் பாடங்களைப் புரிந்து படித்துள்ள மாணவர்களைத் தேர்ந்தெடுக்க இத்தேர்வுகளை அரசு கருவியாக பயன்படுத்துகிறது என்பது திண்ணம்.

பின்லாந்து நாடு நல்ல பாடத்திட்டம் வைத்திருந்தும் சமீபத்தில் தற்போதைய கால வளர்ச்சிக்கு ஏற்ப +2 முடித்த உடனே வேலை வாய்ப்பு பெற, மாணவர்களைத் தயார் செய்யும் நோக்கத்தோடு பாடத்திட்டங்களை இன்னும் சிறப்பாக மாற்றுகிறார்கள்.எவ்வாறு எனில் +2 முடித்த உடன் பீட்ஸா கடையில் வேலை பார்க்க வேண்டும் என்பது மாணவனின் விருப்பம் எனில், பல மொழி கற்றல், பொது மக்களிடம் எவ்வாறு தொடர்பு கொள்ளுதல், நிதி மேலாண்மை என வேலைக்குத் தகுந்தார் போல் அவர்கள் +2 பாடப் பிரிவுகளை தேர்வு செய்து படிக்கலாம் (நம்மூரில் மருத்துவராக +2 வில் உயிரியல் பாடப்பிரிவில் படிப்பது போல). ஆம், வரும் காலத்தில் வேலை வாய்ப்பு அதிகம் பெருகும் சேவைத் துறை, சுகாதாரம் போன்றவற்றில் வேலை பார்க்க இளநிலை அல்லது அதற்கும் குறைவான தகுதி போதும் என்பது கணிப்பு.எனவே, தற்போது வடிவமைக்கப்படும் மேல்நிலைப் பள்ளி பாடத்திட்டம் மாணவர்களின் தற்கால தேவைக்கு ஏற்ப தத்தம் துறையில் ஏற்பட்டுள்ள நவீன மாற்றங்கள் மற்றும் அடிப்படை அறிவை உள்ளடக்கி அதே நேரத்தில் அவர்கள் உயர்கல்வி பயிலும் போது புதுமை செய்ய ஏதுவாகவும் அமையப் பெற வேண்டும். பாடத்திட்டம் வடிவமைப்பதில் உள்ள இடர்பாடுகளை விட, அமையப் பெரும் பாடத்திட்டத்தில் உள்ள நவீன மற்றும் அடிப்படை அறிவியலை பல தரப்பட்ட மாணவர்களுக்கு விளங்க வைப்பதில் தான் சாவல்கள் நிறைந்துள்ளது.

இதற்கு சில பள்ளிக் கூடங்களில் இருக்கும் திறமையான ஆசிரியர்கள் மட்டும் தீர்வாகாது எனினும் தமிழ்நாடு முழுவதும் திறமையான ஆசிரியர்களை உருவாக்குவது எவ்வாறு?.பொறியியல், மருத்துவம் மற்றும் இதர படிப்புகளுக்கு மதிப்பெண் அடிப்படையில் இதுவரை சேர்க்கை நடை பெற்றதால், மாணவர்கள் எளிதாக அதிக மதிப்பெண் எடுக்க வேண்டும் என்பதனை மட்டும் கவனத்தில் கொண்டு அந்தந்த துறையில் உள்ள சிறந்த புத்தகங்களில் உள்ள முக்கிய வார்த்தைகளைக் கொண்ட தொகுப்பாக அதாவது காவிரி ஆறு கடைமடையில் வாய்க்காலாய் மாறுவது போல் சுருங்கிய புத்தகமாய் வடிவமைக்க பட்டிருந்தது. அடுத்தடுத்த வரிகளுக்கு தொடரில்ல, தெளிவில்ல படங்கள்; மேலும் படிப்பு சுமையை எளிமைப்படுத்த முற்பட்டு வினா விடை அடங்கிய புத்தகத்தை கொடுத்து அதிலிருந்த கேள்விகளை வரி மாறாமல் பரிட்சையில் கேட்பது என எளிமையாய் மனப்பாடம் செய்து அதிக மதிப்பெண் பெறுவதற்கான அனைத்து வழிமுறைகளுடன் மிகத் தெளிவாக அமைக்கப்பட்ட பாடத்திட்டம்.

மேநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு மென் மேலும் தங்கள் துறையில் தங்களை விரிவுபடுத்திக்கொள்ள எந்த ஒரு சிறந்த பயிற்சியும் இல்லை. ஆசிரியர்கள் கடிவாளம் போட்ட குதிரையாய் தன் பாடப் புத்தகத்தில் திறமை பெற்றிருந்தாலும் மாணவர்களுக்கு விளங்கும் வகையில் இயற்கையோடும், அன்றாட வாழ்வின் பயன்பாடுகளுடன் தொடர்புப் படுத்தி வகுப்பு எடுக்கும் தேர்ந்த ஆசிரியர்கள் சிலரே. ஆசிரியர்களின் இதர பணிச்சுமைகளினால் (தேர்தல், அலுவலக எழுத்து பணி, சம்பளம் மற்றும் பஞ்ச படிகளைப் பெற போராட்டம் உட்பட) முழு ஈடு பாட்டோடு பாடம் எடுக்க முடிவதில்லை என்பதும் மறுப்பதற்கில்லை.ஏனோ தேர்வு வாரியம் சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்தும், சவுகரியத்திற்காக வாங்கிய தொலைப்பேசி தன் நேரத்தை விழுங்கும் போது சவுகரித்தையே குறை சொல்லும்/ சவாலாக கருதும் மனிதர்களாய், சரிவர பாடம் எடுப்பதுவே இன்னும் சிலர் வகுப்பு எடுப்பதையே சவாலாககருதும் அளவிற்கு அரசு எந்திரம் அவர்களைப் பழக்கி வைத்துள்ளது.

அரசும் ஆசிரியர் அடர் நிற சட்டை அணிந்துள்ளாரா? மீசை எவ்வாறு வைத்துள்ளார், மற்றும் அவரின் வருகை பதிவேடு ஆகியவற்றில் மட்டும் கவனம் செலுத்துவதினால் என்னவோ ஆசிரியர்கள் பாடம் நடத்துவதில் முழு கவனம் செலுத்துவது இல்லை. ஆனால், இச்சூழல்களிலும் என் கடன் பணி செய்து கிடப்பதே எனச் செயல்படும் ஆசிரியர்கள் சிரம் தாழ்ந்து வணங்கப்பட வேண்டியவர்கள்.பாடங்களை எளிதாக விளங்க வைக்க அரசு பல முயற்சிகளை செலவினம் அதிகமானாலும் எடுத்துக் கொண்டு வருகிறது. அவையாவன, நுட்ப வசதிகள் கொண்ட வகுப்பறைகள், வினா விடை அடங்கிய தொகுப்புகள், போட்டித் தேர்வுகள் மூலம் ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பது, தகுதி தேர்வுகள், புத்தாக்க பயிற்சிகள். ஆனால், நல்ல பாடத்திட்டத்தை வழங்காமல், பிரச்சனைகளின் மீது பணத்தை மட்டும் வீசி எறிவது ஒரு போதும் பிரச்சனைக்குத் தீர்வாகாது.

தமிழ்நாடு முழுவதும் சிறந்த ஆசிரியர்களை உருவாக்குவது கடினம் எனினும் ஒரு தேர்ந்த ஆசிரியர் எவ்வாறு பாடம் எடுப்பாரோ அதனை அப்படியே பாட உட்தலைப்புகளில் அறிவுப்பெட்டி என ஒரு கட்டத்தில் கொடுத்துவிட்டால் ஒவ்வொரு மாணவனின் கையிலும் அறிவுப்பெட்டி வடிவில் ஒரு சிறந்த ஆசிரியர் இருப்பார். மேலும், ஒவ்வொரு பாடத்தின் ஆரம்பத்திலும் பாடத்தை ஆர்வத்துடன் படிக்க உற்சாகப்படுத்தும் வகையில் ஒரு முன்னுரை கொடுக்கப்பட வேண்டும். அது அன்றாட வாழ்வின் பயன்கள், பாடம் எவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்தது, அதனை படிப்பதினால் மாணவன்அடையும் பயன், பாடத்தின் வெவ்வேறு பயன்பாடுகள், அப்பாடத்திற்குப் பின்னால் உள்ள ஆச்சரியமூட்டும் கண்டுபிடிப்புகள், அவை உருவான விதம், அப்பாடம் தொடர்புடைய அறிஞர்களின் வாழ்க்கை வரலாறு, என ஏதோ ஒரு வகையில் அமையப் பெறலாம்.

மாணவர்கள் சில பாடங்களை மட்டும் நன்றாகப் படிப்பதற்கு தனிப்பட்ட ஆர்வம் எனினும் குறிப்பிட்ட ஆசிரியர் அந்தப் பாடங்களை நன்றாக நடத்தும் திறமை படைத்தவராக இருப்பார் என்பதனை சில பள்ளிக்கூடங்களில் கவனிக்க முடியும். சிறந்த ஆசிரியர்கள் பள்ளிக் கூடங்களின் மதிப்பு மிக்க சொத்து. சிறப்பாக பாடம் நடத்துவது தனிப்பட்ட ஆசிரியரின் முயற்சி எனினும் பாடப் புத்தகத்தை சரியாகவடிவமைத்தால் பாடப்புத்தகம் தமிழ்நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கு சிறந்த ஆசிரியராக மாறிவிடும். அதாவது ஒவ்வொரு வகுப்பையும் எவ்வாறு நடத்த வேண்டும், தன் சுற்றத்தில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு பாடங்களை எவ்வாறு விளக்க வேண்டும் என்பதனை ஒரு சிறியகுறிப்பாக (அறிவுப்பெட்டி) ஒவ்வொரு பாட உட்தலைப்பிற்கும் கொடுக்க பட வேண்டும்.

உதாரணமாக, இயற்பியலில் தனி ஊசல் பற்றி பாடம் எடுக்கும் போது தொட்டில் எவ்வாறு செயல்படுகிறது, ஏன் தொட்டிலை ஆட்டும் போது குழந்தை எளிதாக உறங்குகிறது, ஏன் குறிப்பிட்ட இடைவெளியில் சீராக ஆட்ட வேண்டும் என்பதனை விளக்கினால் போதும். மாணவர்கள் harmonic motion, damping என்பவைகளை மிக எளிதாக புரிந்து கொள்வார்கள். படிப்பதை கடினமாக கருதும் மாணவர்களுக்கு அவர்களுக்கு தெரிந்த மற்றும் புரியும் மொழியில் விளக்குவதற்கே ஆசிரியர்கள். மூங்கிலே காணாத மாணவனுக்கு கரும்பை ஒப்பீடு செய்து இனிமையாய் வகுப்பு எடுங்கள். படத்தில் நீங்கள் பார்ப்பது அமெரிக்காவின் எம்.ஐ.டி பேராசிரியர் Walter Lewin எவ்வாறு பாடம் நடத்துகிறார் என்பதை விளக்கும் படம்.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot