அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை தீபாவளி நாளில் பணியாற்றும்படி கட்டாயப்படுத்துவதா?- ராமதாஸ் கண்டனம் - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Saturday 14 October 2017

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை தீபாவளி நாளில் பணியாற்றும்படி கட்டாயப்படுத்துவதா?- ராமதாஸ் கண்டனம்

தீபாவளி அன்று பணி செய்யும்படி கல்வித்துறைஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஆணையிட்டிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில்,
''ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் என்று என்று கோரி வேலைநிறுத்தம் செய்த ஆசிரியர்களும், அதிகாரிகளும் தீபவாளித் திருநாள் அன்று பணியாற்ற வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டிருக்கிறது.ஜாக்டோ-ஜியோ அமைப்பில் அங்கம் வகிக்கும் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் அமைப்பினர் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 7-ஆம்தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் மேற்கொண்டனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த மதுரை உயர் நீதிமன்றம் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் வேலை நிறுத்தத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்றுகடந்த மாதம் 16-ஆம் தேதி ஆணையிட்டதைத் தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.

அதேநேரத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் வேலைநிறுத்தம் செய்த காலத்திற்கான ஊதியத்தை பிடித்தம் செய்யக்கூடாது என்றும்,மாறாக சனிக்கிழமைகளில் பணியாற்ற ஆணையிடலாம் என நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் அடங்கிய அமர்வு ஆணையிட்டது.அதன்படி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பிடித்தம் செய்யாமல் ஊதியம் வழங்கப்பட்டது. வேலை நிறுத்தம் செய்த காலத்திற்கு பதிலாக இன்று (14.10.2017) அரசு ஊழியர்களும், பல மாவட்டங்களில் உள்ள ஆசிரியர்களும் பணியாற்றியுள்ளனர்.

அடுத்ததாக வரும் 18.10.2017 அன்று பணியாற்றும்படி கல்வித்துறை ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஆணையிடப்பட்டுள்ளது.வேலை நிறுத்தம் செய்த கல்வித்துறை ஊழியர்களிடம் அதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் பள்ளிக்கல்வித் துறை இணை செயலாளர் எஸ்.வேதரத்தினம் பெயரில்இதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அனைத்து ஆசிரியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறதா, இல்லையா? என்பதை உறுதி செய்ய முடியவில்லை.ஆனால், தலைமைச் செயலகம் மற்றும் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள பள்ளிக்கல்வித்துறை அலுவலகங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு இத்தகைய ஆணை அனுப்பப்பட்டுள்ளது. பள்ளி ஆசிரியர்கள் சிலருக்கும் இந்த ஆணை கிடைத்துள்ளது.வரும் 18.10.2017 அன்று தீபாவளித் திருநாள் கொண்டாடப்படவுள்ளது.

அன்றைய நாளில் அலுவலகம் வந்து பணிகளை கவனிக்கும்படி உத்தரவிடுவதைவிட பெரிய அபத்தம் எதுவும் உலகில் இருக்க முடியாது. கல்வித்துறையைப் பொறுத்தவரை அதிகாரிகளின் பணி என்பது ஆசிரியர்களில் எவரேனும் வந்து கோரிக்கை மனு அளித்தால் அவற்றை ஆய்வு செய்து முடிவெடுப்பது, பள்ளிகளுக்கு ஆய்வு செல்வது ஆகியவைதான்.ஆசிரியர்களைப் பொறுத்தவரை மாணவர்களுக்கு பாடம் நடத்துவதுதான் பணியாகும். தீபவாளித் திருநாளுக்கு எந்த மாணவர்களும் பள்ளிக்கு வரமாட்டார்கள், எந்த ஆசிரியரும் கோரிக்கைகளுடன் பள்ளிக் கல்வித்துறை அலுவலகங்களுக்கு செல்லப் போவதில்லை.

தீபாளிக்கு தலைமைச் செயலகமே மூடப்பட்டிருக்கும் நிலையில் சிலர் மட்டும் எவ்வாறு பணியாற்ற முடியும். அவ்வாறு இருக்கும் போது தீபாவளி அன்று பணி செய்யும்படி கல்வித்துறை அதிகாரிகளுக்கு ஆணையிட்டிருப்பது கடுமையாக கண்டிக்கத்தக்கது. இது தேவையற்ற குழப்பங்களை ஏற்படுத்தும்.வேலை நிறுத்தக் காலத்தை ஈடு செய்யும் வகையில் பணியாற்ற வேண்டும் என்று ஆணையிட்டால் அனைவருக்கும் ஒரே மாதிரியாகத்தான் ஆணையிட வேண்டும். ஆனால், குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் இத்தகைய ஆணை பிறப்பிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இது திட்டமிட்ட பழிவாங்கும்நடவடிக்கையாக இருக்கலாம் அல்லது 18-ஆம் தேதி என்ன விடுமுறை நாள் என்பதே தெரியாமல் இப்படி ஓர் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கலாம். எப்படியாக இருந்தாலும் இரண்டுமே தவறு தான்.அமைச்சர் நிலையில் விவாதிக்காமல் இப்படி ஒரு முடிவை இணைச் செயலாளராக இருப்பவர் எடுக்க முடியாது. மிகவும் அபத்தமான இந்த உத்தரவு உடனடியாக திரும்பப்பெறப்பட வேண்டும். இதுகுறித்து விசாரித்து இதற்கு காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot