NEET - க்கு எதிராக அரசு வேலையை ராஜினமா செய்த ஆசிரியை சபரிமாலா - வின் தற்போதைய நிலை - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Thursday 26 October 2017

NEET - க்கு எதிராக அரசு வேலையை ராஜினமா செய்த ஆசிரியை சபரிமாலா - வின் தற்போதைய நிலை


‘அனிதா' தமிழகத்தில் மறக்கமுடியாத ஒரு பெயராக மாறிவிட்டது. அரியலூரைச் சேர்ந்த அனிதா 12-ம் வகுப்பில் 1176 மதிப்பெண் பெற்று, மருத்துவராகிவிடுவோம் எனும் கனவில் இருந்தார். ஆனால், இந்தக் கல்வியாண்டில் நுழைக்கப்பட்ட நீட் தேர்வு அவரின் கனவைக் கலைத்தெறிந்தது.

நீட் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை தனது போராட்டத்தைத் தொடர்ந்தார் அனிதா. ஆனால், ஏதோ ஒரு தருணத்தில் தனது மருத்துவராகும் லட்சியம் நிறைவேறாது என்பதை உணர்ந்திருக்கிறார். அந்த ஏமாற்றத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தன்னைத்தானே மாய்த்துக்கொன்றார்.

இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. மாணவர்கள் கல்வி நிலையங்களைப் புறக்கணித்துப் பல போராட்டங்களை நடத்தினர். அரசியல் கட்சிகளும் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். ஆனால், பலரை வியப்புறச் செய்தது ஆசிரியை சபரிமாலா தனது அரசுப் பணியைத் துறந்தது.

எளிய குடும்பத்தில் பிறந்த அனிதாவின் லட்சியம் தோற்றுப்போனதை மனம் தாளாமல், அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதத்தில் ஆசிரியை சபரிமாலா பள்ளி வளாகத்தில் தனது ஏழு வயது மகன் ஜெய சோழனுடன் போராட்டத்தைத் தொடங்கினார். ஆனால், அரசு ஊழியர்கள் அரசுக்கு எதிராகப் போராடக் கூடாது என்று கல்வி அதிகாரிகள் வலியுறுத்த, தனது ஆசிரியர் பணியைத் தூக்கி எறிந்தார். அவரின் முடிவைக் கேட்டு, பலரும் அதிர்ச்சியடைந்தனர். அவர்களில் சிலர் இது அவசரப்பட்டு எடுத்த முடிவு என்றும் உணர்ச்சி வேகத்தில் எடுத்த முடிவு என்றும் விமர்சனம் செய்தனர். இவை நடந்து கிட்டத்தட்ட இரு மாதமாகப் போகிறது. இந்நிலையில் சபரிமாலா என்ன செய்துகொண்டிருக்கிறார் என அவரோடு பேசினோம்.

அனிதா

"ஏழை மாணவியின் லட்சியம் சிதறியதைப் பொறுக்க முடியாமல் என் எதிர்ப்பினை வெளிப்படுத்தும் விதத்தில் என் பணியை ராஜினாமா செய்தேன். சிலர் நான் அவசரப்பட்டு விட்டதாக நினைத்தனர். சில நாள்கள் கழித்து வருத்தப்படுவேன் என்றும் கூறினர். ஆனால், கிட்டத்தட்ட இரு மாதமாகிறது நான் எடுத்த முடிவை நினைத்து துளிகூட வருத்தமில்லை. சரியான முடிவு எடுத்திருப்பதாகவே நான் இப்பவும் நினைக்கிறேன்.

எனது ராஜினாமா கடிதத்தை முறைப்படி கொடுக்கச் சொன்னார்கள். அதேபோலச் செய்தேன். அது ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்பின் அரசு தரப்பில் யாரும் பேசவில்லை. அதை நானும் எதிர்பார்க்கவும் இல்லை. இந்த இடைப்பட்ட காலத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்களைச் சந்திக்கும் வாய்ப்புகள் கிடைத்தன. அதைப் பயன்படுத்தி, கல்வி சார்ந்த விழிப்புஉணர்வை ஏற்படுத்த முயன்று வருகிறேன்.

அனிதாவின் வீட்டுக்கு நான் சென்றபோது, அனிதாவுக்கான முப்பதாம் நாள் படையலுக்குத் தயார் செய்துகொண்டிருந்தனர். அந்தச் சின்னஞ்சிறிய வீட்டைப் பார்த்தும், இங்கிருந்துதானே அவ்வளவு பெரிய கனவைக் கண்டிருக்கிறாள். அதை நிறைவேற்றிக்கொள்ள நொடியும் சோர்ந்திராமல் படித்தாள்.

ஆனால், அத்தனையும் வீணானதே என நினைத்துப் பெரும் அழுத்தம் மனதைச் சூழ்ந்துகொண்டது. அனிதாவின் அப்பா, 'உன் முகத்துல கூட அனிதாவோட சாயல் இருக்குமா!" என்றபோது நான் மூச்சற்று நின்றேன். அவரை 'அய்யா' என்று  பேசிக்கொண்டிருந்த நான், சிறிது நேரத்திலேயே என்னையுமறியாமல் 'அப்பா' என்று அழைக்க ஆரம்பித்துவிட்டேன். ஊருக்கு வந்ததும் என்னால் தூங்கவே முடியவில்லை. ஒரு நாளில் ஒரு மணிநேரம், இரண்டு மணிநேரம் தூங்கினாலே அதிகம்.

கல்வி சார்ந்து பயணத்தை நான் தொடர்வதற்கு என் கணவரும் முக்கியக் காரணம். என் வீட்டிலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் நான் பணியாற்றிய பள்ளியிருக்கிறது. அங்கேதான் என் மகனும் படித்துவந்தான். நான் வேலையை விட்டதும் அவனை அழைத்துச்செல்ல முடியவில்லை, அதனால் பள்ளியிலிருந்து நிறுத்திக்கொண்டோம்.

கிட்டத்தட்ட இரண்டு மாதமாயிற்று. அதற்கு அடுத்து அவனை வேறு பள்ளியில் சேர்க்கவும் இல்லை. அவனும் தன் கல்வியைத் தற்காலிகமாக நிறுத்திவிட்டு, போராட்டத்துடன் ஒரு பகுதியாக என்னுடன் பயணிக்கிறான். அனிதா வீட்டுக்கு அவனும் வந்தான். ஏராளமான கேள்விகளைக் கேட்கிறான். அவனுக்குக் கல்வியை என்னால் தந்துவிட முடியும் என்றாலும் அவன் வயது பிள்ளைகளோடு இணைந்து விளையாடும் வாய்ப்பைத் தர முடியாது அல்லவா... நிதானமாக முடிவெடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறேன்.

மகனின் டிசி வாங்க, பள்ளிக்குச் சென்றபோது என்னிடம் படித்த மாணவர்கள் அழுதுகொண்டே பேசியபோது நெகிழ்ந்துபோனேன். கல்வி என்பது எல்லோருக்கும் சமமாகக் கிடைக்க வேண்டும். அதற்கு என்னால் இயன்ற பங்களிப்பைத் தொடர்ந்து செய்வேன்." என்றார் சபரிமாலா.

ஒருவரை உயர்த்துவதில் கல்விக்கே பெரும் பங்கு இருக்கிறது. அது, பேதமில்லாமல் அனைவருக்கும் கிடைக்கும் நாள் விரைவில் வரட்டும்.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot