தேர்வு முடிந்து 4 மாதங்கள் ஆகியும் முடிவு வெளியிடப்படாத சிறப்பாசிரியர் தேர்வு: 35 ஆயிரம் பேர் எதிர்கால கனவுகளோடு காத்திருப்பு - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Saturday 20 January 2018

தேர்வு முடிந்து 4 மாதங்கள் ஆகியும் முடிவு வெளியிடப்படாத சிறப்பாசிரியர் தேர்வு: 35 ஆயிரம் பேர் எதிர்கால கனவுகளோடு காத்திருப்பு

தையல், ஓவியம் உள்ளிட்ட பணிகளுக்கான சிறப்பாசிரியர் தேர்வு முடிந்து 4 மாதங்கள் ஆகியும் இன்னும் தேர்வு முடிவுகள்வெளியாகாததால் 35 ஆயிரம் தேர்வர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
அரசு பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி உள்ளிட்ட சிறப்புப் பாடங்களை கற்றுக்கொடுக்க சிறப்பாசிரியர்கள் பணிபுரிகிறார்கள். இதுவரையில் சிறப்பாசிரியர் பணியிடங்கள் பதிவுமூப்பு அடிப்படையில் நிரப்பப்பட்டு வந்தன. இந்த ஆண்டு முதல்முறையாக சிறப்பாசிரியர் தேர்வுமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போட்டித்தேர்வு நடத்தி சிறப்பாசிரியர்களை தேர்வுசெய்ய அரசு முடிவு செய்தது.

ஆன்லைன் விண்ணப்பம்

இதைத்தொடர்ந்து, உடற்கல்வி, இசை, ஓவியம், தையல் ஆகிய பாடங்களில் 1,325 சிறப்பாசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூலை மாதம் 26-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இதற்கானவிண்ணப்பங்கள் ஜூலை 27 முதல் ஆகஸ்டு 18-ம் தேதி வரை ஆன்லைன் மூலமாக பெறப்பட்டன. செப்டம்பர் மாதம் 23-ம் தேதி எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வை 35,781 பேர் எழுதினர்.எழுத்துத்தேர்வு முடிந்தவுடன் ஆசிரியர் தேர்வு வாரியம் கீ ஆன்சர் எனப்படும் உத்தேசவிடைகளை வெளியிடுவது வழக்கம். அதன்படி, அக்டோபர் 10-ம் தேதி கீ ஆன்சர் வெளியிடப்பட்டது. பொதுவாக கீ ஆன்சர் வெளியிட்ட அடுத்த சில வாரங்களில் தேர்வு முடிவும், இறுதி விடைகளும் வெளியிடப்படும். ஆனால், சிறப்பாசிரியர் தேர்வில், கீ ஆன்சர் வெளியிட்டு 3 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.ஆசிரியர் தேர்வு வாரியத்தின் 2017 வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையின்படி, சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் கடந்த நவம்பரில் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. எழுத்துத்தேர்வு முடிவடைந்து 4 மாதங்கள் ஆகியும் தேர்வு முடிவுகள் வெளியாகாததால் தேர்வர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

உயர் நீதிமன்றம் தடை

இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, “சிறப்பாசிரியர் தேர்வில் இடம்பெற்றுள்ள உடற்கல்வி ஆசிரியர் தேர்வு தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் சிறப்பாசிரியர் தேர்வு முடிவு வெளியிடத் தடை இருந்து வருகிறது.இந்தத் தடை ஆணையை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தடை ஆணை நீங்கியதும் தேர்வு முடிவுகள் உடனடியாக வெளியிடப்படும்” என்று தெரிவித்தனர்.சிறப்பாசிரியர் தேர்வுக்கு முன்பாக நடந்த அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் மதிப்பெண் முறைகேடு தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். முதலில் நடத்தப்பட்ட விரிவுரையாளர் தேர்வு முடிவை வெளியிட்டுவிட்டு அதைத்தொடர்ந்து சிறப்பாசிரியர் தேர்வு முடிவை வெளியிட ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டு வருவதாகத் தெரிகிறது.இதற்கிடையே, சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் தயார்நிலையில் இருப்பதாகவும், நீதிமன்றத் தடை ஆணை நீங்கியதும் தேர்வு முடிவுகளை உடனடியாக வெளியிட, ஆசிரியர் தேர்வு வாரியம் விரும்புவதாகவும் தெரிகிறது.

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் போலீஸ் விசாரணை தொடர்ந்து நீண்டுகொண்டே போகிறது. இதில் தொடர்புடையவர்கள் கைதுசெய்யப்பட்டு வருகிறார்கள்.இதனால், விரிவுரையாளர் தேர்வு முடிவை இப்போதைக்கு வெளியிட வாய்ப்பு இல்லை. எனவே, தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில்கொண்டு, சிறப்பாசிரியர் தேர்வு முடிவு மீதான தடை ஆணையை நீக்கவும், அதிலும் காலதாமதம் ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட உடற்கல்வி ஆசிரியர் தேர்வு முடிவை நிறுத்திவைத்துவிட்டு தையல், ஓவியம், இசை ஆகிய இதர பாடங்களுக்கான தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தேர்வர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

அமைச்சர் உறுதி

இதற்கிடையே, பொங்கல் பண்டிகையையொட்டி பள்ளிக் கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனைசிறப்பாசிரியர் தேர்வெழுதிய பலர் சந்தித்து வாழ்த்து தெரிவி்க்கும்போது, “சிறப்பாசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ஜெயலலிதாவின் பிறந்த நாளில் (பிப்ரவரி 24) பணிநியமன ஆணை வழங்கப்படும்” என்று உறுதியளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot