ஏர் ஏசியா விமான நிறுவனம் 99 ரூபாய்க்குவிமானச் சேவை என்ற திட்டத்தை அறிவித்துள்ளது.ஏர் ஏசியா விமான நிறுவனம் இந்தியாவில் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சேவைகளை வழங்கிவருகிறது.
உள்நாட்டுச் சேவையை ஊக்குவிக்கும்விதமாக இந்நிறுவனம் 99 ரூபாய்க்கு விமானச் சேவை என்ற ஊக்குவிப்பு அடிப்படையிலான திட்டத்தை அறிவித்துள்ளது. இந்தத் திட்டத்தின் அடிப்படையில் இந்தியாவின் ஏழு நகரங்களுக்குப் பயணிக்கலாம் என்று ஏர் ஏசியா அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “99 ரூபாய் என்ற குறைந்தபட்ச கட்டணத்தில் இந்தியாவின் பெங்களூரு, ஐதராபாத், கொச்சி, கொல்கத்தா, புதுடெல்லி, புனே, ராஞ்சி ஆகிய ஏழுநகரங்களுக்கு ஊக்குவிப்பு அடிப்படையில் விமானச் சேவை வழங்கப்படுகிறது. இந்த விமானச் சேவை ஜனவரி 15 முதல் 31 வரை வழங்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு ஜனவரி 14 முதல் 21 வரை நடைபெறுகிறது” என்று தெரிவித்துள்ளது.
ஏர் ஏசியா மட்டுமின்றி ஏர் ஏசியா பெர்ஹாட், தாய்லாந்து ஏர் ஏசியா, ஏர் ஏசியா X மற்றும் இந்தோனேசியா ஏர் ஏசியா X உள்ளிட்ட இக்குழுமத்தின் மற்ற விமானங்களுக்கும் இந்த குறைந்த கட்டண சலுகை அளிக்கப்படுகிறது. ஏர் ஏசியா மொபைல்ஆப் மற்றும் ஏர் ஏசியா இணையதளம் மூலம் முன்பதிவு செய்பவர்களுக்குக் கட்டணச் சலுகையும் வழங்கப்படுகிறது.
மேலும், இந்தியாவிலிருந்து ஆக்லாந்து, பாலி, பாங்காக், கோலாலம்பூர், மெல்போர்ன், சிங்கப்பூர், சிட்னி உள்ளிட்ட 10 நாடுகளுக்குக் குறைந்த கட்டணத்தில் ஏர் ஏசியா நிறுவனம் விமானச் சேவை வழங்கிவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.