10-ம் வகுப்பு பொதுத் தேர்வு, பிளஸ்டூ தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் புதிய முறையை பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்த உள்ளது. - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Wednesday, 9 May 2018

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு, பிளஸ்டூ தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் புதிய முறையை பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்த உள்ளது.

10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகளைபுதிய முறையில் பள்ளிகளுக்கான இமெயிலில் நேரடியாக அரசுத் தேர்வுத்துறை இந்த ஆண்டு வெளியிடுகிறது.
தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகளை அரசுத் தேர்வுத்துறை நடத்தி வருகிறது.தமிழக அரசுத் தேர்வுத்துறை 1972-ம் ஆண்டு பள்ளிக்கல்வித்துறையில் இருந்து பிரிக்கப்பட்டு, அரசுத் தேர்வுகள் ஆணையரகம் என உருவாக்கப்பட்டது. 11 ம் வகுப்பு வரை பயின்ற மாணவர்களுக்கான தேர்வினை நடத்தித் தேர்வு முடிவினை வெளியிட்டனர்.அப்போது தேர்வு முடிவுகள் வெளியிடும் போது அதனை செய்தித்தாள்களில் தேர்வர்களின் பதிவு எண்களை பிரசுரம் செய்வர். தேர்வு எழுதியவர்கள் தங்களின் தேர்வு முடிவினை அறிவதற்காகவும், பெற்றோர்கள் தங்களின்குழந்தைகளின் தேர்வு முடிவினை அறியவும் ஆவலுடன் செய்தித்தாள்களை வாங்கித் தேர்வு பதிவு எண்களைப் பார்த்து அறிந்து கொள்வர். 11 ம் வகுப்பு வரை பயின்ற மாணவர்கள் அதன்பின்னர் பியுசி படிப்பைக் கல்லூரியில் சேர்ந்து படிக்க வேண்டும்.இந்த முறை 1978-ம் ஆண்டில் மாற்றப்பட்டு, 10 ம் வகுப்பு, 12ம் வகுப்பு எனப் பிரித்தனர். அது வரை 11 ம் வகுப்பு வரை நடைபெற்ற தேர்வானது, 10-ம் வகுப்பிற்கு(எஸ்.எஸ்.எல்.சி) ஒருபொதுத் தேர்வும், 12 ம் வகுப்பிற்கு(பிளஸ்-2) ஒரு பொதுத் தேர்வும் நடத்தப்பட்டது.

தேர்வு முடிவுகள் வெளியான இரு தினங்களுக்குள் மாணவர்கள் தேர்வு எழுதிய பள்ளிகளுக்கு அவர்களின் மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பதிவேடு அனுப்பப்பட்டன. மாணவர்கள் மதிப்பெண் பதிவேட்டில் கையெழுத்திட்டு, தங்களின் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம். மதிப்பெண் சான்றிதழில் மாணவரும், பெற்றோர் அல்லது பாதுகாவலரும் கையெழுத்திட வேண்டும்.இந்த முறையில் தொடர்ந்து 1998 ம் ஆண்டு வரை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. ஆனால் 1999 ம் ஆண்டு மார்ச், ஏப்ரல் மாதம் நடைபெற்ற 10,12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியிடும் போது புதிய முறையாக அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடும் அன்றே மாணவர்கள் தங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்திலோ அல்லது பள்ளியிலோ தங்களின் பாடவாரியானமதிப்பெண்களை அறிந்து கொள்ள முடிந்தன.

அப்போதும் தொடர்ந்து தேர்வு முடிவுகள்செய்தித்தாள்களுக்கு பதிவு எண்களை வெளியிட அளிக்கப்பட்டு வந்தன. ஆனால் 2002-ம் ஆண்டு செய்தித்தாள்களுக்கு பதிவு எண்களை வெளியிடுவதற்கு சிடி அளிக்கப்பட்டு வந்த முறை நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2003-ம் ஆண்டு முதல் அரசுத் தேர்வுத்துறையின் தேர்வு முடிவுகளை வெளியிட விரும்பும் இணையதளத்தினை நடத்தும் நிறுவனங்கள் பணம் செலுத்தித்தேர்வு முடிவுகளைப் பெற்று வெளியிடும்முறை அறிமுகம் செய்யப்பட்டது.இந்த முறையின் மூலம் மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளை இணையதளங்களின் மூலம் உடனடியாக அறிந்தனர். ஆனால் 2013-ம் ஆண்டு முதல்தனியார் நிறுவனங்கள் இணையதளம் மூலம் தேர்வு முடிவினை வெளியிடுவதற்கு வழங்கப்பட்டு வந்த சி.டி.கள் நிறுத்தப்பட்டன. அதன் பின்னர் 2014-ம் ஆண்டு முதல் அரசுத் தேர்வுத்துறையின் அதிகாரப்பூர்வமான இணையதளத்தில் மட்டும் வெளியிடப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 10,12ம் வகுப்புத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மதிப்பெண் சான்றிதழுக்கு பதிலாகத் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மதிப்பெண் சான்றிதழ் தேர்வு முடிவு வெளியிடப்பட்ட நாட்களில் இருந்து 90 நாட்கள் செல்லும் வகையில் அரசு அறிவித்தது. இதன் மூலம் 10,12-ம் வகுப்புத் தேர்வில் ஒரு சில பாடத்தில்தோல்வி அடைந்து, சிறப்புத் துணைத் தேர்வு எழுதி தேர்ச்சி பெறும் மாணவர்களின் மதிப்பெண்களும் மதிப்பெண் பட்டியலில் இடம் பெற்றது.

கடந்த 2017ம் ஆண்டு முதல்முறையாக 10,12-ம் வகுப்புத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ்.மூலம் வெளியிடப்பட்டன. மேலும் மாநில, மாவட்ட அளவில் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் மாணவர்களின் பெயர் விபரம், மாவட்ட அளவில் முதல் 3 இடங்களைப் பிடிக்கும் மாணவர்களின் விபரம், பாடவாரியாக முதல் 3 இடங்களைப் பிடிக்கும் மாணவர்களின் விபரம் தரவரிசை (ரேங்க்) அளிக்கும் முறை ஒழிக்கப்பட்டது.

இந்நிலையில் இதில் அடுத்தக்கட்ட முன்னேற்றமாக இந்த ஆண்டு பள்ளி மாணவர்களின் தேர்வு முடிவுகளை மாணவர்கள் பதிவு செய்த செல்போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ்.மூலமும், பள்ளியின் இ-மெயில் முகவரிக்கு நேரடியாக அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியலை அனுப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது.தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மாநிலப் பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கான 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 1-ம் தேதி முதல் ஏப்ரல் 6-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த முடிவுகள் வரும் 16-ம் தேதி வெளியிடப்படுகிறது.

11-ம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் 7-ம் தேதி துவங்கி ஏப்ரல் 16-ம் தேதி முடிவடைந்தது. இதன் தேர்வு முடிவுகள் மே 30-ம் தேதி வெளியிடப்படுகிறது.10-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச்16-ம் தேதி துவங்கி ஏப்ரல் 20-ம் தேதி முடிவடைந்தது. இதன் மே 23-ம் தேதி வெளியிடப்படுகிறது. அரசுத் தேர்வுத்துறை இயக்கத்தின் அனைத்துச் செயல்பாடுகளும் ஆன்லைன் முறையில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 மேலும் தேர்வு முடிவுகள் முன்கூட்டியே எந்தப் பள்ளியும் அறிந்து கொள்வதை தடுக்கும் வகையில் இந்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய பட்டியலை பள்ளிகளுக்கு அனுப்பும் புதிய முறையை அரசுத் தேர்வுத்துறை இயக்ககம் அறிமுகம் செய்துள்ளது.இது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் ஏற்கனவே வெளியிட்ட அரசாணையில், மார்ச் 2018 முதல் 11,12,10-ம் வகுப்பு பொதுத் தேர்வுகளின் தேர்வு முடிவுகள் அடங்கியஅட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் ஆன்லைன் மூலமாக அனைத்து பள்ளிகளும் பதிவிறக்கம் செய்துக் கொள்ள வழிவகை செய்வதற்கு அரசுத் தேர்வுத்துறைக்கு அனுமதி அளிக்கப்படுகிறது என தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு அதற்கான பணிகளை அரசுத் தேர்வுத்துறை மேற்கொண்டு வருகிறது. வரும் 16 ந் தேதி காலையில் பள்ளிகளுக்கு அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் ஆன்லைன் மூலம் அனுப்பப்படுகிறது. அரசுத் தேர்வுத்துறையின் இணையதளத்தில் தேர்வு முடிவுகளின் விவரங்கள் வெளியிடப்படுகிறது என அரசுத் தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot