பள்ளிக் கல்வி துறையின் செயலர் உதயசந்திரனின் அதிகாரம் குறைக்கப்பட்டதற்கு கல்வியாளர்கள் கண்டனம்: சீர்திருத்தங்கள் செய்தவர், ஆசிரியர்களின் குறைகளைப் போக்கியவர் என கருத்து. - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Friday 25 August 2017

பள்ளிக் கல்வி துறையின் செயலர் உதயசந்திரனின் அதிகாரம் குறைக்கப்பட்டதற்கு கல்வியாளர்கள் கண்டனம்: சீர்திருத்தங்கள் செய்தவர், ஆசிரியர்களின் குறைகளைப் போக்கியவர் என கருத்து.

பள்ளிக் கல்வித் துறை செயலர் உதயசந்திரனின் அதிகாரம் குறைக்கப்பட்டிருப்பதற்கு கல்வியாளர்கள், ஆசிரியர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.தமிழக பள்ளிக் கல்வித் துறைச் செயலராகப் பணியாற்றுபவர் ஐஏஎஸ் அதிகாரி உதயசந்திரன்.
இத்துறையில் பல்வேறு சீர்திருத்தங்கள், புதுமைகள் நிகழக் காரணமாக இருப்பவர் என்று பெயரெடுத்தவர். பள்ளிகள் இடையே பாகுபாடு ஏற்படுத்தும் பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி தேர்வு ரேங்க் முறை ஒழிப்பு, அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள் ஏற்படுத்துதல், தமிழக மாணவர்களை தேசிய அளவிலான நுழைவுத்தேர்களுக்கு தயார்படுத்தும் வகையில் பிளஸ் 1 வகுப்புக்கு பொதுத்தேர்வு, தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டு மாணவர் சேர்க்கைக்கு ஆன்லைன் விண்ணப்ப முறை, நீண்டகாலமாக மாற்றப்படாமல் இருந்த பாடத்திட்டத்தை தரம் உயர்த்த நடவடிக்கை என பல மாற்றங்களுக்கு காரணமாக இருப்பவர்.இந்த நிலையில், அவரை மாற்றப்போவதாக தகவல் வெளியானதும் ஆசிரியர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. அவரை இடமாற்றம் செய்யக்கூடாது எனஉயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, பாடத்திட்டக் குழுவில் இருந்து அவரை மாற்றக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டது.

உயர்நீதிமன்ற உத்தரவு காரணமாக பள்ளிக் கல்வித் துறை செயலர் உதயசந்திரன் அடுத்த 3 ஆண்டுகளுக்கு இடமாற்றம் செய்யப்பட மாட்டார் என்ற சூழல் உருவானது. இந்நிலையில், அவருக்கு மேல் முதன்மைச் செயலராக பிரதீப் யாதவை தமிழக அரசு கடந்த 24-ம் தேதி இரவு திடீரென நியமித்தது. உதயசந்திரனுக்கு பாடத்திட்ட தயாரிப்பு பணி மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. அவரது அதிகாரம் குறைக்கப்பட்டிருப்பதற்கு கல்வியாளர்கள், ஆசிரியர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் கூறியிருப்பதாவதுதமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர் சாமி.சத்தியமூர்த்தி:ஒரு துறையில் செயலர் இருக்கும்போது புதிதாக இன்னொருவரை முதன்மைச் செயலராக நியமிப்பது நடைமுறை சிக்கல்களை ஏற்படுத்தும். 2 எஜமானர்களுக்கு ஒரு தொழிலாளி பணிசெய்யக்கூடிய இக்கட்டான சூழல், கல்வித்துறை அதிகாரிகள், ஆசிரியர்களுக்கு ஏற்படும். துறையில் தீர்க்கப்படாமல் இருந்த பல பிரச்சினைகள் தீர்க்கப்படுவதற்கான சூழல் உதயசந்திரன் செயலரான பிறகுதான் உருவானது. தற்போது அதற்கு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மான்ட்:உதயசந்திரன் செயலர் ஆன பிறகு, நிறைய சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இத்துறையில் ஒரு மறுமலர்ச்சி ஏற்படும் என்று ஆசிரியர்கள், பொதுமக்கள் நம்பியிருந்த நிலையில், திடீரென அவரது அதிகாரம் குறைக்கப்பட்டிருப்பது மிகுந்தவருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க சிறப்பு கவனம் செலுத்தினார். அவர் ஆசிரியர்களின் பிரச்சினைகளை நன்கு அறிந்தவர். ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சருடன் தொடர்ச்சியாக 23 மணி நேரம் அமர்ந்து கருத்துகளை கேட்டார். அந்த கோரிக்கைகளை எல்லாம் அமல்படுத்தும் சூழலில், புதிதாக ஒருவரை நியமித்திருப்பதால், கோரிக்கைகளை அவர் ஆரம்பத்தில் இருந்து கேட்கவேண்டி வரும். மேலும் ஆசிரியர்களின் பிரதிநிதி என்ற முறையில் ஊதியக்குழுவிலும் உதயசந்திரன்உறுப்பினராக உள்ளார். தற்போது, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் தொடங்கியுள்ள நிலையில், ஊதியக்குழு பிரச்சினை மேலும் சிக்கலாகும்.

கல்வியாளர் பி.பி.பிரின்ஸ் கஜேந்திரபாபு:உதயசந்திரன் ஓர் இலக்கியவாதி. மாணவர்கள் சார்ந்த வகுப்பறைச் சூழலை உருவாக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். அதற்கேற்ப ஒட்டுமொத்த பள்ளிக் கல்வித் துறையில் மாற்றங்களைக் கொண்டுவரும் பணியில் இறங்கினார். எந்த தவறும், முறைகேடுகளும் நடக்காத நிலையில், காரணமின்றி அவரது அதிகாரத்தைக் குறைக்க அவசியம் என்ன? புதிய பாடத்திட்டத் தயாரிப்பு பணிகள் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதால் பள்ளிக் கல்வித் துறை நிர்வாகத்தை ஒருங்கிணைத்துச் செயல்படக்கூடிய வாய்ப்பு அவருக்கு இல்லாமல் போய்விடும். இதனால், கல்வித்துறைக்குப் பாதிப்பு ஏற்படும்.

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தலைவர் வே.மணிவாசகன்:பள்ளிக் கல்வித் துறையில் தற்போது மேற்கொள்ளப்படும் அனைத்து சீர்திருத்தங்களுக்கும் முழுமுதல் காரணம் உதயசந்திரன்தான். யாரும் அவரை எளிதில் சந்திக்கலாம். ஆசிரியர்கள், ஆசிரியர் அமைப்புகளின் நிர்வாகிகள் எந்நேரமும் குறைகளை அவரிடம் நேரடியாகத் தெரிவிக்கலாம். வழக்கமாக, ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வில் ஒருசில இடங்கள் மறைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழும்.இந்த ஆண்டு கலந்தாய்வில் எந்த குற்றச்சாட்டுக்கும் இடம் அளிக்காத வகையில், 100 சதவீத காலியிடங்களும் கலந்தாய்வின்போது காண்பிக்கப்பட்டன. இந்நிலையில் வேறொருவரை முதன்மைச் செயலராக நியமித்திருப்பது உதயசந்திரனை அவமதிப்பதுபோல உள்ளது.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot