NEET | நீட் தேர்வில் அனைத்து மொழிகளுக்கும் ஒரே மாதிரியான கேள்வித்தாள் சி.பி.எஸ்.இ. அறிக்கை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு. - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Thursday 10 August 2017

NEET | நீட் தேர்வில் அனைத்து மொழிகளுக்கும் ஒரே மாதிரியான கேள்வித்தாள் சி.பி.எஸ்.இ. அறிக்கை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு.

இந்த ஆண்டு பிராந்திய மொழிகளில் நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு எந்த சலுகையும் கிடையாது என்று கூறிய சுப்ரீம் கோர்ட்டு, அடுத்த ஆண்டு முதல் அனைத்து மொழிகளுக்கும் ஒரே மாதிரியான கேள்வித்தாளை தயாரிப்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு சி.பி.எஸ்.இ.க்கு உத்தரவிட்டது.
நாடு முழுவதும் மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்காக நடைபெற்ற தேசிய தகுதி நுழைவுத்தேர்வு என்னும் 'நீட்' தேர்வில் பல்வேறு மொழிகளில் வெளியான கேள்வித்தாள்கள் சர்ச்சையை ஏற்படுத்தின. இதுதொடர்பான வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டின் மதுரை கிளை, நீட் தேர்வு முடிவை வெளியிட இடைக்கால தடை விதித்தது. இதற்கு எதிராக சி.பி.எஸ்.இ. தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மதுரை ஐகோர்ட்டு விதித்த இடைக்கால தடையை ரத்து செய்ததுடன் நீட் தேர்வின் முடிவை வெளியிட அனுமதி அளித்தனர். கடந்த ஜூலை 31-ந் தேதியன்று நடைபெற்ற விசாரணையின் போது பிராந்திய மொழிகளில் எத்தனை மாணவர்கள் தேர்வு எழுதி இருக்கிறார்கள் என்பதை மத்திய அரசு ஒரு பட்டியலாக மொழிவாரியாக தயாரித்து கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்து இருந்தனர். இந்த நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.எஸ்.இ. தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மணிந்தர் சிங், நீட் தேர்வில் எத்தனை மாணவர்கள் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள் என்ற விவரம், ஆங்கிலம், இந்தி மொழிகளில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களின் சதவீதம் மற்றும் பிராந்திய மொழிகளில் தேர்ச்சி பெற்றவர்கள் சதவீதம் ஆகிய ஒப்பீடுகள் அடங்கிய பட்டியலை தாக்கல் செய்தார். மேலும் ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் 10 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியதாகவும், பிராந்திய மொழிகளில் 1 லட்சத்து 51 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதியதாகவும் தெரிவித்தார். அவரை தொடர்ந்து, மாணவர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் இந்திரா ஜெய்சிங், தன்னுடைய வாதத்தில் கூறியதாவது:- சி.பி.எஸ்.இ. அளித்துள்ள புள்ளிவிவரத்தின் அடிப்படையில் 10 சதவீத மாணவர்கள் பிராந்திய மொழிகளில் தேர்வு எழுதி இருக்கிறார்கள்.

கேள்வித்தாள்களின் எண்ணிக்கையும் இந்த தேர்வில் தேர்வானவர்கள் எண்ணிக்கையும் சமநிலை கொண்டது என்பது இதனால் நிரூபணம் ஆகி உள்ளது. எனவே, முதல் 10 இடங்களை பிடித்த சிறந்த கல்லூரிகளில் பிராந்திய மொழிகளில் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மருத்துவ படிப்புக்கான இடம் கிடைப்பதற்கு வாய்ப்பு கிடைக்காது. இது நீட் தேர்வின் நோக்கத்தையே கேள்விக்குரியாக்குவதாகவும், மாணவர்களுக்கான சம வாய்ப்பை மறுக்கும் நடவடிக்கையாகவும் அமைந்து உள்ளது. எனவே, தற்போதைய நீட் தேர்வை ரத்து செய்து அனைவருக்கும் சமமான வாய்ப்பு வழங்கும் வகையில் கேள்வித்தாள்கள் அமைக்கப்பட்டு தேர்வு நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். சி.பி.எஸ்.இ. தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மணிந்தர் சிங் வாதாடுகையில் கூறியதாவது:- நிர்வாக வசதியை கருத்தில் கொண்டே இதுபோன்று தனித்தனியாக கேள்வித்தாள்கள் அமைக்கப்பட்டன. கடந்த 2016-ம் ஆண்டில் நடைபெற்ற நீட் தேர்வில் 2 விதமான கேள்வித்தாள்கள் அமைக்கப்பட்டன. அப்போது அதுபற்றி யாரும் கேள்வி எழுப்பவில்லை. பிராந்திய மொழிகளில் கேள்வித்தாள் அமைக்கும்போது பல்வேறு மொழிபெயர்ப்பு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது. மருத்துவ கலை சொற்களுக்கு சரியான வார்த்தைகளை பொருத்துவது கடினமாக உள்ளது. சென்னையில் கேள்வித்தாள் கடினமாக இருந்தது என்றும் குஜராத் மாநிலத்தில் எளிதாக இருந்தது என்றும் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன. இந்த குறைபாடுகள் அனைத்தையும் நீக்கி ஒரே மாதிரியான கேள்வித்தாள்களை அமைக்க நடவடிக்கை எடுப்பது குறித்து சி.பி.எஸ்.இ. ஆலோசித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். இதைத்தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:- கடந்த ஆண்டு மாநில மொழிகளில் கேள்வித்தாள்கள் கிடையாது.

இந்த ஆண்டு அறிமுகப்படுத்தினோம் என்பதை காரணமாக ஏற்க முடியாது. ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் ஒரே மாதிரி கேள்விகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஆனால் மாநில மொழிகளில் மட்டும் ஏன் ஒரு மொழிக்கு ஒரு மொழி கேள்வித்தாள் வேறுபடவேண்டும்? ஆங்கிலம் மற்றும் இந்தியில் உள்ள கேள்விகளையே ஏன் மாநில மொழிகளிலும் மொழிபெயர்த்து கேள்வித்தாள் அமைக்கக்கூடாது? மாநில மொழிகளில் கேள்வித்தாள்கள் அமைப்பது சிக்கல் என்றால் பின்னர் கேள்வித்தாள்களை தயாரிப்பவர்களை எப்படி நிபுணர்கள் என்று ஏற்றுக் கொள்ளமுடியும்? நீட் தேர்வு எவ்வித சர்ச்சையும், பிரச்சினைகளும் இன்றி அமைய வேண்டும். ஆங்கிலம், இந்தி போன்ற மொழிகளில் என்ன கேள்விகள் கேட்கப்படுகின்றனவோ அதே கேள்விகள் ஒரே மாதிரி அனைத்து மொழிகளிலும் அமைக்கப்பட வேண்டும்.

இதனால் அனைவருக்கும் சமவாய்ப்பு வழங்கப்படும். எனவே, அடுத்த ஆண்டு நடைபெறும் நீட் தேர்வில் இதனை எப்படி செயல்படுத்துவது என்பது குறித்து சி.பி.ஸ்.இ. விவரமான அறிக்கை ஒன்றை தாக்கல் செய்ய வேண்டும். மேலும், வருங்காலத்தில் இதுபோன்ற சிக்கல்கள் இல்லாமல் கேள்வித்தாள்களை தயாரிக்க தேவையான ஆலோசனைகளை மனுதாரர்கள் தாக்கல் செய்ய வேண்டும். இந்த ஆண்டு நீட் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு எவ்வித சலுகையும் வழங்கப்படமாட்டாது. இந்த வழக்கின் மீதான விசாரணை வருகிற அக்டோபர் 10-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி உள்ளனர்.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot