3,336 முதுகலை பட்டதாரி ஆசிரியர், 748 கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு. - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Tuesday 5 September 2017

3,336 முதுகலை பட்டதாரி ஆசிரியர், 748 கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 3 ஆயிரத்து 336 முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் 748 கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
தமிழக பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் ஆசிரியர் தின விழா, சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடத்தப்பட்டது.

இந்த விழாவில் ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுகளை வழங்கி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேருரை ஆற்றினார். அவர் பேசியதாவது:-தமிழகத்தை கல்வி கற்போரின் புகலிடமாகவும், கல்வியென்றாலே தமிழகம்தான் என்று புகழும் இடமாக மாற்றும் வகையில் பள்ளிக் கல்வித்துறை சார்ந்த திட்டங்களை வழங்கிக் கொண்டிருக்கிறோம். பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்படுகிறது.இதன் தொடர்ச்சியாக, நடப்பு கல்வியாண்டில் 3 ஆயிரத்து 336 முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் 748 கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்.கடந்த 5 ஆண்டுகளில் 12-ம் வகுப்பு பயின்ற 26 லட்சத்து 96 ஆயிரம் மாணவர்களுக்கு 4 ஆயிரத்து 723 கோடி ரூபாய் செலவில் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டும் 5 லட்சத்து 40 ஆயிரம் மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கப்படவுள்ளது.

தேர்வு எழுதுவதற்கு மாணவர்களை ஆசிரியர்கள் தயார் செய்யும் வகையில் 2017-18-ம் ஆண்டிற்கான இடைநிலை, மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டுக்கான தேர்வுக்கால அட்டவணை கல்வியாண்டின் தொடக்கத்திலேயே வெளியிடப்பட்டுள்ளது. மாநில, மாவட்ட அளவிலான மாணவர்களின் தரப்பட்டியல் முறை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டிருக்கிறது. இது மாணவர், பெற்றோரிடையே உற்சாகத்தையும், உத்வேகத்தையும் ஏற்படுத்தி அவர்களின் மனச்சுமையை குறைத்திருக்கிறது.பதினோறாம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு என்ற மாற்றத்தால், மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கான போட்டித்தேர்வுகளை பயமின்றி எதிர்கொள்ளும் துணிவை மாணவர்களிடையே ஏற்படுத்தியிருக்கிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் மாற்றப்படப்போகும் கலைத்திட்ட வடிவமைப்பும், பாடத்திட்டங்களும் இந்தியாவிலேயே, தமிழகத்தை தனித்தன்மை வாய்ந்த மாநிலமாக மாற்றும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.இவ்வாறு அவர் பேசினார்.இந்த விழாவில், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்புரை ஆற்றினார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையுரை ஆற்றினார். பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப் யாதவ் முன்னிலை உரையாற்றினார். பள்ளிக்கல்வி இயக்குனர் ரெ.இளங்கோவன் வரவேற்றார். தலைமைச் செயலாளர்கிரிஜா வைத்தியநாதன், பள்ளிக் கல்வித்துறை செயலாளர் த.உதயச்சந்திரன் மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.

ஆசிரியர் தின விழாவில் எடப்பாடி பழனிசாமி சொன்ன குட்டிக்கதை:-

ஜென் கதை ஒன்றை இங்கு நினைவு கூரவிரும்புகிறேன். ஒரு மலையின் அடிவாரத்தில் இரண்டு பாறைகள் நெடுநாட்களாக மழையிலும், காற்றிலும் கிடந்து தூசி நிறைந்து பாசி பிடித்து கிடந்தன. அதில் முதல் கல்லுக்கு, நாம் ஏன் இப்படியே ஒரு அவலட்சணம் பொருந்திய கல்லாகவே இருக்க வேண்டும்? வேறு இடம், வேறு வடிவம் கொள்ளலாமே என நினைத்து, இரண்டாம் பாறையிடம் தன் விருப்பத்தை சொன்னது. உடனே அப்பாறை நாம் எங்கிருந்தாலும், எப்படியிருந்தாலும் கல்லாகவே கிடப்போம். ஆகவே, இப்படியே இருத்தல் நலமே எனக்கூறியது.கொஞ்ச நாட்களில் சிற்பிகள் குழு அங்கு வந்தது. ஒவ்வொரு பாறையாய் ஆராய்ந்து இவ்விரு பாறைகளே மிகச்சிறந்தவை என்றனர். தலைமைச் சிற்பி, சரி, நாளை நாம் இங்கு வந்து இவ்விரு பாறைகளையும் எடுத்துச்செல்வோம் என்று கூறினார். அவர்கள் போனபின்பு முதல் பாறை, நாம் நல்ல சிலையாக, சிற்பமாக மாறப்போகிறோம் என்றது. ஆனால், இரண்டாம் பாறையோ, ‘அவர்கள் நம்மை சுத்தியால் அடிப்பார்கள், உளியால் செதுக்குவார்கள். வலி உயிர் போகும். எனவே, நாளை அவர்கள் வரும்போது நான் பெயர்த்து எடுக்க முடியாதபடி கடினமாக மாறி பூமியோடு ஒட்டிக்கொள்வேன்’ என்றது.மறுநாள், முதல் பாறையை மட்டுமே சிற்பிகள் குழு சுலபமாக பெயர்க்க முடிந்தது. ஒரு பாறையே போதும் என்று அதைக்கொண்டு சென்று, அதை அடித்து, உடைத்து, செதுக்கி புத்தர் சிலையை உருவாக்கினர். பாறைகள் கிடந்த அந்த மலையின் மீது புத்தர் கோவில் உருவானது. பின்னர் அந்த புத்தர் சிலை, கோவிலுக்குள் வைக்கப்பட்டு பூஜிக்கப்படும் கடவுளாய் மாறுகிறது.

மாற்றத்தை விரும்பியதால் தன்னுள் இருந்த புத்தனை வெளிக்கொணர்ந்தது முதல்பாறை. தன்னுள்ளும் ஞான முதல்வன் புத்தன் இருந்தாலும், மாற்றத்தை விரும்பாமல்மதிமயக்க மனதோடு இருந்ததால் இரண்டாவது பாறை மலையேறுவோரின் காலடிப்படியாய் மாறிப்போனது. இரு பாறைகளுக்குமான வாய்ப்புகள் ஒன்றே. ஆனால் மாற்றத்தை மனதார ஏற்றுக்கொள்ளும்போது மட்டுமே நம் உள்ளிருக்கும் புத்தன் வெளிப்படுகிறான்.இவ்வாறு அவர் கூறினார்.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot