ஊதியக் குழு முடிவின் முக்கிய அம்சங்கள் - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Wednesday 11 October 2017

ஊதியக் குழு முடிவின் முக்கிய அம்சங்கள்

தற்பொழுதுள்ள ஊதிய அமைப்பு (Pay Band) மற்றும் தர ஊதியம் (Grade Pay) என்பதனை நீக்கி அதற்கு பதிலாக ஊதிய அட்டவணை (Pay Matrix) உருவாக்கப்பட்டுள்ளது.
 இந்த அட்டவணையானது தற்போது நடைமுறையில் உள்ள 5 ஊதிய அமைப்புகளை  அடிப்படையாகக் கொண்டு அமையப்பெற்ற 32 தர ஊதியத்திற்கு  பதிலாக லெவல்கள் உருவாக்கப்பட்டுள்ளது.  இந்த ஊதிய  அமைப்பில் 32 நிலைகள் (Level)  உள்ளன. ஊதிய அட்டவணையில் 1-1-2016 அன்று ஒரு பணியாளர் வாங்கிய அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியம் ஆகியவற்றின் கூட்டுத் தொகையினை மத்திய அரசு பின்பற்றிய 2.57 காரணியால் பெருக்கி வரும் தொகையே அப்பணியாளரின் புதிய ஊதியமாக அமையும்.
தற்பொழுது குறைந்தபட்ச ஊதியம் ரூ.6100 என்றும், அதிகபட்சமாக ரூ.47400 என உள்ளது.  இதுவே, புதிய ஊதிய விகிதத்தில் குறைந்தபட்சமாக நிலை-1ல் ரூ.15700 என்றும், அதிகபட்சமாக நிலை-32ல் ரூ.2,25,000 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு காலமுறை ஊதியம் பெறுவோருக்கும் முறையான பணியிடத்தில் காலமுறை ஊதியம்  பெறும் அலுவலர்களைப் போன்று 1-1-2016 அன்று அவர்தம் பெற்றுவந்த அடிப்படை ஊதியம் மற்றும்  தர ஊதியத்தின் கூட்டுத்தொகையினை 2.57 காரணியால் பெருக்கி புதிய ஊதிய நிர்ணயம் செய்யப்படும்.   இதன்படி சிறப்பு காலமுறை ஊதியம் பெறுவோருக்கான குறைந்தபட்ச ஊதியம் நிலை-1ல் ரூ.3,000. அதிகபட்ச ஊதியம் நிலை-6ல் ரூ.11,100 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொகுப்பூதியம், நிலையான ஊதியம் மற்றும் மதிப்பூதியத்தில் உள்ள பணியாளர்களுக்குக் குறைந்தபட்சமாக 30 சதவீதம்   உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஒரே பணியிடத்தில் 10 ஆண்டுகள் (தேர்வு நிலை) மற்றும் 20 ஆண்டுகள் (சிறப்பு நிலை) பணிமுடித்தவர்களுக்கு அவர்கள் பெறும் அடிப்படை ஊதியத்தில் தற்போது  வழங்கப்படும்  இரண்டு ஊதிய உயர்வுகள் (3% + 3%) தொடர்ந்து அளிக்கப்படும்.

ஊதிய உயர்வு ஆண்டுக்கு 3 சதவீதம்  என்ற தற்போதைய நிலையில் தொடர்ந்து வழங்கப்படும். திருத்திய ஊதிய அமைப்பிலும் தேக்கநிலை ஊதிய உயர்வு மற்றும் ஊக்க ஊதிய உயர்வு வழங்கும் முறை தொடர்ந்து வழங்கப்படும். அரசு அலுவலர்கள் தற்போது பெற்றுவரும் சிறப்பூதியத்தில் 50 சதவீதம் கூடுதலாக உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அரசின் வருவாய் இனச்செலவினங்களைக்  குறைத்திட பல்வேறு துறைகளில் உள்ள பணியாளர் நிலைகளை ஆய்வு செய்து அதில் தேவையற்ற பணியிடங்களை இனங்கண்டறியவும் மற்றும் இதரப் பணியிடங்களில் வெளிமுகமை மூலமாகவோ அல்லது ஒப்பந்த அடிப்படையிலோ முதல் கட்டமாக பணி நியமனங்களை மேற்கொள்ளவும் தக்க  பரிந்துரைகளை அளித்திட “பணியாளர் சீரமைப்பு குழு”  உருவாக்கப்படும். தற்போது அரசுப் பணியாளர்களுக்கு 40 வகைக்கும் மேற்பட்ட படிகள் வழங்கப்பட்டு வருகின்றன.  படிகள் திருத்தியமைப்பதனைப் பொருத்தவரை, சில படிகளைத் தவிர அனைத்துப் படிகளுக்கும் 100 சதவீத   உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசால் வழங்கப்படும் அகவிலைப்படியின் வீதம் மற்றும் தேதியினைப் பின்பற்றி மாநில அரசு ஊழியர்களுக்கும் தொடர்ந்து வழங்கப்படும்.

திருத்தியமைக்கப்படும் ஊதியத்தில் தற்போதைய படித்தர வீதங்கள்  மூலம் உயர்த்தி நிர்ணயம் செய்யப்படுவதுடன், சில மாநகரங்கள், நகரங்கள் திருத்தி வகைப்படுத்தப்பட்டுள்ளது. தற்போதையே நகர ஈட்டுப்படி வீதங்கள் இருமடங்காக உயர்த்தி நிர்ணயம் செய்யப்படுவதுடன், சில மாநகரங்கள் நிலை உயர்த்தி திருத்தி வகைப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது அனுமதிக்கப்படும் பிற படிகளை இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையினை கருத்தில் கொண்டு திருத்திய ஊதிய விகிதத்திற்கு ஏற்றாற்போல பயணப்படி திருத்தியமைக்கப்பட்டுள்ளது.
1-1-2016ல் பெற்று வரும் ஓய்வூதியம்,  குடும்ப ஓய்வூதியத்தினை 2.57 என்ற காரணியால் பெருக்கி திருத்தி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு திருத்தியமைக்கப்படும் ஓய்வூதியம்,  குடும்ப ஓய்வூதியமானது, குறைந்தபட்ச  மற்றும் அதிகபட்ச ஓய்வூதியத்திற்குள்ளும், தனியர்கள் இறுதியாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற பதவிக்கான திருத்திய ஊதிய நிலையின் தொடக்க ஊதியத்தில் முறையே 50, 30 சதவீதம் குறையாமலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனினும் குறைந்தபட்ச ஓய்வூதியமானது, முழு ஓய்வூதியம் பெற தகுதியான பணிக்காலமான 30 வருடங்களைவிட நிகர பணிக்காலம் குறைவாக இருக்கும் நேர்வுகளில், அவ்விகிதத்திற்கு ஏற்ப குறையும். 1-1-2016-க்கு பின்னர் ஓய்வுபெறுவோரின்  ஓய்வூதியம் திருத்திய ஊதியத்தில் இறுதியாக பெற்றுள்ள அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அந்த ஓய்வூதியம் , குடும்ப ஓய்வூதியம் ஆகியவை  குறைந்தபட்ச  மற்றும் அதிகபட்ச ஓய்வூதியத்திற்குள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனினும் அந்த ஓய்வூதியமானது, முழு ஓய்வூதியம் பெற தகுதியான பணிக்காலமான 30 வருடங்களைவிட குறைவாக இருக்கும் நேர்வுகளில், அவ்விகிதத்திற்கு ஏற்ப குறையும். வயது முதிர்வின் அடிப்படையில்  தற்போது அனுமதிக்கப்படும் கூடுதல் ஓய்வூதியம், கூடுதல் குடும்ப ஓய்வூதியம் 80, 85, 90, 95, 100 வயதினருக்கு தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
ஒரு அரசு பணியாளர் ஓய்வு பெறும் முன்னரே இறக்கும்பட்சத்தில், அவர் இறுதியாக பெற்றுவந்த அடிப்படை ஊதியத்தில் 50 சதவீதத்தினை குடும்ப ஓய்வூதியமாக, அடுத்துவரும் 10 ஆண்டுகள் அல்லது அப்பணியாளர் 65 வயதினை அடையும் நாள் இவற்றில் எது முன்னதோ அதுவரை அனுமதிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று ஒரு பணியாளர் ஓய்வுபெற்ற பின்னர் இறக்கும்பட்சத்தில் அவர் ஓய்வுபெறும் போது வழங்கப்பட்ட ஓய்வூதியத்திற்கு இணையான குடும்ப ஓய்வூதியத்தினை அப்பணியாளர் உயிருடன் இருந்திருந்தால் 65 வயதினை அடையும் நாள்வரை அனுமதிக்கப்பட்டுள்ளது. குடும்ப ஓய்வூதியத்தினை சார்ந்துள்ளவர்களுக்கு அனுமதிக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள வருவாய் உச்ச வரம்பினை குறைந்தபட்ச குடும்ப ஓய்வூதிய தொகைக்கு இணையாக (ரூ.7,850) நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அரசு பணியாளர்களுக்கு திருத்திய ஊதியத்தில் அனுமதிக்கப்படும் அகவிலைப்படியை ஓய்வூதியர்கள்,  குடும்ப ஓய்வூதியர்களுக்கும் அதே விகிதத்தில், அதே நாள் முதல் வழங்கப்பட்டுள்ளது. 1-1-2016 முதல் இறப்பு மற்றும் ஓய்வுகால பணிக்கொடையை ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. பணியில் இருக்கும்பொழுது மரணம் அடையும் அரசு பணியாளர்களின் இறப்பு பணிக்கொடைக்கான விகிதம் மத்திய அரசின் ஆணைகளின் அடிப்படையில் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. தற்போது பெற்றுவரும் விகிதத்தின் (ஓய்வூதியத்தில் 1/3 பங்கு) அடிப்படையில் திருத்திய ஊதியத்திலும் ஓய்வூதியத்தினை தொகுத்துப் பெறலாம்.

எவ்வளவு நிதி தேவை: ஊதியக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதால் ஆண்டொன்றுக்கு ஏற்படும் கூடுதல் தொடர் செலவினம் ரூ.14,719 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறாகும் மொத்த தொகையான ரூ.14,719 கோடியில் ரூ.8015.99 கோடி  அரசு அலுவலர்களுக்கான சம்பளம் மற்றும் படிகளுக்காக ஒதுக்கப்படுகிறது.  ரூ.6702.91 கோடி ஓய்வூதியம் மற்றும் 1.1.2016 முதல் 30.09.2017 வரையிலான காலக்கட்டத்தில் ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கான ஓய்வுக்கால பலன்களின் நிலுவைத் தொகையாகும்.

எப்போது நடைமுறைக்கு வரும்?:

தற்போது வரிவருவாயின் வளர்ச்சி குறிப்பிடத்தக்க நிலையில் இல்லாததால் காலமுறை ஊதியம்,  சிறப்பு காலமுறை ஊதியம்,  தொகுப்பூதியம்,  மதிப்பூதியம்,  நிலை ஊதியம் பெறும் அலுவலர்களுக்கு திருத்திய ஊதிய விகிதம் 1-1-2016 முதல் கருத்தியலாகவும், 1-10-2017 முதல் பணப்பயன் வழங்கும்படியும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் 1-1-2016 முதல் 30-09-2017 வரை பணியிலிருந்து ஓய்வு பெற்ற அலுவலர்களுக்கு திருத்திய ஊதியத்தின் அடிப்படையில் ஓய்வூதிய பலன்களை இரண்டு தவணைகளில், அதாவது முதல் தவணை நடப்பு 2017-2018 நிதியாண்டிலும், இரண்டாவது தவணையை அடுத்த 2018-2019 நிதியாண்டிலும் வழங்கலாம் என முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot