தமிழக சட்டப்பேரவை ஜூன் 4ம் தேதி கூடுகிறது? - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Thursday 10 May 2018

தமிழக சட்டப்பேரவை ஜூன் 4ம் தேதி கூடுகிறது?

தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஜூன் 4ம் தேதி கூடும் என்று தெரிகிறது. அப்போது துறை ரீதியான மானிய கோரிக்கை மீது விவாதம் நடத்தப்பட்டு நிதி ஒதுக்கப்படும். இந்த கூட்டம் சுமார் ஒரு மாதம் நடைபெறும் என்று சட்டப்பேரவை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழக அரசின் 2018-2019ம் ஆண்டு பட்ஜெட் கடந்த மார்ச் மாதம் 15ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. மார்ச் 19ம் தேதியில் இருந்து 22ம் தேதி வரை பட்ஜெட் மீது விவாதம் நடைபெற்றது.இந்த கூட்டம் சுமார் ஒரு மாதம் வரை நடைபெறும். ஆனால், பட்ஜெட் கூட்டம் முடிந்ததும் மானிய கோரிக்கை கூட்டம் நடைபெறவில்லை. இதைத்தொடர்ந்து, மீண்டும் அடுத்த மாதம் முதல் வாரம் தமிழக சட்டப்பேரவை கூடும் என்றும், அப்போது துறை ரீதியான மானிய கோரிக்கை மீது விவாதம் நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து சென்னை, தலைமை செயலகத்தின் உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், தமிழக அரசுக்கு எதிராகவும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. ஆனாலும், அரசு தனது அடுத்தக்கட்ட பயணத்தில் கவனமாக செயல்பட்டு வருகிறது. அதன்படி, பட்ஜெட் கூட்டத்தை தொடர்ந்து துறை ரீதியான மானிய கோரிக்கை கூட்டம் நடத்துவது குறித்தும், அதற்காக நிதி ஒதுக்க திட்டமிட்டு அரசு செயல்படுகிறது. அதன்படி, ஒவ்வொரு துறை அமைச்சர்கள், அதிகாரிகளை அழைத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த இரண்டு வாரங்களாக விவாதித்து திட்டங்கள் மற்றும் தங்களது துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்குவது குறித்து ஆலோசனை நடத்த வருகிறார்.

அதன்படி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கவனிக்கும் வீட்டு வசதித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள், பொதுப்பணி துறை, உயர் கல்வித்துறை, பள்ளி கல்வித்துறை, சுகாதாரத்துறை, வேளாண் துறை, சிறுபான்மையினர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளை அழைத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தி வருகிறார். இதைத்தொடர்ந்து மேலும் சில துறை அமைச்சர்கள், அதிகாரிகளிடம் ஆலோசனை இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைய உள்ளது. இதைத்தொடர்ந்து இந்த மாத இறுதியில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடத்தப்பட்டு, சட்டப்பேரவை கூட்டத்தை கூட்டுவது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படும். அதன்படி வருகிற ஜூன் மாதம் 4ம் தேதி (திங்கள்) சட்டப்பேரவை கூட்டம் நடைபெற அதிக வாய்ப்புள்ளது” என்றார்.

இந்த கூட்டம் சுமார் 25 முதல் 30 நாட்கள் அதாவது ஜூலை மாதம் 2வது வாரம் வரை நடைபெறும். அப்போது, துறை ரீதியான மானிய கோரிக்கை தாக்கல் செய்யப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

வழக்கமாக 6 மாதங்களுக்கு ஒருமுறை சட்டப்பேரவை கூட்டத்தை கூட்ட வேண்டும் என்பது மரபு ஆகும். மானிய கோரிக்கை கூட்டத்தை மே மாதம் நடத்தி முடித்தால் மீண்டும் டிசம்பர் மாதம் சட்டப்பேரவை கூட்டத்தை கூட்ட வேண்டும். அதனால் ஒரு மாதம் தாமதமாக நடத்தினால், இந்த ஆண்டு இறுதியில் மீண்டும் சட்டப்பேரவை கூட்டத்தை கூட்ட வேண்டிய அவசியமில்லை. மீண்டும் 2019ம் ஆண்டு ஜனவரி மாதம் கவர்னர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்ைத கூட்டினால் போதுமானது. அதனால் மானிய கோரிக்கை மீதான கூட்டம் ஜூன் மாதம் தொடங்கி ஜூலை மாதம் முடிக்க அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot