முதற்கட்டமாக 3,000 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்: சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Monday, 19 June 2017

முதற்கட்டமாக 3,000 அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ்: சட்டப்பேரவையில் முதல்வர் அறிவிப்பு

தமிழகத்தில் முதற்கட்டமாக 3,000 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒரு பள்ளிக்கு ஓர் அறிவுத்திறன் வகுப்பறை (ஸ்மார்ட் கிளாஸ்) ஏற்படுத்தப்படும் என தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.தமிழக சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110-ன் கீழ் முதல்வர் பழனிசாமி வாசித்த அறிக்கை:

1.வளர்ந்து வரும் தொழில்நுட்ப சவால்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில், அரசுப் பள்ளி மாணாக்கர்கள் போதிய கணினி திறன்களை அடையும் வகையில் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்பக் கணினி ஆய்வகங்கள் ஏற்படுத்தப்படும்.இதன்படி, 3,090 உயர்நிலைப் பள்ளிகளுக்கு தலா 10 கணினிகளும், 2,939 மேல்நிலைப் பள்ளிகளுக்கு தலா 20 கணினிகளும், அதனுடன் தொடர்புடைய இதர சாதனங்களும் வழங்கப்படும். இதற்கென அரசுக்கு 437 கோடியே 78 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்.

2.அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் கிராமப்புற மாணவர்களுக்கு கணினி மூலமாக பாடங்களை பயிற்றுவிக்கும் வகையில் முதற்கட்டமாக 3,000 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒரு பள்ளிக்கு ஓர் அறிவுத் திறன் வகுப்பறை, அதாவது ஸ்மார்ட் கிளாஸ் ஏற்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு பள்ளிக்கும் 2 லட்சம் ரூபாய் வீதம்60 கோடி ரூபாய் இதற்கென செலவிடப்படும்.

3.பள்ளிக் கல்வி இயக்ககம் 100 ஆண்டுகளுக்கும் மேலாக டி.பி.ஐ. வளாகத்தில் செயல்பட்டு வருகின்றது. இக்கட்டடம் மிகவும் பழமை வாய்ந்ததாகும். இதனால், இதனை பராமரிப்பது கடினமாகவும், மிகுந்த செலவினம் கொண்டதாகவும் உள்ளது. அரசால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பாக பல்வேறு மாவட்டங்களிலிருந்து அலுவலர்களும், பணியாளர்களும் அதிக அளவு இங்கு வந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது.மேலும், இந்த இயக்ககத்தில் இயங்கும் பல்வேறு பிரிவுகளுக்காக கூடுதல் இடவசதி தேவைப்படுகிறது. இதற்காக, ஒரு லட்சம் சதுர அடியில் 33 கோடி ரூபாய் செலவில் பள்ளிக் கல்வி இயக்ககத்திற்கு புதிய கட்டடம் கட்டப்படும்.இந்த கட்டடம் மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவினைக் குறிக்கும் வகையில் "புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கட்டடம்" என்ற பெயரில் அழைக்கப்படும் என்பதை பெருமகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

4.தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மாணாக்கர்களும் தரமான கல்வியை அளிப்பதோடு மட்டுமல்லாமல், அவர்கள் சிறப்பான சூழ்நிலையில் கல்வி கற்க வேண்டும் என்ற நோக்கில் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு தேவைப்படும்கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம், அறிவியல் உபகரணங்கள், கலை மற்றும் கைவினை அறைகள், கணினி அறைகள், நூலகம், கழிவறைகள் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் 39 கோடியே ஒரு லட்சம் ரூபாய் செலவில் ஏற்படுத்தி கொடுக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் அமைப்பது, ஸ்மார்ட் கிளாஸ் அமைப்பது, டிபிஐ வளாகத்தில் கூடுதல் கட்டிடங்கள் அமைப்பது, பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது உள்ளிட்ட அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot