- Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Tuesday, 1 August 2017

டெங்கு விழிப்புணர்வு முகாம் மற்றும் ஊர்வலம்

சோம்பேறித்தனத்தை  அகற்றினால் டெங்கு நம்மிடம் வராது
வட்டார மருத்துவ அதிகாரி பேச்சு 


தேவகோட்டை – தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மற்றும் கண்ணங்குடி வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு விழிப்புணர்வு முகாம் மற்றும் ஊர்வலம் நடைபெற்றது.


                   பள்ளி வளாகத்தில் துவங்கிய ஊர்வலத்துக்கு பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.கண்ணங்குடி வட்டார மருத்துவர்கள் தமிம் அன்சாரி,சந்தியா ராணி ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.ஊர்வலத்தை திருவேகம்பத்தூர்  வட்டார மருத்துவ அதிகாரி கமலேஸ்வரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.இதில் சுமார் 100க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்.ஊர்வலம் தேவகோட்டை சிவன்கோவில் கிழக்கு,தெற்கு,இறகுசேரி இறக்கம்,ஜெயம்கொண்டார் தெரு,சின்ன மாரியம்மன் கோவில் தெரு,நேரு தெரு ,நடராஜபுரம் பகுதி முக்கிய வீதிகள் என சுமார் 2 கிலோமீட்டர் துரம் சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.இதில் கலந்துகொண்ட மாணவ-மாணவியர் டெங்கு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கையில் ஏந்தியபடியே கோஷமிட்டு சென்றனர்.மேலும் துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கியதுடன்,பொது மக்களின்  காய்ச்சல் குறித்த சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தனர்.ஊர்வலத்துக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் ஸ்ரீதர் மற்றும் தேவகோட்டை நகராட்சி சுகாதார நிலைய மருந்தாளுனர் சிவக்குமார் ஆகியோர் செய்து இருந்தனர்.
                 இதனை தொடர்ந்து பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் கண்ணங்குடி  வட்டார மருத்துவ அலுவலர் ராஜாராம் ,கண்ணங்குடி  சுகாதார செவிலியர்கள்  ஜோசப் மேரி , அர்ச்சனா,மருந்தாளுனர் கனிமொழி ,சுகாதார மேற்பார்வையாளர் பிர்ட்டோ அந்தோணி பாஸ்கர்  ஆகியோர் கலந்து கொண்டு டெங்கு அறிகுறிகள்,தடுக்கும் விதம்,பாதுகாப்பு முறைகள் குறித்து விளக்கம் அளித்தனர்.இதில் மாணவர்கள் ஜெனிபர்,ரஞ்சித்,கோட்டையன்,வெங்கட்ராமன்,
பாக்கியலெட்சுமி,ஈஸ்வரன்,காயத்ரி டெங்கு குறித்த சந்தேகங்களை மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.அதனை தொடர்ந்து மாணவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.நிகழ்வுக்கான ஏற்பாடுகளை பள்ளி ஆசிரியை முத்துலெட்சுமி செய்து இருந்தார்.

பட விளக்கம் : தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மற்றும் கண்ணங்குடி வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு விழிப்புணர்வு முகாம் மற்றும் ஊர்வலம் நடைபெற்றது.


விரிவாக :
 மாணவர்கள் ஜெனிபர்,ரஞ்சித்,கோட்டையன்,வெங்கட்ராமன்,
பாக்கியலெட்சுமி,ஈஸ்வரன்,காயத்ரி  உட்பட பல மாணவர்கள் டெங்கு தொடர்பான கேள்விகள் கேட்டனர்.அதற்கு வட்டார மருத்துவ அலுவலர்  கமலேஸ்வரன் பதில்கள் கூறும்போது ;
                  நம்முடைய சோம்பேறிதனத்தின் ,கவனக்குறைவின் காரணமாகவே டெங்கு நம்மை விட்டு போகவில்லை.காய்ச்சல் 3 நாட்களுக்கு மேல் இருந்து நான்காம் நாளில் சரியானால் அதை அப்படியே விட்டு விடுகிறோம்.நம் உடலில் எதிர்ப்பு சக்தி குறையும்போது வெப்பம் அதிகமாகி விடுகிறது.முதலில் உடம்புக்குள் சிறை ,தமனி,இரத்த நாளங்கள் பாதிக்கபட்டு நீர் வெளியேற தொடங்கும்.பிறகு இதயம்,நுரையிரல் போன்ற திசுக்களில் நீர் கோர்த்துக்கொண்டு எட்டு அல்லது ஒன்பதாம் நாள்களில் மூச்சு விட முடியாமல் இறக்க நேரிடலாம் .மலம் கருப்பு கலரில் போக ஆரம்பிக்கும்.சிறுநீர் இரத்தமாக வரும்.டெங்கு காய்ச்சல் இருக்கும்போது நிலவேம்பு குடிநீர்,பப்பாளி சாறு,மாதுளம் பழம், ஆப்பிள்,திராட்சை இவற்றை ஜூஸ் ஆக அருந்த வேண்டும்.முதல் மூன்று,நான்கு நாட்களுக்கு நீர் அதிகம் அருந்த வேண்டும்.உடல் ஆரோக்கியமாக இருந்தால்தான் நீங்கள் நன்றாக படிக்க இயலும்.நம் வீட்டையும் ,சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.ப்ர்ஜின் பின்புறம் உள்ள நீரை தினமும் சுத்தம் செய்ய வேண்டும்.ஆட்டுக்கல்,வேண்டாத தொட்டிகளில் உள்ள நீரை கீழே ஊற்றி விடவும்.எல்லா வயதினருக்கும் டெங்கு வரலாம்.டெங்கு வருமுன் காப்பதே நல்லது.

 டெங்கு எனும் நோய் வைரஸ் கிருமியால் வரும் நோயாகும். 

டெங்கு ஏடிஸ் எனும் கொசு கடிப்பதினால் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவுகிறது 

இந்த கொசு நல்ல தண்ணீரில் முட்டையிட்டு வளரக்கூடியது.

 பகல் நேரத்தில் மட்டுமே கடிக்கக் கூடியது. 

டெங்குவின் அறிகுறிகள் 

1. கடுமையான காய்ச்சல் 
2. தலைவலி 
3. உடல் அசதி 
4. உடல் வலி 
5. வாந்தி
6. வயிற்றுப்போக்கு
போன்றவை இருக்கும்

டெங்குவில் மூன்று வகை உண்டு 
1 .சாதாரண டெங்கு ஜூரம்
(dengue fever)

2.  உதிரப்போக்குடன் கூடிய டெங்கு ஜுரம்(  dengue hemorrhagic fever) 

3. டெங்கு ஷாக் சிண்ட்ரோம் 

இதில் முதல் வகை வந்தால் இன்ன பிற காய்ச்சல் போல வந்த வழி தெரியாமல் சென்று விடும். மற்ற வைரஸ் காய்ச்சல்கள் போல அதிக உடல் உஷ்ணம் (104 டிகிரிக்கு மேல்) , இருமல், சளி, தலைவலி, உடல் வலி  என்று இருக்கும் 

இரண்டாவது மற்றும் மூன்றாம் வகை உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் தன்மை கொண்டது 

இவற்றில் மேற்சொன்ன அறிகுறிகளுடன் வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு , ரத்த தட்டணுக்களை ( platelets ) குறைத்து பல் ஈறுகளில் இருந்து ரத்தம் கசிதல்  , மலத்தில் சிறுநீரில்    ரத்தம் செல்லுதல் போன்ற அறிகுறிகள் தென்படும் 

அதை சரியாக கவனிக்காமல் விட்டால் நீரிழப்பு மற்றும் ரத்த போக்கு அதிகமாகி மரணத்தில் கொண்டு சேர்க்கும் 

டெங்குவிற்கு ரத்த பரிசோதனை

ரத்தத்தில் எலிசா (ELIZA)  எனும் பரிசோதனை மூலம் டெங்கு வைரஸ் இருப்பதை கண்டறியலாம். 

டெங்குவிற்கான சிகிச்சை முறை

டெங்குவிற்கான தலையாய சிகிச்சை நீரிழப்பை சரிசெய்வதாகும்.   ஆர் எஸ் எனும் திரவத்தை காய்ச்சல் பாதித்த நோயாளிகள் அதிகமாக பருக வேண்டும். 

வாயால் பருக இயலாதவர்களுக்கு, சிறை வழியாக மருத்துவமனையில் திரவங்களை ஏற்ற வேண்டும். 

காய்ச்சலை குறைக்க பாராசிடமால் மாத்திரை போதுமானது. 

குளிர்ந்த நீரை கொண்டு உடல் முழுவதும் ஒத்தடம் கொடுப்பது மிகுந்த நன்மை பயக்கும் 

டெங்கு ஒரு வைரஸ் நோயாதலால் இதற்கு ஆண்டிபயாடிக் மருந்துகள் அவசியம் இல்லை 

மேலும் ரத்த தட்டணுக்களை பாதித்து ரத்த போக்கை உருவாக்கும் வியாதியாதலால் தேவையற்ற ஊசிகளை தவிர்த்து விட வேண்டும்.

காய்ச்சல் ஏற்படின் மருத்துவரை அணுகவேண்டும் . அதைவிடுத்து மருந்தகங்களில் சுயமாக மருந்து மாத்திரைகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும் 

போலி மருத்துவர்களிடம் சென்று தேவையற்ற ஊசிகளை போட்டுக் கொள்வது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும். 

காய்ச்சல் இருப்பின் அருகில் இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையம் சென்று நில வேம்பு குடிநீர் வாங்கி பருக வேண்டும். 

மருத்துவர்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற சொன்னால் அதை உதாசீனப்படுத்தாமல் தங்கி உள்நோயாளியாக சிகிச்சை பெற வேண்டும் 

டெங்கு பரவுவதை எப்படி தடுப்பது ?? 
மிக மிக எளிது 

டெங்குவை பரப்பும் ஏடிஸ் கொசுவானது நல்ல நீரில் முட்டையிட்டு பொறிக்கக்கூடியது 

ஆகவே நம் வீட்டை சுற்றி நல்ல தண்ணீர் சேமித்து வைக்கும் சட்டி சாமான்களை மூடியிட்டு வைக்க வேண்டும் 

வீட்டை சுற்றி பழைய டயர் , காலி பாட்டில்கள், பேப்பர் கப்கள் , சிரட்டைகள் , இளநீர் கூடுகள்  எதையும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். 

டெங்கு கொசு முட்டையிட பத்து மில்லி நன்னீர் போதும் என்பதை கருத்தில் கொள்க 

தங்கள் வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியின் பின்புறம் சேரும் தண்ணீரிலும் அந்த கொசு முட்டையிட்டு வளரும். அதை கவனியுங்கள் 

தண்ணீர் சேமித்து வைக்கும் கலன்களை ப்ளீச்சிங் பவுடர் கொண்டு வாரம் ஒருமுறையேனும் தேய்த்து கழுவ வேண்டும் 

ஏடிஸ் கொசு பகல் நேரத்தில் மட்டுமே கடிக்கும் கொசு ஆதலால் நம் வீட்டை மட்டும் சுத்தமாக வைத்திருந்தால் பத்தாது.  

நம் பிள்ளைகள் பகலில் நேரத்தை செலவிடும் பள்ளிகள் , நாம் பணிபுரியும் அலுவலகங்கள் அனைத்தையும் டெங்கு ஏடிஸ் கொசு இல்லாத இடங்களாக பராமரிக்க வேண்டும். 

கடைசியாக 

தண்ணீரை கட்டாயம் காய்ச்சி பருக வேண்டும். 

மலம் கழித்த பின்னும், உணவு உண்ணும் முன்னும் கட்டாயம் கைகளை வழலை கொண்டு கழுவ வேண்டும் 

இந்த இரண்டு விசயங்களை கடைபிடித்தால் பல தொற்றும் நோய்கள் நமக்கு வருவதை தவிர்க்கலாம் 

டெங்கு வந்தபின் சிகிச்சை செய்வதை விடவும்
டெங்குவை  வருமுன் தடுப்பது மிக எளிது .இவ்வாறு மருத்துவர் பேசினார்.

No comments:

Post a Comment

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot