பெரம்பலூர் மாவட்ட அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தரமான முட்டைகளே வழங்கப்படுகின்றன என்றார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா.
தமிழகத்தில் நடைபெறும் ஊழல் பற்றி ஆதாரத்துடன் வெளியிடுங்கள் என்று நடிகர் கமல் தமிழக மக்களை அண்மையில் கேட்டுக் கொண்ட நிலையில், கடந்த 21 ஆம் தேதி பெரம்பலூர் நகரம், ஆலத்தூர், வேப்பந்தட்டை ஆகிய வட்டாரங்களில் உள்ள அங்கன்வாடி மற்றும் அரசுப் பள்ளிகளில், கமல் நற்பணி மன்ற மாவட்டத் தலைவர் முத்துக்குமார் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.
அப்போது அங்கு வைத்திருந்த அழுகிய முட்டைகளை புகைப்படமெடுத்து நடிகர் கமலுக்கு அனுப்பினராம். இதையடுத்து நடிகர் கமல் தனது டுவிட்டர் பக்கத்தில், "பெரம்பலூரில் அம்பலமான முட்டை ஊழல், இயக்கத்துக்குப் பெருமையே. எனினும் இயக்க வழக்குரைஞர்களின் ஆலோசனைப்படி செயல்படவும், சட்டமீறல் நம் தரப்பில் கூடாது' என்று செவ்வாய்க்கிழமை பதிவிட்டுள்ளார்.
இத் தகவல் ஊடகங்களில் வெளியானதைத் தொடர்ந்து பெரம்பலூர் முத்து நகர் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை மாலை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா பின்னர் அளித்த பேட்டி:
பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தைகளுக்கு அழுகிய முட்டைகள் வழங்கப்படவில்லை. முட்டைகள் தரமானவையா என்றறிய தண்ணீரில் போட்டு சோதித்த பின்னரே வேக வைத்து வழங்க சமையலர்களுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருப்பி அனுப்ப ஒதுக்கி வைத்திருந்த அழுகிய முட்டைகளை புகைப்படமெடுத்து அனுப்பியுள்ளனர் என்றார் ஆட்சியர். இதுகுறித்து கமல் நற்பணி மன்ற மாவட்டத் தலைவர் முத்துக்குமார் கூறுகையில், எங்களது ஆய்வின்போது குழந்தைகளுக்கு வழங்க வேக வைக்கப்பட்டிருந்த முட்டைகளையே புகைப்படமெடுத்தோம்.
இதுகுறித்த தகவலறிந்த மாவட்ட நிர்வாகம் கடந்த 2 நாள்களுக்கு முன் ஆய்வு செய்தனர். அப்போது அழுகிய முட்டைகள் இருந்தது தெரியவந்ததைத் தொடர்ந்து முட்டைகளை மாற்ற உத்தரவிட்டுள்ளனர் என்றார் அவர்.
No comments:
Post a Comment