இன்று நிகழும் சூரிய கிரகணத்தை, சென்னையில் 26 நிமிடம் பார்க்க முடியும். சூரிய கிரகணத்தை, வெறும் கண்களால் பார்க்கக் கூடாது என நாசா விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
சூரிய கிரகணம் என்றால் என்ன?
சூரிய கிரகணம் என்று சொன்னால் சூரியன், சந்திரன், பூமி இந்த மூன்றும் ஒரே நேர்க்கொட்டில் வருகின்றபொழுது சூரியனுடைய ஒளியானது பூமியை வந்தடையாது. இதைத்தான் முழு சூரிய கிரகணம் என்று சொல்கிறோம். இந்த நிகழ்வானது 7 நிமிடங்கள் 30 வினாடி சூரியன் மறைக்கின்ற நிகழ்வைப் பார்க்கலாம். இந்த சூரிய கிரகணமானது அமாவாசை அன்றுதான் வரும்.
சூரிய கிரகணம் என்று பார்த்தோமானால், முழு சூரிய கிரகணம் (முழுமையாக சூரியனை மறைக்கின்றது), பகுதி சூரிய கிரகணம், ஒரு பகுதி மட்டும் மறையக்கூடியது. அதாவது சந்திரன் என்பது ஒளி புகாப் பொருள். ஒரு பொருளை ஒளிக்கு முன்னால் வைத்தால் அது நிழலை ஏற்படுத்தும். சந்திரனானது நமது பூமியிலிருந்து கிட்டத்தட்ட 3 லட்சத்து 56 ஆயிரத்து 400 கி.மீட்டர் தூரத்தில் உள்ளது. இது நீள்வட்ட பாதையில் சுற்றி வருகிறது. இது சூரியனை நேர்க்கோட்டில் நிழலாக ஏற்படுத்தும். அந்த நிகழலின் நீளமானது 3,75,085 கி.மீட்டர் விட்டம். இதை இரு வகையாக எடுத்துக்கொள்ளலாம். ஒன்று அக நிழல் பகுதி, மற்றது புற நிழல் பகுதி. அக நிழல் பகுதி, 273 கி.மீ விட்டமுடையது. புற நிழல் பகுதி ஆறாயிரம் கி.மீ. விட்டமுடையது. இதனால்தான் 273 கி.மீ. அகலமுள்ள பாதையில் உள்ளவர்கள் முழு சூரிய கிரகணத்தைப் பார்க்க முடிகிறது. 6000 கி.மீ. அகலமுள்ள பாதையில் உள்ளவர்கள் பகுதி சூரிய கிரகணத்தை பார்க்கமுடிகிறது. பூமியில் பார்த்தால் 16 ஆயிரம் கிலோ மீட்டர் நீளத்திற்கு இந்த சூரிய கிரகணத்தின்போது மக்கள் பார்க்க வாய்ப்புள்ளது. 2009ல் நடைபெற்ற கிரகணத்தை பூமியில் 15,500 கி.மீ. நீளமுள்ள பகுதிகளில் வசித்த மக்களால் பார்க்க முடிந்தது.
சூரிய கிரகணம் ஏற்பட காரணங்கள் என்ன?
சூரிய கிரகணம் ஏற்படுவதற்கான காரணம் சூரியனது விட்டமானது பூமியின் விட்டத்தைப்போல் 109 மடங்கு அதிகமாக உள்ளது. அதேநேரத்தில் சூரியனானது சந்திரனைவிட கிட்டத்தட்ட 400 மடங்கு அதிக விட்டமுள்ளது. இத்தகைய ஒரு அமைப்பைக் கொண்டதன் காரணமாக சந்திரனானது சூரியனை முழுமையாக மறைக்கின்ற நிகழ்வு ஏற்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் 7 கிரகணங்கள் வருவதற்கான வாய்ப்புள்ளது. சில காலகட்டங்களில் அது 5 சூரிய கிரகணமாகவும், இரண்டு சந்திர கிரகணமாகவும் வருகின்றது. சில காலகட்டங்களில் 4 சூரிய கிரகணமும், 3 சந்திர கிரகணமும் வர வாய்ப்புள்ளது. சூரியன், சந்திரன், பூமி இந்த மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வருகின்றபோது தான் அது அமாவாசை தினமாகிறது.
ஒவ்வொரு அமாவாசையன்றும் கிரகணம் ஏற்படுமா?
பூமியானது நீள்வட்டப்பாதையில் சூரியனைச் சுற்றி வருகிறது. அதேபோல் துணைக்கோளான சந்திரனானது நமது பூமியையும் நீள் வட்ட பாதையில் சுற்றி வருகிறது. ஒரே தளத்தில் சுற்றாமல் கிட்டத்தட்ட 5.2 டிகிரி சாய்தளத்தில் சுற்றி வருவதன் காரணமாகத்தான் ஒவ்வொரு அமாவாசைக்கும் அந்த நிகழ்வு நடைபெறுவதில்லை. பூமி சுற்றி வருகிற தளமும் சந்திரன் சுற்றி வருகிற தளமும் இரண்டும் புள்ளிகளில் வெட்டுகிறது. இதைத்தான் வெட்டுபுள்ளி என்று கூறுகிறோம்.
இதிகாசங்களில் பார்த்தோமானால் ராகு, கேது என்று சொல்லுகிறோம். சந்திரனானது வடக்கிலிருந்து தெற்காக செல்லுகையில் கீழறக்கப் புள்ளி என்று கூறுகிறோம். இது தெற்கிலிருந்து வடக்காக செல்லுகையில் மேலிறக்கப் புள்ளி என்று கூறுகிறோம். சூரிய கிரகணம் நடக்க வேண்டுமென்றால் இந்த வெட்டுப்புள்ளி மிக அருகாமையில் இருந்தால் கிரகணங்கள் நடப்பதற்கான வாய்ப்புள்ளது. அதாவது சூரியன், சந்திரன், பூமி நேர்ப்பாதையில் இருக்கும்போதுதான் சூரிய கிரகணம் வரும். அதே நேரத்தில் சூரியன், பூமி, சந்திரன் என்று நேர்கோட்டில் இருந்தால் சந்திர கிரகணம் வரும். இந்த அமைப்பு சில கால கட்டங்களில்தான் நிகழ்கின்றது. கிட்டத்தட்ட 173.3 நாட்களுக்கு ஒரு முறை இந்த நிகழ்வு வருவதற்கான வாய்ப்புள்ளது. அதனால்தான் 1 ஆண்டில் பார்த்தோமேயானால் அமாவாசையானது 12 வந்தால் கூட இந்த கிரகணங்கள் குறைவாக வருகின்றன.
சூரிய கிரகணத்தை வெறும் கண்ணால் பார்த்தால் பாதிப்பா?
எப்போதுமே பகலில் நடக்கின்ற வானவியல் நிகழ்ச்சிகளை நாம் வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது. உதாரணமாக, நாம் வெளியே சென்றுவிட்டு உடனடியாக வீட்டிற்கு வரும்போது ஒரு கருப்பு நிறத்தை நாம்மால் உணரமுடியும். இதற்கு முக்கிய காரணம் நம் கண்ணில் கண்மணி என்ற ஒரு பகுதி உள்ளது. அது அதிகமாக வெளிச்சம் வரும்போது சுருங்கி குறைந்த வெளிச்சத்தையே நம் கண்ணினுடைய திரைக்கு கொடுக்கிறது. அதோபோல் குறைவான வெளிச்சம் வரும்போது அது விரிவடைந்து அதிகமான வெளிச்சத்தை கொடுப்பதன் காரணமாக நாம் எந்தவொரு பொருளையும் பார்க்க முடிகிறது. இந்த மாதிரி சூரிய கிரகணம் நேரத்தில் சூரியன் முழுமையாக மறைந்திருக்கின்றபோது சூரிய வெளிச்சம் குறைவாகவும் இருள் சூழ்ந்தும் காணப்படும். இந்த காலகட்டத்தில் நாம் விண்ணில் இருக்கக்கூடிய பிற பொருட்களைப் பார்க்கலாம்.
பெரும்பாலும் இதை மாலை அல்லது இரவுவில் தான் பார்க்க முடியும். ஆனால் 2009 ஜூலை 22-ல் நடத்த முழு சூரிய கிரகணத்தை பகலில் பார்க்க முடிந்தது. அதிகமாக வெளிச்சம் வருகின்ற போது நமது கண்ணிலுள்ள கண்மணி சுருங்குகின்ற தன்மை இல்லையெனில் அத்துணை ஒளியும் கண்ணில் போய் நம் கண்ணின் ஒளித்திரை எரிந்து போவதற்கான வாய்ப்புள்ளது. அதனால்தான் சூரிய கிரகணத்தின்போது கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது என்கிறோம். இதையே சூரிய வடிகட்டி மூலமாக பார்க்கலாம்.
கிரகணத்தின்போது சாப்பிடலாமா?
கிரகணத்தின்போது சாப்பிடக்கூடாது, உணவு கெட்டுப்போய்விடும் என்ற நம்பிக்கை நம்மிடம் உள்ளது. உதாரணமாக, அன்றாட வாழ்க்கையில் சூரியன் மாலையில் சென்று அதிகாலையில் தான் வருகிறது. இந்த சமயத்தில் நாம் உணவை உட்கொள்கிறோம். அறிவியல் வளர்ச்சியடையாமல் இருந்தபோது மனிதனை மனிதன் அடிமையாக்க வேண்டும் என்பதற்காக பல கட்டுக்கதைகள் இருந்தன. இதனை 1999 ஆகஸ்ட் 11 ஆம் தேதி நடைபெற்ற முழு சூரிய கிரகண நேரத்தில் தண்ணீரினுடைய தன்மை மாறுபடுகிறதா? என்பதை சென்னை கிங் இன்ஸ் டியூட் என்கிற நீர் ஆய்வு மையத்தில் நடத்தப்பட்ட நீர் மாதிரி ஆய்வில் நீரின் தன்மையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்பது நிரூபணமானது. அதேபோன்று கல்கத்தாவில் உள்ள டைமண்ட் ஹார்பரில் முழு சூரிய கிரகணம் ஏற்பட்டபோது மகப்பேறு நிலையில் உள்ள ஒரு பெண்மணியை வைத்து சோதனை செய்தபோது அவர்களுக்கு எந்தவிதமான தாக்கமும் இல்லை என்பது நிரூபணமானது. ஆகவே, கிரகணத்தன்று சாப்பாடு கெட்டு போகாது.
அமாவாசையன்று கடலின் வேகம் அதிகரிக்க காரணம்?
சூரியனது ஈர்ப்பு விசை, சந்திர ஈர்ப்பு விசை இரண்டும் கூட்டுத்தொகையாக சேரும் போது கடலின் ஈர்ப்பு அதிகரித்து அலை அதிகமாக எழுகிறது. இதனால்தான் கடலின் ஈர்ப்பு சக்தி அதிகமாகின்றன.
இந்தியாவில் வந்துள்ள சூரிய கிரகணங்கள்?
ஒவ்வொரு ஆண்டும் பார்த்தோமேயானால் முழு சூரிய கிரகணமானது 1980 பிப்ரவரி 16, 1995 அக்டோபர் 24, 1999 ஆகஸ்ட் 11,. 2009 ஜூலை 22, 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் தேதி வந்துள்ளது. பகுதி சூரிய கிரகணம் அடிக்கடி வருவதையும் நாம் பார்க்கிறோம். நடப்பாண்டில் 2 சூரிய கிரகணங்கள் ஏற்பட உள்ளது. அதன் முதல் சூரிய கிரகணம் நாளை திங்கள்கிழமை நிகழ்கிறது.
இந்திய நேரப்படி நாளை இரவு 9 மணிக்கு இந்த சூரிய கிரகணம் ஏற்படும். ஆனால் நம்மால் இதை பார்க்க முடியாது. அமெரிக்காவில் சுமார் 3 நிமிடங்கள் வரை இந்த கிரணம் நீடிப்பதால் முழுமையாக இருள் சூழ்ந்துவிடும்.
இந்த நிகழ்வு அமெரிக்காவில் 14 மாகாணங்களில் முழுமையாக தெரியும் என நாசா தெரிவித்துள்ளது. இதனால் அமெரிக்காவில் முழுப் பகலும் இரவாக காட்சியளிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சூரிய கிரகணம், ஆசியா, தென் அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் புகுதி அளவு தெரியும் என தெரிகிறது.
உலகம் முழுவதும் உள்ள 30 கோடி மக்கள் இந்த கிரகணத்தைப் பார்க்க முடியும் என்கிறது நாசா. மேலும் இந்த கிரகணத்தை வெறும் கண்ணால் பார்க்க கூடாது என்றும் அதற்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ள சூரிய ஒளி தடுப்பு கண்ணாடிகளால் மட்டுமே காண வேண்டும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சூரிய கிரகணத்தைப் படம்பிடித்து நேரலையில் காண்பிக்க 80 ஆயிரம் அடி உயரத்தில், கேமரா பொருத்தப்பட்ட 50 பலூன்களை அமெரிக்க விஞ்ஞானிகள் பரக்கவிட்டுள்ளனர். முதல் முறையாக இந்தக் காட்சி ஆன்லைனில் நேரலையாக ஒளிபரப்பாக இருக்கிறது. இதேபோன்ற முழு சூரிய கிரகணம் 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2 ஆம் தேதி ஏற்படவுள்ளது.