ஈரோட்டில் இன்று மாலை ஏ.ஈ.டி.பள்ளி வளாகத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடக்கிறது. இதில் சபாநாயகர் தனபால், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல் -அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.
நூற்றாண்டு விழா பணிகள் நடைபெறுவதை பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் ஆகியோர் பார்வையிட்டனர்.
அப்போது அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:-
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் 15 ஆயிரம் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வழிகாட்டு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி மாணவர்களை சிறந்த கல்வியாளர்களாக மாறுவதற்கான நிகழ்ச்சியாக அமையும்.
மாணவர்கள் அனைத்து போட்டி தேர்வுகளையும் சிறப்பாக எதிர்கொண்டு வெற்றிபெறும் வகையில் தமிழ்நாடு முழவதும் 412 பயிற்சி மையங்கள் அமைக்கப்படும். நேற்று மாலை 3.30 மணி யளவில் அரசு ஊழியர்களின் நிர்வாகிகள் கோட்டையில் முதல்- அமைச்சரை சந்தித்தனர்.
இதையடுத்து இன்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகளுடன் மீண்டும் முதல்வர் பேச்சு வார்த்தை நடத்த உள்ளார். இந்த பேச்சுவார்த்தை சுமூக உடன்பாடு ஏற்பட்டு நிறைவு பெறும் வகையில் அமையும்.
இதையொட்டி முதல்அமைச்சருக்கு ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நன்றி கூறும் நிகழ்ச்சியும் நடைபெறும்.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.