சிறப்பாக பணியாற்றிய 511 ஆசிரியர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் சீர்மிகு ஆசிரியர் விருதுகளை ஊரகத்தொழில் துறை அமைச்சர் பா.பெஞ்சமின் வழங்கினார்.தமிழ்நாடு ஆசிரியர் சங்கத்தின் 11-வது ஆண்டு விழா மற்றும் சிறந்த ஆசிரியர்களுக்குசீர்மிகு ஆசிரியர் விருது வழங்கும் விழா பெரவள்ளூரில் சனிக்கிழமை நடைபெற்றது. ஆசிரியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பி.கே.இளமாறன் தலைமையில் நடந்த இந்த விழாவில் ஊரகத் தொழில் துறை அமைச்சர் பா.பெஞ்சமின் கலந்துகொண்டு 511 ஆசிரியர்களுக்கு சீர்மிகு ஆசிரியர் விருதையும், கல்வி உட்பட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய 30 பேருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதையும் வழங்கினார். சுங்கம்மற்றும் கலால் இணை ஆணையர் கோ.கோமதி வாழ்த்திப் பேசினார்.ஆசிரியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஏ.அர்ச்சுனன், மாநில பொருளாளர் ஜி.சாந்தி, மாநில துணைத்தலைவர்கள் ஆர்.மைதிலி, இ.மணி, உள்ளிட்ட நிர்வாகிகள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
முன்னதாக நடைபெற்ற மாநில பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள் வருமாறு:6-வது ஊதியக்குழுவில் ஏற்பட்ட ஊதிய முரண்பாடுகளை களைந்து இடைநிலை ஆசிரியர்களுக்கும், முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கும் புதிய ஊதியம் நிர்ணயிக்க வேண்டும். 7-வது ஊதியக்குழு பரிந்துரை நடைமுறைப்படுத்தப்பட்ட 1.1.2016 முதல் 1.9.2017 வரையிலான காலத்துக்கு பணப்பயனாக 21 மாத நிலுவைத்தொகை வழங்க வேண்டும். மாநில பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும் வரை நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஒரே அரசாணை மூலம் 2011-ல் பணியமர்த்தப்பட்ட 3 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களில் சான்றிதழ் சரிபார்ப்பு காலதாமதம் என்று கூறி தகுதித்தேர்வு எழுத வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள சிறப்பு ஆசிரியர்களுக்கு (கணவனால் கைவிடப்பட்டோர், கலப்பு திருமணம் செய்தோர், விதவைகள், ஆதி திராவிடர், முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள்) தகுதித்தேர்விலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
அதேபோல், 23.10.2010-க்குப் பிறகு பணியமர்த்தப்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் தகுதித்தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.