இனிமேல் ஆண்டுதோறும் தகுதித்தேர்வு நடத்தப்படும்: வெயிட்டேஜ் முறை அடிப்படையிலேயே தொடர்ந்து ஆசிரியர் நியமனம் - கல்வி அமைச்சர் தலைமையில் நடந்த உயர்நிலைக்குழு கூட்டத்தில் முடிவு. - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Wednesday, 10 January 2018

இனிமேல் ஆண்டுதோறும் தகுதித்தேர்வு நடத்தப்படும்: வெயிட்டேஜ் முறை அடிப்படையிலேயே தொடர்ந்து ஆசிரியர் நியமனம் - கல்வி அமைச்சர் தலைமையில் நடந்த உயர்நிலைக்குழு கூட்டத்தில் முடிவு.

தற்போது பின்பற்றப்பட்டுவரும் வெயிட்டேஜ் முறை அடிப்படையிலேயே பட்டதாரி ஆசிரியர், இடைநிலை ஆசிரியர் நியமனங்களைத் தொடர்ந்து மேற்கொள்வது என்றும், ஆண்டுதோறும் தகுதித்தேர்வு நடத்துவது என்றும் பள்ளிக்கல்வி அமைச்சர் தலைமையில் நடந்த உயர்நிலைக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.


தற்போது அரசு பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்களும், இடைநிலை ஆசிரியர்களும் வெயிட்டேஜ் முறையில் தேர்வு செய்யப்படுகிறார்கள். இம்முறையில், தகுதித்தேர்வு, பிளஸ் 2 தேர்வு, பட்டப் படிப்பு, பிஎட் (இடைநிலை ஆசிரியர் எனில் ஆசிரியர் பயிற்சி தேர்வு) ஆகியவற்றுக்கு குறிப்பிட்ட மதிப்பெண் நிர்ணயிக்கப்பட்டு அதன் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படும்.கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு படித்து முடித்தவர்கள் வெயிட்டேஜ் முறை நியமனத்தால் பாதிக்கப்படுவதாகவும், எனவே, தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள்.

இதைத்தொடர்ந்து, இதுகுறித்து ஆராய்வதற்காக பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அதில், ஆசிரியர் தேர்வு வாரியத் தலைவர் பள்ளிக்கல்வி இயக்குநர், தொடக்கக்கல்வி இயக்குநர், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

வெயிட்டேஜ் முறை தொடரும்

இந்த நிலையில், வெயிட்டேஜ் முறையில் தரவரிசை தயாரிப்பது தொடர்பான உயர்நிலைக்குழு கூட்டம் பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் சென்னையில் கடந்த 2-ம் தேதி நடைபெற்றது.

அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள்:

* கடந்த 30.5.2014 அன்று வெளியிடப்பட்ட அரசாணையின்படி, வெயிட்டேஜ் முறையையும், 6.2.2014-ல் வெளியிடப்பட்ட அரசாணையின்படி,தகுதித்தேர்வு தேர்ச்சியில் இடஒதுக்கீட்டுபிரிவினருக்கு (எஸ்சி, எஸ்டி, பிசி, எம்பிசி, டிஎன்சி மற்றும் மாற்றுத்திறனாளிகள்) வழங்கப்பட்டு வரும் 5 சதவீத மதிப்பெண் சலுகையை (ஆசிரியர் தகுதித்தேர்வில் 150-க்கு 82 மதிப்பெண் எடுத்தால் தேர்ச்சி) தொடர்ந்து கடைபிடிக்கலாம்.ஆண்டுதோறும் தகுதித் தேர்வு

* கடந்த 15.11.2011 வெளியான அரசாணையின்படி, தகுதித்தேர்வை ஆண்டுதோறும் குறிப்பிட்ட காலவரையறைக்குள் நடத்தப்பட வேண்டும்.

* தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வழங்கப்படும் தேர்ச்சி சான்றிதழ் 7 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்என்பதால் அதன் அடிப்படையிலான தரவரிசைப் பட்டியலில் உள்ள தேர்வர்களின் பெயர் 7 ஆண்டுகளுக்குப் பிறகு நீக்கப்படும்.

* தேர்வர்கள் தங்கள் கல்வித்தகுதியைப் பொறுத்தவரையில் மதிப்பெண்களை உயர்த்திக்கொள்ள வழிவகை இருப்பதால் அதன்படி தரவரிசைப் பட்டியல் மாறுதலுக்கு உட்பட்டது ஆகும்.

மதிப்பெண்ணை உயர்த்தலாம்

* 15.11.2011-ல் வெளியிடப்பட்ட அரசாணையின்படி, தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் மீண்டும் தேர்ச்சி பெறுவதற்கும், அதேபோல், ஏற்கெனவே தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் தேர்வெழுதி மதிப்பெண்களை உயர்த்திக்கொள்வதற்கும் வழிவகை செய்யப்பட்டிருப்பதாலும், ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படும் தகுதித்தேர்வு முடிவின் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும்.

* வரும் காலத்தில் தேர்வர்களின் விண்ணப்பத்தில் குறிப்பிடப்படும் மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கலாம்.இதனால், அனைவரின் கல்விச்சான்றிதழ்களைத் தரவரிசைப் பட்டியலுக்காக சரிபார்க்கும் அவசியம் எழாது. பணிநியமனத்தின்போது சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும்.

* பள்ளிக்கல்வி இயக்குநரின் கருத்துருவில் தெரிவிக்கப்பட்டுள்ள, தகுதித்தேர்வு தேர்ச்சிக்குப் பிறகு மீண்டும் ஒரு போட்டித்தேர்வு நடத்துவது (ஆந்திராவில் இம்முறை பின்பற்றப்படுகிறது) என்பது அவசியமற்றதாக கருதப்படுகிறது.ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ள அரசாணைகளின்படி, கல்வித்தகுதி, இடஒதுக்கீடு, தகுதித்தேர்வில் தேர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர்களைத் தேர்வுசெய்யலாம்.

* ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதன் அடிப்படையிலோ அல்லது தரவரிசைப்பட்டியலில் தங்கள் பெயர் இடம்பெற்றிருக்கிறது என்ற அடிப்படையிலோ தேர்வர்கள் அரசு வேலைக்கு உரிமை கோர இயலாது.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது குறித்து பள்ளிக்கல்வித் துறையின் முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் உயர்நிலைக்குழு உறுப்பினர்களுக்கு தகவல் அனுப்பியுள்ளார்.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot