ஜாக்டோ ஜியோ செய்தி தொடர்பாளர் திடீர் மயக்கம்.. 3வது நாளாக தொடரும் உண்ணாவிரதத்தில் பரபரப்பு - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Wednesday, 13 June 2018

ஜாக்டோ ஜியோ செய்தி தொடர்பாளர் திடீர் மயக்கம்.. 3வது நாளாக தொடரும் உண்ணாவிரதத்தில் பரபரப்பு

சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், சென்னையில் ஜாக்டோ, ஜியோ அமைப்பினரின் உண்ணாவிரத போராட்டம் இன்று 3-வது நாளாக நீடிக்கிறது.
இதில் கூட்டமைப்பின் மாநில செய்தி தொடர்பாளர் கே. தியாகராஜனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேபோல, 10-க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்ததால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.

15 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி எழிலக வளாகத்தில் நேற்று முன்தினம் 200-க்கும் மேற்பட்ட அரசு ஊழிய8ரகள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். தமிழக அரசு தங்களை அழைத்து இதுவரை பேச மறுத்து வருவதை கண்டித்தும், உடனடியாக தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற அழைத்து பேச வேண்டும் என்றும் கோரி, இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.

நேற்றைய 2-வது நாள் போராட்டத்தின்போது, உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த நிர்வாகிகளுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆதரவு தெரிவித்தார். அதேபோல, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அரசு ஊழியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் நேற்றைய தினம் கேட்டுக் கொண்டார். 2-வது நாளான நேற்று, 2 ஊழியர்கள் திடீரென மயங்கி விழுந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இந்நிலையில் இன்று 3-வது நாளாக உண்ணாவிரதம் நீடித்து வருகிறது. இந்த போராட்டத்தின்போது ஜாக்டோ ஜியோ மாநில செய்தி தொடர்பாளர் கே. தியாகராஜனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதேபோல, 10-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்களும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பல ஊழியர்கள் மயக்க நிலைக்கு செல்லும் உள்ளதாக கூறப்படுகிறது. எனினும் அரசு இதுவரை தங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க மறுத்து வருவதுடன், சட்டமன்ற கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், தங்களை அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனை அளிப்பதாகவும் அக்கூட்டமைப்பினர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

முதல்வரும், அமைச்சர்களும் இதே வழியாகத்தான் தினமும் செல்கிறார்கள். ஆனால் தங்களை அழைத்து பேச அவர்களுக்கு மனமில்லாமல் கொஞ்சமும் மனிதாபிமானம் இல்லாமல் நடந்துகொள்வது வேதனையாக உள்ளதாகவும், இதே நிலை நீடித்தால் போராட்டத்தை வேறு வடிவத்தில் தீவிரப்படுத்துவதை தவிர தங்களுக்கு வேறு வழியில்லை என்றும் தெரிவித்தனர்.

ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 3-வது நாள் உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்று பல்வேறு அரசியல் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். எந்த போராட்டத்தையும் தமிழக அரசு கண்டுகொள்ளாது, எந்த ஒரு கருணையையும் தற்போது உள்ள அரசிடம் எதிர்பார்க்கவும் முடியாது என்று தெரிவித்துள்ள டிடிவி தினகரன், ஜியோ அமைப்பினரின் உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
அதேபோல, மக்கள் போராட்டங்களை காவல்துறையின் அச்சுறுத்தல், அடக்குமுறையால் அடக்க முடியாது என்று கூறியுள்ள தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர், அரசு ஊழியர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot