வழிகாட்டுதல் இன்றி புதிய பாடத்திட்டத்தை நடத்துவது எப்படி?- அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கேள்வி; விரைந்து பயிற்சி அளிக்க கோரிக்கை - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Tuesday, 12 June 2018

வழிகாட்டுதல் இன்றி புதிய பாடத்திட்டத்தை நடத்துவது எப்படி?- அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கேள்வி; விரைந்து பயிற்சி அளிக்க கோரிக்கை

1, 6, 9, 11-ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டத்தின் படி புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டு வரும் சூழலில் ஆசிரியர்களுக்கு உரிய வழிகாட்டுதல் பயிற்சி ஏதும் அளிக்கப்படவில்லை.
புதிய பாடத்திட்டத்தை எதிர்கொள்ளும் ‘ஹேன்ட் புக்’ எனப்படும் கைப் புத்தகமும் இதுவரையில் வழங்கப்படவில்லை என்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.கல்வித் துறையில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டு வரும் அரசு, நடப்புக் கல்வியாண்டு முதல் புதிய பாடத் திட்டத்தின் கீழ், 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு புதிய புத்தகங்களை தற்போது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கி வருகிறது.

புதியதை வரவேற்கிறோம்

புதிய பாடத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட புத்தகங்கள் குறித்து விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:மத்திய பாடத்திட்டத்துக்கு இணையான வகையில் புத்தகங்கள் உருவாக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. மொழிப்பாடத்தை ஒரு தாளாக மாற்றியுள்ளனர்.

மாணவர்களுக்கு உதவும்

இனிக்கும் இலக்கணம், இயற்கை வேளாண்மை, புறநானூறு குறித்த பாடத் தொகுப்புகள் அடங்கியுள்ளதால், மாணவர்களுக்கு மொழிப்பாடத்தில் சிரமம் இருக்க வாய்ப்பில்லை.இது தவிர உயர் கல்விக்கான வாய்ப்புகள், வேலைவாய்ப்புக்கான பாடப் பிரிவுகள், பாடம் தொடர்பான இணையதள முகவரிகள், க்யூஆர் கோடு (QR Code) கொடுக்கப்பட்டு, படத்தில் உள்ளவற்றின் விவரங்களை ஸ்மார்ட் போன் ஆப் மூலம் அறியும் வசதி போன்று அம்சங்களும் பாடப்புத்தகத்தில் இடம்பெற்றிருப்பது மாணவர்களை அவர்களுக்கு விருப்பமான துறையை தேர்வு செய்வததற்கு இப்போதே தயார்படுத்துவதற்கான வகையில் உள்ளது.கணிதம், அறிவியல் பாடங்கள் சற்று கடினமாகவே உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை.

கைப் புத்தகம் என்ன ஆனது?

மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வழங்கி வரும் நிலையில், அவர்களுக்கு பாடம் நடத்தக்கூடிய எங்களுக்கு கைப் புத்தகம் (Hand Book) வழங்கப்படாதது வருத்தமளிக்கிறது.பாடத்திட்டம் புதிது என்ற வகையில், நாங்கள் முதலில் பாடம் குறித்து அறிந்து, புரிந்த பின்னரே, மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியும். எனவே முதற்கட்டமாக பாடப் புத்தகங்களை வழங்குவதோடு, ஆசிரியர்களுக்கான பயிற்சியும் அளிக்க வேண்டும்.சமூக அறிவியல் பாடத்தில் ஒரு பருவத்துக்கு 12 பாடங்கள் உள்ளன. இந்த 12 பாடங்களை எதிர்வரும் காலாண்டுக்குள் முடிப்பது கடினமானது. புதிய பாடத்திட்டத்தின் கீழ் பாடங்களை மாணவர்கள் புரிந்து கொள்வது கடினமாக இருக்கும் சூழலில் பாடங்களை குறைத்திருக்கலாம என்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

ஆசிரியர்களுக்கு பயிற்சி

புதிய பாடத்திட்டங்கள் தொடர்பாக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பது குறித்து விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.முனுசாமியிடம் கேட்டதற்கு, “பள்ளிகளுக்கு பாடப் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டு புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.ஆசிரியர்களுக்கு மாநிலக் கல்வியியல் ஆணையம் மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில் பயிற்சி அளிக்கத் தயாராக உள்ளோம். ஆனால் தற்போது ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு ஜூன் 20-ம் தேதி வரை நடைபெற இருப்பதால், பயிற்சி அளிக்க இயலாத சூழல் உள்ளது. கலந்தாய்வு முடிந்த பின்னரே ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்” என்றார்.

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot