வரும் கல்வியாண்டு முதல் பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே மாணவர்களுக்கு லேப்டாப் மற்றும் சைக்கிள்கள் வழங்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
கோபி நகர்மன்ற பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழாவில் பங்கேற்ற பின் அமைச்சர் செய்தியாளா்களிடம் பேசினார். அப்போது பேசிய அவர், தமிழகத்தில் 11 லட்சத்து 11,000 சைக்கிள்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. வரும் ஜனவரி மாதம் 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு மாணவ - மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் என்றார். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை சீருடைகள் மாற்றியமைக்கப்பட உள்ளதாக கூறிய அவர், இதில் அரசே 4 சீருடைகள் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கும் என்றார்.
ஆசிரியர்கள் இடம் மாறுதல் கலந்தாய்வில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை. தமிழக அரசு தற்போது தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டு வருகிறது. ஜனவரி மாதம் முதல் 628 பள்ளிகளில் ரூ.20 லட்சம் மதிப்பில் அறிவியல் ஆய்வகம் உருவாக்கப்படும். மேலும் 9 ,10, 11, 12 ஆகிய வகுப்புகள் வரும் ஜனவரி மாதம் முதல் முற்றிலும் கணினிமயமாக்கப்பட்டு இணையதள வசதிகள் செய்து கொடுக்கப்படும் என கூறினார்.
வரும் கல்வி ஆண்டு முதல் பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே இலவச புத்தகங்கள் வழங்கப்படும். அதுபோலவே பள்ளி திறக்கும் முதல் நாளிலேயே இலவச சைக்கிள், மடிக்கணினி வழங்கப்படும் என கூறினார். மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், பள்ளிக்கு வெள்ளி கொலுசுகளை மாணவிகள் அணிந்து வந்தால் கவன சிதறல் ஏற்படும் என்றார். கடந்த சில ஆண்டுகளாக 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகளுக்கு 3242 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டது. தற்போது புதியதாக 750 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது என கூறினார்.
No comments:
Post a Comment