மழலையர் பள்ளிகளில் சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்! - Kalviseithi plus
Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Post Top Ad

Your Ad Spot

Comments

Wednesday 23 January 2019

மழலையர் பள்ளிகளில் சிறப்புப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்!

தமிழ்நாட்டில் உள்ள அங்கன்வாடி மையங்களில் மழலையர் வகுப்புகளைத் தொடங்கும் திட்டத்தின்படி, முதற்கட்டமாக 2381 மையங்களில் மழலையர் வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன.

எனினும், இப்பள்ளிகளில் பாடம் கற்பிக்க சரியான ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால், அங்கன்வாடி மையங்களில் மழலையர்  வகுப்புகள் எதற்காக தொடங்கப்பட்டனவோ, அந்த நோக்கம் நிறைவேறாமல் போதும் ஆபத்து உள்ளது.

அரசு பள்ளிகளில் மழலையர் வகுப்புோகளைத் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக எழுப்பப்பட்டு வருகிறது. அண்மைக்காலங்களில் அரசு பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை வேகமாக குறைந்து வருவதைத் தடுக்கும் வகையிலும், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் வகையிலும் அங்கன்வாடிகளில் மழலையர் பள்ளிகளை தொடங்க தமிழக அரசு தீர்மானித்திருக்கிறது. முதற்கட்டமாக 2381 அங்கன்வாடி மையங்களில் இரு நாட்களுக்கு முன் மழலையர் வகுப்புகள்  தொடங்கப் பட்டுள்ளன. அரசு பள்ளிகளை வலுப்படுத்த உதவும் என்பதால் இந்த முயற்சி வரவேற்கத்தக்கதாகும்.

அதேநேரத்தில், மழலையர் பள்ளிகளின் ஆசிரியர்களாக இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்ற அறிவிப்பு தான் கவலையளிக்கிறது. காரணம்.... மழலையர் வகுப்புகளுக்கும், இடைநிலை  வகுப்புகளுக்கும் பாடம் கற்பிக்கும் முறை முற்றிலும் மாறுபட்டதாகும். ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரையிலான இடைநிலைப் பள்ளி மாணவர்களுக்கு பாடத்தை மட்டும் கற்பித்தால் போதுமானது. ஆனால், மழலையர் வகுப்புகளை அது போன்று கையாண்டு விட முடியாது. மழலையர் வகுப்புகள் மாண்டிசோரி கல்வி முறையில் நடத்தப்பட வேண்டும். தமிழக அரசும் இதை ஒப்புக்கொண்டு புதிதாக தொடங்கப்பட்டுள்ள மழலையர் வகுப்புகள் மாண்டிசோரி முறையில் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.

மாண்டிசோரி முறையில் மழலையர் வகுப்புகள் நடத்தப்படும் என்று அரசு அறிவித்து விட்டு, அதற்காக இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பது பொருத்தமற்றதாகும். இத்தாலியைச் சேர்ந்த மரியா மாண்டிசோரி என்ற மருத்துவர் தான் குழந்தைகள் குறித்து பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு மாண்டிசோரி கல்வி முறையை உருவாக்கினார். ‘‘கல்வி என்பது, ஒரு தனி மனிதன் தன்னிச்சையாக முன்னெடுக்கும் இயற்கைச் செயல்பாடு. ஐம்புலன்கள் வழியாகவும் சுற்றுச்சூழலை அனுபவமாக உணரும்போதுதான், கற்கும் செயல்பாடு சாத்தியமாகும்’’ என்பது தான் மாண்டிசோரி கல்வி முறையின் அடிப்படை ஆகும்.

பொதுவாகப் பெரியவர்கள் நினைப்பதுபோலக் குழந்தைகள் புதிய விஷயங்களைக் கற்கிறோம் என்று உணர்ந்து கொள்வதில்லை. ‘ஒரு விஷயத்தைக் கற்றுக்கொள்கிறோம்' என்ற உணர்வு இல்லாமல்தான், புதிய புதிய விஷயங்களைக் குழந்தைகள் கற்றுக் கொள்கின்றனர். அவர்களுக்கு கட்டாயப்படுத்தி கல்வி வழங்க முடியாது. ஆடுவது, பாடுவது, திறந்தவெளியில் விளையாடுவது, கருவிகளைக் கொண்டு விளையாடுவது போன்றவற்றின் மூலம் தான் மாண்டிசோரி முறையில் கற்பிக்கப்படுகிறது. வகுப்பறையில் ஒரு குழந்தை தனக்கு விருப்பமானதைத் தேர்ந்தெடுத்து விளையாடலாம். தூங்க நினைத்தால் தூங்கலாம். இந்த தத்துவங்களின் அடிப்படையில் குழந்தைகளை கையாள்வது இடைநிலை ஆசிரியர்களால் சாத்தியமல்ல. மாண்டிசோரி பயிற்சி பெற்ற ஆசிரியர்களால் தான் இது சாத்தியமாகும்.

அதுமட்டுமின்றி, மழலையர் வகுப்புகளுக்கு தாங்கள் மாற்றப்படுவதை இடைநிலை ஆசிரியர்களும்  விரும்பவில்லை. இதுகுறித்த அரசின் முடிவை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளனர். இடைநிலை ஆசிரியர்கள் உபரியாக இருக்கிறார்கள் என்பதற்காக அவர்களை மழலையர் வகுப்புகளுக்கு நியமிப்பது சரியான அணுகுமுறையாக இருக்காது. வேண்டுமானால், அவர்களை ஈராசிரியர் பள்ளிகளில் நியமிக்கலாம். மழலையர் வகுப்புகளுக்கு மாண்டிசோரி ஆசிரியர்களை நியமிப்பது தான் பொருத்தமாகும்.

மழலையர் வகுப்புகளை நடத்துவதில் சென்னை மாநாகராட்சி முன்னோடியாக திகழ்கிறது. 1997-98 ஆம் ஆண்டு முதல் சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் படிப்படியாகத் தொடங்கப் பட்டு இப்போது 200-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அந்த வகுப்புகளை நடத்த 160 மாண்டிசோரி ஆசிரியர்களும், 100 உதவியாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசின் புதிய ஆணையால், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு, அவர்கள் இடங்களிலும் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.

எனவே, மழலையர் வகுப்பு தொடங்கப்பட்டதன் நோக்கம் நிறைவேறும் வகையில், அனைத்து மழலையர் வகுப்புகளுக்கும் மாண்டிசோரி பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். மாநகராட்சிப் பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் மாண்டிசோரி ஆசிரியர்களை பணிநிலைப்பு செய்ய வேண்டும்.

1 comment:

Post Top Ad

Ad Unit Code:

Post Top Ad

Your Ad Spot